[X] Close

துலாம் - விகாரி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்


  • kamadenu
  • Posted: 11 Apr, 2019 09:49 am
  • அ+ அ-

-ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

துலாம் ராசி வாசகர்களே!

பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த தாயின் அருமை பெருமைகளை அறிந்த நீங்கள், தாய்நாட்டையும் நேசிப்பீர்கள். உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் கடின உழைப்பால் சாதிப்பீர்கள். மனப்போராட்டங்கள் ஓயும். சமயோஜிதமான பேச்சால் தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த பணம் கைக்கு வரும். பழைய கடனை எவ்வாறு அடைக்கப்போகிறோமோ என்று விழி பிதுங்கி நின்றீர்களே! இனி அதற்கான வழி வகைகள் கிட்டும்.

பிள்ளைகளிடம் அவ்வப்போது கோபப்பட்டீர்களே! இனி அரவணைத்துப் போவீர்கள். மகனுக்குத் திருமணம் தள்ளிக் கொண்டே போனதே! இப்பொழுது கூடி வரும். உங்கள் ராசிநாதன் சுக்ரன் ராசிக்கு 5-ம் வீட்டில் நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எதையும் சாதித்துக் காட்டும் மனவலிமை பிறக்கும். நாள்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை இனி கைக்கு வரும். கனிவான பேச்சால் காரியங்களை முடிப்பீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.

உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் சனியும் கேதுவும் முகாமிட்டிருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் முடங்கியிருந்த நீங்கள், விஸ்வரூபம் எடுப்பீர்கள். சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பிரபலங்கள் பட்டியலில் இடம்பிடிப்பீர்கள். உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உள்மனத்தில் தொக்கி நிற்கும் தாழ்வு எண்ணங்களைத் தூக்கி எறிவீர்கள்.

நகரின் எல்லையை ஒட்டியிருக்கும் பகுதியிலே நிலம், வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதை உணரும் சூட்சுமம் வரும். வெளிநாட்டிலிருப்பவர்கள், வேற்றுமாநிலத்தில் இருக்கும் நண்பர்களுடன் சேர்ந்து வியாபாரம் செய்யும் அமைப்பு உண்டாகும்.

வருடம் முழுக்க ராகுபகவான் ராசிக்கு 9-ம் வீட்டிலேயே தொடர்வதால் செலவினங்கள் அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகளைத் தவிர்க்கப் பாருங்கள். பிதுர்வழிச் சொத்தைப் பெறுவதில் சிக்கல்கள் வரக்கூடும். தந்தையாருடன் மனத்தாங்கல் வரும். அவருக்கு வீண் டென்ஷன், கணுக்கால், முழங்கால் வலி வந்து செல்லும். தந்தைவழி உறவினர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம்.

வருட ஆரம்பம் முதல் 18.05.2019 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு அதிசார வக்கிரமாகி 3-ம் வீட்டில் நிற்பதால் கடினமாக உழைத்து இலக்கை எட்டிப் பிடிப்பீர்கள். சுபச் செலவுகளும், பயணங்களும் அதிகரிக்கும். ஆனால், எதிர்பார்த்த வகைகளில் பணம் வரும். திருமணம், சீமந்தம் போன்ற அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். வெளிநாடு செல்வீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

மகனுக்கு பல இடத்தில் வரன் பார்த்தும் நமக்கு ஏற்ற சம்பந்தம் இல்லையே என வருந்தினீர்களே! இனி நல்ல வரன் அமையும். மகளின் கூடா நட்பு விலகும். லேசான தலைச்சுற்றல், சலிப்பு, முன்கோபம், சில காரியங்களில் தடைகள் வந்து செல்லும். உறவினர்கள் சிலர் நன்றி மறந்து பேசுவார்கள்.

19.05.2019 முதல் 27.10.2019 வரை குருபகவான் 2-ம் வீட்டிலேயே தொடர்வதால் குடும்பத்தில் அமைதி நிலவும். விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். பழைய கடனில் ஒரு பகுதியைத் தந்து முடிப்பீர்கள். ஆனால், 28.10.2019 முதல் 27.03.2020 வரை 3-ம் வீட்டுக்குக் குரு செல்வதால் அதுமுதல் காரியத் தடைகள் அதிகரிக்கும்.

முதல் முயற்சியிலேயே எந்த ஒரு வேலையையும் முடிக்க முடியாமல் இரண்டாவது அல்லது மூன்றாவது முயற்சியில் போராடி  முடிக்க வேண்டி வரும். தம்பி ஆதரவாக இருப்பார். பழைய நண்பர்களில் ஒரு சிலர் விலகுவார்கள். பணத்தட்டுப்பாடு அதிகரிக்கும். தவிர்க்க முடியாத செலவினங்களும் வந்து போகும். என்றாலும் தந்தைவழியில் உதவிகள் உண்டு. தந்தைவழி சொத்துகள் வந்து சேரும்.

thulam 2.jpg

வியாபாரிகளே! சரக்குகளை நிரப்பிவைத்தும் வாங்குவார் யாருமில்லை என்ற நிலை மாறும். இனி, சந்தை நிலவரங்களை விரல்நுனியில் வைத்துக் கொண்டு அதற்கேற்ப முதலீடு செய்வீர்கள். அறைகலன்கள், மருந்து, இரும்பு வகைகளால் ஆதாயம் உண்டு. அரசுக் கெடுபிடிகள் தளரும். வாடிக்கையாளர்களைத் திருப்திபடுத்த புதுச் சலுகைகளை அறிவிப்பீர்கள். அயல்நாட்டு வாய்ப்புகள் வந்தால் யோசித்து ஏற்பது நல்லது.

உத்தியோகஸ்தர்களே! எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்த்தும் உங்களைக் குறை சொல்லுவதற்கென்றே ஒரு கூட்டம் இருந்ததே! இனி அந்த நிலை மாறும். உங்களின் மதிப்பு மரியாதை கூடும். பழைய பிரச்சினைகளைக் கிளறிவிட்டு சிலர் வேடிக்கை பார்த்தார்களே! அதெற்கெல்லாம் முடிவு கட்டுவீர்கள். முக்கியக் கோப்புகளைக் கவனமாகக் கையாளுங்கள். அலுவலகச் சூழ்நிலை அமைதி தருவதாக இருக்கும். பதவி உயர்வையும் எதிர்பார்க்கலாம்.

பெண்களுக்கு: கேதுவும், சனியும் சாதகமாக இருப்பதால் கணவர் முழுச் சுதந்திரம் தருவார். சிலர் சொந்தத் தொழில் தொடங்குவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். மாமியார், மாமனார் வகையில் உதவிகள் கிடைக்கும். புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். சிலர் பழைய வீட்டை இடித்துக் கட்டுவீர்கள். நவம்பர் முதல் குரு சரியில்லாததால் கணவருடன் கொஞ்சம் மோதலும் வரும். நீங்களும் உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. இந்தப் புத்தாண்டு கொஞ்சம் போராட்டத்தைத் தந்தாலும் ஓரளவு அந்தஸ்தையும் அதிகப்படுத்தும்.

பரிகாரம்: அருகிலிருக்கும் முருகன் கோயிலுக்குச் செவ்வாய்க்கிழமைகளில் சென்று வணங்குவதுடன் கரும்புச் சாற்றைத் தானமாகக் கொடுங்கள். வெற்றி நிச்சயம்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close