[X] Close

விருச்சிகம் - விகாரி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்


  • kamadenu
  • Posted: 11 Apr, 2019 09:49 am
  • அ+ அ-

-ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

விருச்சிக ராசி வாசகர்களே!

ஆன்மிகம் முதல் அறிவியல் வரை அனைத்தையும் அறிந்து வைத்திருக்கும் நீங்கள், நியாயத்தின் பக்கம் நிற்பவர்கள். உங்கள் 9-வது ராசியில் இந்த ஆண்டு பிறப்பதால் பணவரவு உயரும். எதிர்ப்புகள் அகலும். கடன் பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்காக ஓயாமல் உழைப்பீர்கள். முகப்பொலிவு, ஆரோக்கியம் கூடும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். வாகனத்தை மாற்றுவீர்கள். பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள்.

நெடுநாளாக திட்டமிட்டுக் கொண்டிருந்தீர்களே, இப்போது உங்கள் ரசனைக்கேற்ப வீடு அமையும். உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். சூரியன் 6-ல் நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் முடங்கிப் போயிருந்த நீங்கள் சுறுசுறுப்பாவீர்கள். ஆட்சியாளர்களின் நட்பு கிடைக்கும். வழக்கில் வெற்றி கிடைக்கும். வேலை கிடைக்கும். பிள்ளைகளுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். அதிக வட்டிக் கடனை அடைப்பதற்குக் குறைந்த வட்டியில் எதிர்பார்த்த கடன் கிடைக்கும்.

இந்த ஆண்டு முழுக்க பாதச்சனி இருப்பதால் குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பிள்ளைகளை ஆரம்பத்திலிருந்தே இன்னும் கொஞ்சம் கண்டித்து வளர்த்திருக்கலாமென்று நினைப்பீர்கள். முரட்டுத் தனத்தை அன்பால் மாற்றுங்கள். கர்ப்பிணிப் பெண்கள் தொலைதூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. கண், காது வலி வந்து செல்லும். பல் ஈறு வலிக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினையை அறிவுப்பூர்வமாக அணுகுவது நல்லது. உடம்பில் சர்க்கரை அளவைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள். சில உண்மைகளை வெளியே சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் பெரும் அலைச்சலுக்குப் பிறகு முடியும்.

இந்த ஆண்டு முழுக்க கேது 2-ம் வீட்டிலும், ராகு 8-லும் தொடர்வதால் கடுகடுப்பாகப் பேசாதீர்கள். சில நேரம் நீங்கள் விளையாட்டாகப் பேசப் போய் அது விபரீதமாக முடியும். எந்த ஒரு விஷயத்திலும் இடைத்தரகர்களை நம்பிப் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்சினை வந்து போகும். இரவு நேரத்தில் தொலைதூரப் பயணத்தில் வாகனத்தை இயக்க வேண்டாம்.

விபத்துகள் நிகழக்கூடும். கண் பார்வையைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள். அவ்வப்போது எதிர்மறை எண்ணங்களும், தோல்வி மனப்பான்மையும் தலைத்தூக்கும். அநாவசியமாக அடுத்தவர்கள் விவகாரத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. வறட்டு கவுரவத்துக்கும், போலிப் புகழ்ச்சிக்கும் மயங்காதீர்கள்.

வருடத் தொடக்கம் முதல் 18.05.2019 வரை உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் குரு அதிசார வக்கிரமாகி இருப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆனால், செலவுகள் அடுத்தடுத்து இருக்கும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். உறவினர்களின் வருகையால் வீடு களைக் கட்டும். கோயில் கோயி லாக அலைந்தும் நமக்கு ஒரு வாரிசு கூட இல்லையே என வருந்திய தம்பதியர் களுக்குக் குழந்தைபாக்கியம் உண்டாகும். பிள்ளைகள் குடும்பச் சூழ்நிலையை உணர்வார்கள்.

மகளின் கல்யாணத்தை ஊரே மெச்சும்படி நடத்துவீர்கள். கடனாகவும், கைமாற்றாக வும் காசு புரட்டி புது வீடு கட்டிக் குடிபுகுவீர்கள். நேர் மறை எண்ணங்கள் பிறக்கும். மகனுக்கு வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்கும். எதிரும், புதிருமாகப் பேசிக்கொண்டிருந்த உறவினர்கள் தன் தவறை உணர்வார்கள். வெளிமாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். அக்காவுக்குக்கு இருந்த பிரச்சினைகள் நீங்கும்.

19.05.2019 முதல் 27.10.2019 வரை உங்கள் ராசிக்குள்ளே குரு அமர்ந்து ஜென்ம குருவாக இருப்பதால் பழைய பிரச்சினைகள் தலைதூக்கும். மஞ்சள் காமாலை, காய்ச்சல், காது வலி வரக்கூடும். சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைக் குடிப்பது நல்லது. லாகிரி வஸ்துக்களைத் தவிர்க்க வேண்டும். சிலர் உங்களைப் பற்றி அவதூறாகப் பேசுவார்கள். கௌரவக் குறைவான சம்பவங்கள் நிகழும். மற்றவர்களை நம்பிப் பெரிய முயற்சிகளில் ஈடுபடாதீர்கள்.

வீண் பழியும் வந்து நீங்கும். நீங்கள் நல்லதையே பேசினாலும் மற்றவர்கள் அதை வேறுவிதமாக அர்த்தம் கொள்வார்கள். 28.10.2019 முதல் 27.03.2020 வரை குருபகவான் உங்கள் ராசியை விட்டு விலகி 2-ம் வீட்டிலேயே அமர்வதால் குடும்பத்தில் நிலவிவந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வீர்கள். உங்களுக்குள் கலகத்தை ஏற்படுத்தியவர்களை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமையிலிருந்து விடுபடுவீர்கள். மருந்து மாத்திரைகளிலிருந்து விடுதலை கிடைக்கும்.

viruchigam 2.jpg

வியாபாரிகளே! மாவு விற்கப்போய் காற்று வந்ததுபோல, தொட்டதெல்லாம் நட்டமானதே! இரவு பகலாக உழைத்தும், ஆதாயம் பார்க்க முடியாமல் தவித்தீர்களே! இனி, தொலைநோக்குச் சிந்தனையுடன் முதலீடு செய்து லாபம் பார்ப்பீர்கள். கடையை வேறிடத்திற்கு மாற்றுவீர்கள். வேலையாட் களை நம்பித் தொழில் ரகசியங்களைச் சொல்லிக் கொடுக்காதீர்கள். வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். பர்னிச்சர், ஹோட்டல், லாட்ஜ், ஏற்றுமதி இறக்குமதி, நீசப்பொருட்களால் ஆதாயமடைவீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

உத்தியோகஸ்தர்களே! உங்களைக் குறை கூறிய மேலதிகாரி மாற்றப்படுவார். உங்கள் மேல் சுமத்தப்பட்ட பொய் வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் அமையும். அதிகாரிகளுடன் இருந்த மோதல் போக்கு நீங்கும். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.

பெண்களுக்கு: நவம்பர் மாதம் முதல் குரு சாதகமாக இருப்பதால் திடீர் யோகம், திருப்பம் உண்டாகும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். தோழிகள் மத்தியில் அந்தஸ்து உயரும். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். நாத்தனார், மச்சினர் மதிப்பார். சர்ப்ப கிரகங்களின் போக்கு சரியில்லாததால் கணவ ருடன் கருத்து மோதல்கள் வரக் கூடும். ஓய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். சின்ன சின்ன சிக்கல்கள், சுகவீனங்கள் இருந்தாலும் பெரிய சாதனைகளைப் படைக்கத் தூண்டும் வருடமிது.

பரிகாரம்: அருகிலிருக்கும் துர்க்கை அம்மன் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் சென்று வணங்குவதுடன் எலுமிச்சை சாற்றைத் தானமாகக் கொடுங்கள். எதிலும் வெற்றியுண்டு.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close