[X] Close

தனுசு - விகாரி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்


  • kamadenu
  • Posted: 11 Apr, 2019 09:49 am
  • அ+ அ-

-ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

தனுசு ராசி வாசகர்களே!

சேமித்து வைப்பதில் தேனீக்களைப் போலவும், செலவழிப்பதில் ஒட்டகத்தைப் போலவும் குணம் கொண்ட நீங்கள், சரியெனப் பட்டதையே செய்வீர்கள். புத்தாண்டு பிறக்கும் போது செவ்வாய் ராசிக்கு 6-ம் வீட்டில் நிற்பதால் தொட்டது துலங்கும். எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். பிரபலங்களால் சில வேலைகள் முடிவுக்கு வரும். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்பொழுது நிறைவேறும். வெளிநாடு சென்று வருவீர்கள்.

இழுபறியாக இருந்த பூர்வீகச் சொத்துப் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். உங்களுக்கு 8-வது ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். அவ்வப்போது பணப்பற்றாக்குறையும் வரும். என்றாலும் சமாளித்து விடுவீர்கள். அந்தரங்க விஷயங்களையெல்லாம் வெளியில் சொல்லி ஆறுதல் தேட வேண்டாம்.

இந்த ஆண்டு முழுக்க சனிபகவான் ராசியிலேயே அமர்ந்திருப்பதால், எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். வீடு வாங்குவீர்கள். சிலர் புதுமனை புகுவீர்கள். என்றாலும் ஜென்மச் சனியாகத் தொடர்வதால் உடல்நலம் பாதிக்கும். வாயுப் பதார்த்தங்கள், அசைவ, கார உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. செரிமானக் கோளாறு, வயிறு உப்புசம், அசதி, சோர்வு வந்து செல்லும். வழக்கை நினைத்துக் கவலையடைவீர்கள். தாழ்வுமனப்பான்மை உள்ளவர்களுடன் பழகிக் கொண்டிருக்காதீர்கள். உறவினர்களில் சிலர் உங்களைப் பார்த்தால் ஒரு பேச்சு, பார்க்காவிட்டால் ஒரு பேச்சு என்று நடந்துகொள்வார்கள்.

இந்த வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்குள்ளேயே கேதுவும், 7-ம் வீட்டிலேயே ராகுவும் இருப்பதால் முன்கோபம், மனத்தில் ஒருவித சஞ்சலம், எதிலும் ஆர்வமில்லாத நிலை, ஹார்மோன் பிரச்சினை, தலைச்சுற்றல் வந்துசெல்லும். இரும்பு, நார், சுண்ணாம்புச் சத்து அதிகமுள்ள காய், கனிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்சினைகள் வரக்கூடும்.

மனைவிக்கு மருத்துவச் செலவுகள், அவருடன் மோதல்கள் வந்து போகும். மனைவிவழி உறவினர்களுடன் உரிமையாகப் பேசிப் பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீகள். நீங்கள் யாரையும் மதிக்கவில்லை என்றெல்லாம் சிலர் குறைக் கூறுவார்கள். ஏமாற்றப்படபடுவோமோ என்று கலங்குவீர்கள். காலத்தை வீணடித்துவிட்டதாகவும் நினைப்பீர்கள். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிட்டுக் கொள்ளாதீர்கள். மற்றவர்களைச் சார்ந்து இருக்க வேண்டாம். முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாகச் சென்று செய்வது நல்லது.

வருடம் பிறக்கும் போதிலிருந்து 18.05.2019 வரை குருபகவான் அதிசார வக்கிரமாகி உங்கள் ராசியில் ஜென்ம குருவாக நீடிப்பதால் அடுக்கடுக்காக வேலையிருந்து் கொண்டேயிருக்கும். வருங்காலத்தைப் பற்றிய பயம் வந்து நீங்கும். நல்ல வாய்ப்பையெல்லாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் விட்டுவிட்டோமே என்று சில நேரம் புலம்புவீர்கள். பித்தத்தால் தலைசுற்றும். வாயுக்கோளாறால் வயிறு, நெஞ்சு வலிக்கும். வீட்டிலும், வெளியிலும் சிலர் உங்களைப் புறக்கணிப்பது போலத் தோன்றும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். நகையை வங்கிப் பெட்டகத்தில் வைத்துப் பாதுகாப்பது நல்லது.

19.05.2019 முதல் 27.10.2019 வரை குரு உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் நிற்பதால் திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். வறட்டு கௌரவத்திற்காகச் சேமிப்புகளைக் கரைத்துக் கொண்டிருக்காமல் அத்தியாவசியச் செலவுகளை மட்டும் செய்யப் பாருங்கள். நீண்ட நாளாகச் செல்ல வேண்டுமென நினைத்திருந்த கோயில்களுக்குக் குடும்பத்தாருடன் சென்று வருவீர்கள்.

திடீரென்று அறிமுகமாகுபவர்களிடம் உங்கள் குடும்பத்தினரைப் பற்றி குறைத்துப் பேச வேண்டாம். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். நல்ல வாய்ப்புகள் கிடைத்தும் பயன்படுத்திக் கொள்ளாமல் விட்டு விட்டோமோ என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள். ஆனால், 28.10.2019 முதல் 27.03.2020 வரை குருபகவான் உங்கள் ராசிக்குள்ளேயே நுழைவதால் திடீர்ப் பயணங்களால் ஏற்பட்ட வீண் அலைச்சல்கள், அலைக்கழிப்புகள் குறையும். பல நாட்கள் தூக்கமில்லாமல் தவித்தீர்களே! இனி ஆழ்ந்த உறக்கம் வரும்.

என்றாலும் முன்கோபம் அதிகரிக்கும். உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள் நேரம் கடந்து சாப்பிடுவதைத் தவிர்க்கப்பாருங்கள். அல்சர் வரக்கூடும். வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடியும். குடும்பத்திலும் சிறுசிறு வாக்குவாதங்கள் வந்து போகும். கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்சினையைத் தவிர்ப்பது நல்லது.

மனைவிக்கு தைராய்டு, ஃபைப்ராய்டு, ஹார்மோன் கோளாறு வந்து செல்லும். ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை அதிகரிக்கும். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் இருவரும் மனம் விட்டுப் பேசி தீர்க்கப் பாருங்கள்.

dhanusu 2.jpg

வியாபாரிகளே! பெரிய அளவில் முதலீடுகள் செய்து திணறாமல் அளவாகப் பணம் போடுங்கள். சந்தை நிலவரம் அறிந்து புதிய கொள்முதல் செய்யுங்கள். புதிய பிரமுகர்கள் அறிமுகமாவார்கள். கடையை விரிவுபடுத்தி அழகுபடுத்துவீர்கள். பழைய சரக்குகள் விற்றுத்தீரும். வாடிக்கையாளர்களை அன்பாக நடத்துங்கள். வேலையாட்கள் அவ்வப்போது விடுப்பில் சென்று உங்களை டென்ஷனாக்குவதுடன், விவாதமும் செய்வார்கள். மருந்து, எண்டர்பிரைஸ், துணி வகைகளால் ஆதாயமடைவீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் கருத்துவேறுபாட்டால் பிரிவார்கள். புதிய பங்குதாரர்கள் வருவார்கள்.

உத்தியோகஸ்தர்களே! கிடைக்க வேண்டிய பதவியுயர்வு ஏதோ காரணங்களால் தடைபட்டுப்போனதே! இனி பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. அலுவலகப் பிரச்சினைகள் மட்டுமல்லாது அதிகாரியின் சொந்தப் பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பீர்கள். பெரிய பதவியில் அமர்த்தப்படுவீர்கள். பணிகளையும் திறம்பட முடித்து எல்லோரையும் வியக்க வைப்பீர்கள். புதிய வேலை கிடைக்கும். சக ஊழியர்கள் நேசக்கரம் நீட்டுவார்கள்.

பெண்களுக்கு: மே முதல் அக்டோபர் வரை ஓரளவு குரு சாதகமாக இருப்பதால் உங்களின் புகழ், கௌரவம் உயரும். உறவினர்களின் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வீடு வாங்க லோன் கிடைக்கும். கணவர் உங்களை மதிப்பார். பிள்ளை பாக்கியம் உண்டாகும். அடகிலிருந்த பழைய நகையை மீட்பீர்கள்.

மகளுக்கு நல்ல வரன் அமையும். இந்த ஆண்டு முழுக்கச் சனியின் போக்கு சரியில்லாததால் உறக்கமின்மை, சைனஸ் தொந்தரவு, நெஞ்சு வலி வந்து நீங்கும். கூடாப் பழக்கமுள்ளவர்களின் நட்பைத் தவிர்க்கப் பாருங்கள். இந்தப் புத்தாண்டு தொடக்கத்தில் சின்னச் சின்னத் தொந்தரவுகளைத் தந்தாலும் மையப் பகுதி முதல் எதிர்பாராத பணவரவு, வெற்றிகளைத் தரக் கூடியதாக அமையும்.

பரிகாரம்: அருகிலிருக்கும் விநாயகர் கோயிலுக்குச் சதுர்த்தி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குவதுடன் கேழ்வரகுக் கூழைத் தானமாகக் கொடுங்கள். வளம் பெருகும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close