[X] Close

மீனம் - விகாரி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்


  • kamadenu
  • Posted: 11 Apr, 2019 09:49 am
  • அ+ அ-

-ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

மீன ராசி வாசகர்களே!

கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு என்பதை உணர்ந்த நீங்கள், அதிகம் தெரிந்திருந்தும் அலட்டிக்கொள்ள மாட்டீர்கள். உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் விரக்தியி லிருந்து விடுபடுவீர்கள். விலகியிருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு வாரிசு உருவாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

பழைய கடனை பைசல் செய்வீர்கள். தடைபட்ட கல்யாணம் முடியும். நவீன ரக வாகனம் வாங்குவீர்கள். வங்கிக் கடனுக்காகக் காத்திருந்து, வீடு கட்டும் பணியும் பாதியிலேயே நின்று போனதே! இனிப் பல வழிகளிலும் உதவிகள் கிடைக்கும். சமையலறையை நவீனமயமாக்குவீர்கள். விலை உயர்ந்த ரத்தினங்கள், ஆபரணங்கள், வெள்ளிப் பொருட்கள் வாங்குவீர்கள். பிள்ளைகள் குடும்பச் சூழ்நிலையறிந்து பொறுப்பாக நடந்துகொள்வார்கள். அவர்களிடம் முக்கிய விஷயங்களைப் பகிர்ந்துக் கொள்வதில் தவறில்லை.

வருடம் ஆரம்பிக்கும்போது செவ்வாய் 3-ம் வீட்டிலேயே அமர்ந்திருப்பதால் புதிதாக வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். சிலர் இருக்கும் வீட்டில் கூடுதலாக ஒரு அறை கட்டுவீர்கள். கைமாற்றாக வாங்கியதைத் தந்து முடிப்பீர்கள். பழைய வாகனத்தை மாற்றிவிட்டுப் புதிய டிசைன் வண்டி வாங்குவீர்கள். மகனின் கல்யாணத்தைச் சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் எல்லோரும் உங்களை மதிப்பார்கள்.

உங்கள் ராசிக்கு சனிபகவான் இந்த விகாரி வருடம் முழுக்க 10-ம் வீட்டிலேயே தொடர்வதால் எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். உடல் ஆரோக்கியம் சீராகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். உங்களைப் புகழ்வதைப் போல் இகழ்ந்தவர்களை எல்லாம் ஓரங்கட்டுவீர்கள்.

இந்த ஆண்டு முழுக்க ராகுபகவான் 4-ம் வீட்டிலும், கேது ராசிக்கு 10-ம் வீட்டிலும் இருப்பதால் மனத்தில் இனம்புரியாத பயம், முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் வந்து செல்லும். எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள்.

14.04.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசார வக்கிரமாகி உங்கள் ராசிக்கு 10-வது வீட்டில் தொடர்வதால் அதுவரை வேலைச்சுமை அதிகமாக இருக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். சில காரியங்களைப் போராடி முடிக்க வேண்டி வரும். பிரபலங்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். விலையுயர்ந்த பொருட்களைக் கவனமாகக் கையாளுங்கள். நெருக்கமானவர்களிடம் கூடக் குடும்ப அந்தரங்க விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

அதிக அறிமுகம் இல்லாதவர்களை வீட்டுக்கு அழைத்து வர வேண்டாம். பழைய கடன் பிரச்சினைகள் அவ்வப்போது மனதை வாட்டும். ஊர்ப் பொது விவகாரங்களில் உதவப் போய் உபத்திரவத்தில் சிக்கிக்கொள்வீர்கள். உத்தியோகத்திலும் மறைமுக எதிர்ப்புகளும், இடமாற்றங்களும் வரக்கூடும். எனவே, அலுவலகத்தில் அதிகப் பேச்சைத் தவிர்ப்பது நல்லது. வங்கிக் காசோலையில் முன்பே கையெழுத்திட வேண்டாம்.

19.05.2019 முதல் 27.10.2019 வரை ராசிநாதன் குருபகவான் 9-ம் வீட்டில் நிற்பதால் உங்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வேலை வேலை என்றிருந்தீர்களே! இனி குடும்பத்துக்காகக் கொஞ்சம் நேரம் ஒதுக்குவீர்கள்.

கணவன் மனைவிக்குள் தாம்பத்யம் இனிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்று வீர்கள். உறவினர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். பால்யகால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சொந்த ஊர் பொதுக் காரியங்களை எடுத்து நடத்துவீர்கள். ஊரில் மதிப்பு மரியாதை கூடும்.

பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். 28.10.2019 முதல் 27.03.2020 வரை குரு பகவான் உங்கள் ராசிக்குப் பத்தாம் வீட்டுக்கு வருவதால் அதுமுதல் சிறு சிறு அவமானங்களும், விமர்சனங்களும், வீண்பழியும் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். வி.ஐ.பிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள்.

meenam.jpg

வியாபாரிகளே! பக்கத்துக் கடைக்காரரைப் பார்த்துப் பெரிய முதலீடுகள் போட்டுச் சிக்கிக் கொள்ளாதீர்கள். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த லாபத்தைக் குறைத்து விற்பனை செய்ய வேண்டி வரும். வேலையாட்களால் பிரச்சினைகள் வரக்கூடும். திடீரென்று அறிமுகமாகுபவர்கள் நயமாகப் பேசுகிறார் கள் என்று நம்பிப் பெரிய தொகையைக் கடனாகத் தர வேண்டாம். மே மாதம் முதல் கணிசமாக லாபம் உயரும். உணவு, புரோக்கரேஜ், கமிசன், எலக்ட்ரிக்கல் வகைகளால் ஆதாயமடைவீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களுடன் மோதல்கள் வெடிக்கும்.

உத்தியோகஸ்தர்களே! மேலதிகாரியால் அவ்வப்போது மன உளைச்சல் வந்தாலும், உங்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார். அலுவலக சூட்சுமங்கள் அத்துப்படியாகும். காலம் தாழ்த்தாமல் பணிகளை விரைந்து முடிக்கப் பாருங்கள். சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வருட பிற்பகுதியில் பதவியுயரும்.

பெண்களுக்கு: இந்த ஆண்டு முழுக்க சனி பகவான் சாதகமாக இருப்பதால் கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். உங்களின் செல்வம், செல்வாக்கு உயரும். அரசாங்க விஷயம் உடனே முடியும். அதிகாரப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். மாமனார், மாமியார் வலிய வந்து சில பொறுப்பு களை ஒப்படைப்பார்கள். நவம்பர் மாதம் முதல் குரு சரியில்லாததால் திடீர்ப் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள்.

மகளுடன் கருத்து மோதல் வரும். மகனின் நட்பு வட்டத்தைக் கண்காணியுங்கள். வழக்கால் நிம்மதி இழப்பீர்கள். விலையுயர்ந்த பொருட்களைக் கவனமாகக் கையாளுங்கள். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பதுடன் தன்நிலையைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டிய வருடமிது.

பரிகாரம்: அருகிலிருக்கும் சிவன் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் சென்று வணங்குவதுடன் சுக்கு, வெல்லம் கலந்த பானக நீரைத் தானமாகக் கொடுங்கள். மகிழ்ச்சி தங்கும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close