[X] Close

கும்பம் - விகாரி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்


  • kamadenu
  • Posted: 11 Apr, 2019 09:49 am
  • அ+ அ-

-ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

கும்ப ராசி வாசகர்களே!

எடுத்தோம் கவிழ்த்தோம் என்றில்லாமல் சந்தர்ப்ப சூழ்நிலையை உணர்ந்து சமயோஜிதப் புத்தியுடன் பேசும் நீங்கள் அடங்கி எழுபவர்கள். சுக்ரன் உங்கள் ராசிக்குள் நிற்கும் போது இந்த ஆண்டு பிறப்பதால் அடிப்படை வசதிகள் பெருகும். கனிவான பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். கடனாகக் கொடுத்த பணம் கைக்கு வரும். அநாவசியச் செலவுகளைக் குறைப்பீர்கள். மனைவிவழியில் மதிப்பு, மரியாதை கூடும். அவர்களிடம் எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும்.

தோலில் நமைச்சல் நீங்கும். புதிதாக வீடு, வாகனம் வாங்க எதிர்பார்த்த வங்கியில் கடன் உதவி கிடைக்கும். சிலர் வீட்டைப் புதுப்பித்துக் கட்டுவார்கள். மனஸ்தாபங்களால் ஒதுங்கியிருந்த உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். உங்கள் ராசிக்கு 6-வது ராசியில் இந்த ஆண்டு பிறப்பதால் எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். கனிவான பேச்சு வேலைக்காகாது, இனிக் கராறாகத் தான் பேச வேண்டுமென்ற முடிவுக்கு வருவீர்கள்.

ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். பழுதான சாதனங்களை மாற்றுவீர்கள். அடிப்படை வசதிகள் பெருகும். கணவன் மனைவிக்குள் பாசம் அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்களால் ஆதாயமுண்டு. பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள்.

இந்த ஆண்டு முழுக்க ராகு உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டிலேயே நீடிப்பதால் சில நேரம் மன இறுக்கம் வந்து நீங்கும். கனவுத் தொல்லையும் அதிகரிக்கும். உறவினர்களில் ஒருசிலர் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்வார்கள். அன்புத் தொல்லையும் அதிகரிக்கும். மகளின் திருமணத்துக்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். மகனின் உயர்கல்வி, உத்தியோகத்துக்காகச் சிலரின் சிபாரிசை நாடுவீர்கள். கர்ப்பிணிப் பெண்கள் அதிக எடையுள்ள சுமைகளை தூக்க வேண்டாம். படிகளில் ஏறும்போது கவனம் தேவை. வதந்திகளை நம்பி உறவுகளைப் பகைத்துக் கொள்ள வேண்டாம்.

இந்த ஆண்டு முழுக்க சனியும், கேதுவும் உங்கள் ராசிக்கு 11-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் பழைய சிக்கல்களைப் புதிய கோணத்தில் அணுகி வெற்றி பெறுவீர்கள். வரவேண்டிய பணம் கைக்கு வரும். உடன்பிறந்தவர்களுக்காக எவ்வளவு செய்தும் நம்மைப் புரிந்து கொள்ளவில்லையே என்று அவ்வப்போது வருந்தினீர்களே! அந்த நிலை மாறும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். அரசாங்க விஷயத்தில் அலட்சியமாக இருந்து விடாதீர்கள். பழைய கசப்பான சம்பவங்கள் அவ்வப்போது மனத்தை வாட்டும். உங்கள் மீது சிலர் பழி சுமத்துவார்கள்.

14.04.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு அதிசார வக்கிரமாகி லாப வீட்டிலே வலுவாக காணப்படுவதால் திடீர்ப் பணவரவு உண்டு. நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வரும். பெரிய பதவிகள் தேடி வரும். குழந்தை பாக்யம் கிடைக்கும். வீடு கட்டும் பணியைத் தொடர்வீர்கள். உங்களையும் அறியாமல் உங்களிடம் இருந்துவந்த தாழ்வுமனப்பான்மை நீங்கும். இனி நேர்மறை எண்ணங்கள் உருவாகும். பழைய சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். பழைய கடனில் ஒருபகுதியை தீர்க்க வழி பிறக்கும்.

19.05.2019 முதல் 27.10.2019 வரை குருபகவான் 10-ம் வீட்டில் தொடர்வதால் வேலைச்சுமையால் பதற்றம் அதிகரிக்கும். தங்க ஆபரணங்களை யாருக்கும் இரவல் தரவோ வாங்கவோ வேண்டாம். உங்களிடம் திறமை குறைந்து விட்டதாக நினைத்துக் கொள்வீர்கள். சிறுசிறு அவமானங்களும் வந்து செல்லும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த சிலர் முயல்வார்கள். யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம்.

பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம். 28.10.2019 முதல் 27.03.2020 வரை குரு உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்வதால் திடீர் யோகம், அதிர்ஷ்டம் உண்டாகும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கடனாகவும், கைமாற்றாகவும் கொடுத்த பணம் கைக்கு வரும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும்.

அவர்களின் ஆலோசனையால் நீங்கள் புதிய பாதையில் செல்வீர்கள். கணவன் மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். இரு வரும் கலந்தாலோசித்துச் செலவுகளைக் குறைக்கத் திட்டமிடுவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

kumbam.jpg

வியாபாரிகளே! கடையை விரிவுபடுத்தி, பெரிய முதலீடுகளை போட்டு நட்டப்பட்டீர்களே! இனி வாடிக்கையாளர்களின் தேவையறிந்து கொள்முதல் செய்வீர்கள். நீண்ட நாளாக நினைத்திருந்த மாற்றங்களை உடனே செய்வீர்கள். வானொலி விளம்பரம், தொலைக்காட்சி விளம்பரங்களால் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். கொடுக்கல் வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். மற்றவர்களின் ஆலோசனையை ஒதுக்கித் தள்ளுங்கள். உங்கள் அனுபவ அறிவைப் பயன்படுத்துங்கள். பழைய பங்குதாரரை மாற்றுவீர்கள். புது ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களே! உங்களைக் கசக்கிப் பிழிந்து, உருக்குலைய வைத்த மேலதிகாரி வேறிடத்துக்கு மாற்றப்படுவார். தள்ளிப் போன பதவியுயர்வு, சம்பள உயர்வு இனித் தடையில்லாமல் கிடைக்கும். உங்களின் திறமையைக் கண்டு உயரதிகாரி வியப்பார். இனி அநாவசியமாக விடுப்பு எடுக்க மாட்டீர்கள். அவ்வப்போது மற்றவர்களின் பணிகளையும் சேர்த்துப் பார்க்க நேரிடும்.

பெண்களுக்கு: சனியும், கேதுவும் சாதகமாக இருப்பதால் உங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். செலவுகளைக் குறைக்கத் திட்டமிடுவீர்கள். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். தோழிகள், உறவினர்களால் அனுகூலம் உண்டு. மாமனார், நாத்தனார் உங்களின் சகிப்புத் தன்மையைப் பாராட்டுவார்கள். ஆனால், மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை குரு சரியில்லாததால் கணவர் வெளியில் இருக்கும் கோபத்தை வீட்டில் காட்டுவார். அவருக்குச் சரிசமமாக நீங்களும் அலுத்துக் கொள்ளாதீர்கள்.

பரிகாரம்: அருகிலிருக்கும் முருகர் கோயிலுக்கு சஷ்டி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குவதுடன், தினம்தோறும் பறவைகள் குடிப்பதற்கு மொட்டை மாடியில் தண்ணீர் வைக்க வேண்டும். தடைகள் விலகும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close