[X] Close

தாம்பத்ய நேரம் எப்போது? ராஜயோக குழந்தை நிச்சயம்!


jodhidam-arivom-2-28

  • kamadenu
  • Posted: 06 Apr, 2019 16:04 pm
  • அ+ அ-

ஜோதிடம் அறிவோம் 2 – 28: இதுதான்… இப்படித்தான்!

ஜோதிடர் ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே.

ராஜ யோகம் பற்றி பார்த்து வருகிறோம்.

சென்ற பதிவில் “நமக்குத்தான் யோகம் இல்ல, நம் பிள்ளைகளுக்காவது யோகம் இருக்கணும்” என்ற எண்ணம் உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்துப் பார்க்கலாம் எனத் தெரிவித்திருந்தேன்.

இப்போது பார்ப்போம். 

“தினம் இரண்டு, வாரம் இரண்டு, மாதம் இரண்டு, வருடம் இரண்டு” இது முன்னோர் சொல்லிவைத்த வாழ்க்கைக் கணக்கு.

தினம் இரண்டு:- ஒருநாளைக்கு இரு வேளை மட்டுமே உணவு உண்ணவேண்டும்.

வாரம் இரண்டு:- வாரம் இரண்டு முறை எண்ணெய்க் குளியல் அவசியம்.

வருடம் இரண்டு:- ஆண்டுக்கு இரண்டு முறை வயிற்றை சுத்தம் செய்யும் பேதி மருந்து உட்கொள்ள வேண்டும், 

மாதம் இரண்டு:- தாம்பத்யம் மாதம் இரண்டு முறை மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டும்,காரணம் விந்து கெட்டிப்படும், வீரியம் அதிகமாகும். குழந்தை பாக்கியம் தாமதம் ஆகி கொண்டிருப்பவர்கள், மாதம் இரண்டுமுறை தாம்பத்யம் வைத்துக்கொள்வது நல்ல பலன் தரும் என்பது உறுதி.

செவ்வாய் கடக ராசியில் இருக்கும் ஆண்கள், இதைப் பின்பற்றுவது இன்னும் நல்ல பலன்களைத் தரும் என்பதை உணருங்கள்.

செவ்வாய் கேது இணைந்துள்ள ஜாதகர்களும் இந்த முறையைப் பின்பற்றலாம்.

சரி… மாதம் இரண்டு நாள் என்பதை எப்படி தேர்ந்தெடுப்பது? 

சில திதிகள், நட்சத்திரங்கள் குறிப்பைத் தருகிறேன். அந்த நாட்களைத் தேர்ந்தெடுத்து தாம்பத்யம் வைத்துக்கொண்டால் நல்ல யோகங்களை உடைய வாரிசு நிச்சயம் உண்டாகும்.

முதலில் திதி:- ஏன் திதியை கவனிக்க வேண்டும்? திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள தொடர்பு. எனவே குழந்தை நல்ல அறிவோடும், ஆளுமை குணத்தோடும் இருக்கும். 

சரி, எந்தெந்த திதிகள் என்பதைப் பார்ப்போம். திருதியை, பஞ்சமி, சஷ்டி, தசமி, திரயோதசி, இந்த திதிகள் கொண்ட நாட்கள் விசேஷமானவை.

நட்சத்திரங்கள்:- அஸ்வினி, ரோகிணி, மிருகசீரிடம், பூசம், மகம், அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுசம், மூலம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி இந்த 14 நட்சத்திரங்களும் கூடிய நாட்களில் .... தாம்பத்யம் வைத்துக்கொள்வது நல்ல யோகமான குழந்தை வாய்க்கும் என்பது உறுதி.  

இது இயற்கையாகவே ( நாள் பார்த்து சிசேரியன் தேவையில்லை) நல்ல ஜாதக அமைப்போடு எல்லா சுகபோகங்களையும் யோகமாக தரக்கூடியதாக குழந்தையாக இருக்கும். இது உங்களுக்கு மட்டுமல்ல உங்கள். குழந்தைகளுக்கும் நல்ல எதிர்காலத்தைத் தரும்.

மேலே குறிப்பிட்ட திதிகள் தவிர எஞ்சிய திதிகள், விடுபட்ட நட்சத்திரங்கள் உள்ள நாட்களில் தாம்பத்யம் தவிர்க்க வேண்டும்.

பகலில் கண்டிப்பாக தாம்பத்யம் கூடாது, அந்திசாயும் நேரத்திலும், அதிகாலை நேரமும் தவிர்க்கப்படவேண்டும்.

பகலில் கூடுவதால் உருவாகும் குழந்தை உங்களுக்கும், அந்த குழந்தைக்கும் ஏமாற்றமான எதிர்காலத்தை  உண்டுபண்ணும்.

இரவில் 11 மணிக்குமேல் 1 மணிவரையிலான நேரமே தாம்பத்ய நேரம் என்கிறது சாஸ்திரம். அதுவும் மாதத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே.

மேலே குறிப்பிட்ட திதி நட்சத்திரங்கள் இணையும் நாட்கள் 3 முதல் 5 நாட்கள் மட்டுமே அமையும். இப்படித் தேர்ந்தெடுத்த நாட்களில் உண்டாகும் குழந்தை நிச்சயம் யோகங்களைக் கொண்ட குழந்தையாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

அதுமட்டுமல்ல உங்கள் வாழ்க்கையும் பலப்படும். கணவன் மனைவி ஒற்றுமையும் பலமாகும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.  

கோள் செய்யாததை நாள் செய்யும், நாள் செய்யாததை நட்சத்திரம் செய்யும், நட்சத்திரம் செய்யாததை திதி செய்யும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இதைத்தான் “விதியை மதியால் வெல்லலாம்” என நம் முன்னோர்கள் குறிப்பிட்டார்கள்.

 ஆமாம். ஒருவருக்கு புத்திர பாக்கிய தாமதம் என்றால் மேற்கண்ட முறைகளை முறையாக பின்பற்றுங்கள். புத்திர பாக்கியம் நிச்சயம் உண்டாகும். 

என்னை நாடி வந்துகொண்டிருக்கும் வாடிக்கையாள நண்பர்கள்  பலருக்கும், இந்த வழிமுறையைப் பின்பற்றச் சொல்லி அவர்களுக்கு முருகன் அருளால் புத்திர பாக்கியம் கிடைத்துள்ளது. நீங்களும் பின்பற்றுங்கள். குழந்தை பாக்கியம்,... அதுவும் யோகமான குழந்தையைப் பெற்றிடுங்கள். முருகன் துணை இருப்பார்.  

இன்னும் சில யோகங்களை, முக்கியமாக கல்வி யோகம் பற்றியும், சொந்த வீடு வாங்கும் யோகம் பற்றியும் பார்ப்போம்.

  • தெளிவோம்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close