[X] Close

பதவி அருளும் பரமேஸ்வரன்


  • kamadenu
  • Posted: 04 Apr, 2019 11:23 am
  • அ+ அ-

திருப்பாற்கடலைக் கடையும் போது மேருமலையில் ஒரு துண்டு சிதறி விழுந்து  ஏழாக உடைந்து சிதறியது. அதில் ஒன்று கும்பகோணத்திலும் மற்றொன்று மண்ணியாற்றங்கரையிலும் விழுந்தது. மேருவுக்கு சத்தியமலை என்ற பெயரும் உண்டு. அவ்வாறு விழுந்த மலையின் மீது சுயம்புவாய்  சிவலிங்க வடிவில் இறைவன் காட்சி தந்ததால், சத்தியகிரி என அழைக்கப்பட்டு வணங்கப்பட்டது.

முருகப்பெருமான் சிவபெருமானை வழிபட்டு, சக்தி கொண்ட ‘ருத்திர பாசுபதம்’ பெற சத்தியகிரி மலையிருந்த மண்ணியாற்றங்கரையில் தவம் செய்தார். சிவபெருமான் இல்லாத ஒரு இடத்தில் நின்று அதை வேண்டிப்பெறவும் எண்ணினார். ஆனால் எங்கு சென்றாலும் சிவலிங்க சொரூபமாய்  இருப்பதைக் கண்டார். எங்கும் பிரகாசமாக ஆனந்த மூர்த்தியாய் இருக்கும் சிவனை உணர்ந்தார். சேயாக, முருகன் சிவனை வேண்டி நின்று படைக்கலத்தைப் பெற்ற ஊர் ‘சேய்ஞ்ஞலூர்’ என்று அழைக்கப்பட்டது.

'சேய் அடைந்த சேய்ஞலூர்' என்று திருஞானசம்பந்தர் இந்த ஊரைப் பாடுகிறார். இத்தலத்தின் சிறப்பை கந்தபுராணம், வழிநடைப்படலம் பேசுகிறது. மக்கள் வழக்கில் 'சேங்கலூர்'  சேங்கனூர்  என்று வழங்குகிறது . இத்தலத்துக்கு சத்யகிரி, குமாரபுரி, சண்டேச்வரபுரம் என வேறு பெயர்களும் வழங்குகின்றன.

சுந்தர மூர்த்தி நாயனார், திருத்தாண்டகத்தில் ‘திண்டீச்சரம் சேய்ஞ்லூர்' எனத் திருத்தலங்களின் வரிசைப் பட்டியலைத் துவங்குகிறார். ஸ்ரீ கிருஷ்ண ப்ரேமி சுவாமிகள் சக்திகிரீஸ்வர் மீது ருத்ராஷ்டகம்,தீர்த்தசதகம், காவேரியஷ்டகம் போன்றவற்றை இயற்றியுள்ளார். 

padhavi 2.jpg

அம்பாள் சகிதேவி

சிறியதும் எழில்மிக்கதுமான விமானத்தின் கீழ் கருவறையில் இறைவன் சக்திகிரீஸ்வரர் சுயம்புமூர்த்தியாக லிங்க வடிவில் தரிசனம் தருகிறார்.   

சிவனின் அம்பாள் பெயர் சகிதேவி. தாமரை மலருடன் அபய வரத முத்திரையுடன் நின்ற கோலத்தில் மகா மண்டபத்திலிருந்து அருளுகிறாள். அருகில் இரட்டை பைரவரும் சூரிய சந்திரரும் இருக்கின்றனர்.

அனைத்து சிவத்தலங்களிலும் காணப்படும் சண்டிகேஸ்வரரின் அவதாரத்தலம் இது. அறுபத்து மூன்று நாயன்மார்களில் மிகமிக இளையவர். ஆனால்  மற்றவர்களைவிட காலத்தால் முந்திய நாயன்மாரும் இவர்தான்.

ஒரு காதில் மகர குண்டலமும் மறுகாதில் குழையும் உடையவராய்  அர்த்தநாரிஸ்வர திருக்கோலத்தில் அற்புதத் திருமேனியில் ஜடா பந்தம் மற்றும் ஜடை முடியுடன், மேலே கபாலம், கங்கை, பிறை அணிந்து எமது அணியும் பரிகலனும் உமக்குத் தந்தோம் என  கூறியதற்கு ஏற்ப சிவபெருமானின் தோற்றத்தில் காட்சி அளிக்கும் தலம். அருகிலுள்ள திருவாய்ப்பாடி இவரது முக்தி பெற்ற தலமாக போற்றப்படுகிறது. சிவ ரூபத்திலிருக்கும் இந்த சண்டிகேஸ்வரரை வணங்கினால் பட்டமும் பதவியும் பாராட்டுகளும் தேடிவரும் என்பது நம்பிக்கை.

எப்படிச் செல்லலாம்?

சேங்கனூர் கும்பகோணத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் வெள்ளியங்குடி திவ்ய தேசத்துக்கு அருகில் உள்ளது.  கும்பகோணம் - திருப்பனந்தாள் சாலையில், நெடுங்கொல்லை என்ற  கிராமம் தாண்டி, சேங்கனூர்  கூட்டுரோடில் வலப்புறமாக பிரிந்து செல்லும் பாதையில் ஒரு கிலோமீட்டர் பயணித்தால் சேங்கனூர் சிவன்கோயிலை அடையலாம்.

- ஆர். அனுராதா

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close