[X] Close

’உங்கள் ஜாதகத்தில், தர்மம், கர்மம்!’


jodhidam-arivom2-26

  • kamadenu
  • Posted: 29 Mar, 2019 11:26 am
  • அ+ அ-

ஜோதிடம் அறிவோம் 2 - 26:  இதுதான்... இப்படித்தான்!

ஜோதிடர் ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே! 

இப்போது “தர்ம கர்மாதிபதி யோகம்” மற்றும் “ராஜ யோகம்”  ஆகியவற்றைப் பார்க்கலாம்.

முதலில் தர்ம கர்மாதிபதி யோகம் பற்றிப் பார்ப்போம்.

தர்மம் என்பது என்ன? எந்தப் பிரதிபலனும் எதிர்பார்க்காமல், விளம்பரமில்லாமல், தன்னுடைய மற்றொரு கைக்கு கூட தெரியாமல் செய்யும் நற்செயலே தர்மம்.

கர்மம் என்பது என்ன? தான்... என்ன  செய்கிறோமோ, அதில் கிடைக்கும் ஆதாயம் அல்லது விரயம் பற்றி கவலைப்படாமல் கண்ணும் கருத்துமாக பணி செய்வதே கர்மம்.

ஆக, இந்த இரண்டு செயலும் ஒருசேர செயல்படும்போது உண்டாவதே தர்மகர்மாதி யோகம்.  

சரி என்ன செய்யும் இந்த யோகம்?

பொதுவாக ஜோதிடர்கள் இந்த யோகம் உள்ளவர்களுக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்யும் பாக்கியம் உண்டு என்று சொல்வார்கள்.

 அது மட்டும்தானா? வேறு ஏதும் இருக்கிறதா? பார்ப்போம்.

முதலில் தர்ம ஸ்தானம்.

ஒரு விருப்பமானது நினைத்தமாத்திரத்தில் தனக்குக் கிடைப்பது இந்த தர்ம ஸ்தானத்தால்தான். உதாரணமாக, இன்று நல்ல உணவு உண்ணவேண்டும் அதுவும், பிரபலமான உணவகமாக இருக்கவேண்டும் என நினைத்த உடனே, உங்கள் நண்பரோ அல்லது உறவினரோ “வாயேன் அந்த ஹோட்டலுக்குப் போகலாம்” என அழைப்பார். இப்போது உங்களுக்கு பணமும் மிச்சம். விரும்பிய உணவும் கிடைத்தது. இதுதான் யோகம் என்பது!  

இது ஏதோ உணவு விஷயத்தில் மட்டும் நடக்கும் போல என்று நினைத்துவிடாதீர்கள். விரும்பிய கல்வி, விருப்பமான வேலை, ஆசைப்பட்ட வீடு, வாகனம் , நல்ல வாழ்க்கைத்துணை, அழகான அறிவான குழந்தைகள், அருமையான நண்பர்கள்,மற்றும் சுற்றத்தார்.. என இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

அடுத்து கர்ம ஸ்தானம்.

கடமையைச் சரியாகச் செய்தால் உயர்வு தானாக வரும் என்பதை காட்டும் ஸ்தானமே கர்ம ஸ்தானம்.

இதை தொழில் ஸ்தானம் என்றும் சொல்வார்கள். செய்கின்ற செயல் எதுவானாலும் கடமை உணர்வோடு செய்தால் வெற்றி நிச்சயம் என்பதை உணர்த்தும் இடம் இது!

சரி இந்த இரண்டும் ஒன்றாகச் சேரும்போது என்ன அற்புதம் நடக்கும்? கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்கிற அளவுக்கு பாக்கியம் இருக்குமானால், வசதி வாய்ப்புகள் எந்த அளவுக்கு உச்சநிலையில் இருக்கும்! 

அதுமட்டுமல்ல தொழிலில் சாதனை மனிதராகவும், புகழின் உச்சத்திலும் வைக்கும்.

அரசியல், அதாவது மக்கள் சேவையில் சுயநலமில்லாத உன்னத மனிதராக விளங்கவைக்கும், மகாத்மா காந்தியின் ஜாதகத்தில் இந்த தர்மகர்மாதிபதி யோகம் உள்ளது. அதனால்தான் அவரால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத சேவையை நமக்குத் தரமுடிந்தது.

மக்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு அளித்து அவர்களின் குடும்பத்திற்கு உதவிகரமாக இருக்கும் பெரிய தொழிலதிபர்களின் ஜாதகமும் இப்படிபட்ட யோகங்களை கொண்டதே என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

இந்த யோகம், உங்கள் ஜாதகத்தில் இருந்தால் நிச்சயமாக நல்ல தொழில் அல்லது உயர்ந்த நிறுவனத்தில் மிக உயர்ந்த பதவி, மன நிறைவான சம்பளம், இனிய குடும்பம், எல்லாவகையிலும் பூரணத்துவம் என்று வாழ்வீர்கள்.

இந்த யோகம் உங்கள் ஜாதகத்தில் இருக்கிறதா என எப்படி அறிவது? 

உங்கள் ஜாதகத்தில் லக்னம் என்ற கட்டத்தில் இருந்து எண்ண ஆரம்பித்து 9ம் கட்டம் தர்மம் என்கிற பாக்கிய ஸ்தானம், 10 வது கட்டம் தொழில் எனும் கர்ம ஸ்தானம் ஆகும்.

இந்த இரண்டு வீட்டு அதிபதிகள் யார் என்று பாருங்கள். அவர்கள் இருவரும் இணைந்திருந்தாலும், ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டாலும், அல்லது அவர்களுக்குள்ளாக வீடு மாறி ( பரிவர்த்தனை ) இருந்தாலும் இந்த யோகம் நிச்சயமாக உள்ளது என அறியலாம்,

’இதை எப்படிங்க நான் தெரிஞ்சுக்கிறது, இதற்காக நான் ஜோசியரை போய் பார்த்துதான் தெரிஞ்சுக்கணுமா?’ என்கிறீர்களா?

 கவலையே வேண்டாம். நானே எளிமையாக விளக்கம் தருகிறேன்.

 உங்களுக்கு ஒவ்வொரு லக்னத்திற்கும் இந்த 9 மற்றும் 10 ம் அதிபதிகள் யார் எனச் சொல்கிறேன். நீங்கள், மேலே குறிப்பிட்டபடி தொடர்பு இருக்கிறதா என  பார்த்து அறிந்து கொள்ளுங்கள், 

மேஷ லக்னம்:- 9ம் அதிபதி குரு- 10ம் அதிபதி சனி,

ரிஷப லக்னம்:- கொடுத்து வைத்தவர்கள் நீங்கள். காரணம் உங்களுக்குதான் இந்த யோகம் அதிகப்படியாக உண்டு. காரணம் உங்களுக்கு தர்ம கர்ம அதிபதி ஒருவரே. அவர்... சனி பகவான் மட்டுமே! இவர் உங்கள் ஜாதகத்தில் கெட்டுப்போகாமல் இருந்தாலே போதும் எல்லா யோகமும் கிடைக்கும்.

மிதுன லக்னம்:- 9ம் அதிபதி சனி, 10ம் அதிபதி குரு, 

கடக லக்னம்:- 9ம் அதிபதி குரு, பத்தாம் அதிபதி செவ்வாய்,

சிம்ம லக்னம்:- 9ம் அதிபதி செவ்வாய், பத்தாம் அதிபதி சுக்ரன்,

கடக சிம்ம லக்ன காரர்களுக்கு செவ்வாய் பகவான் “யோகாதிபதி” ஆவார். 

கன்னி லக்னம்:- 9ம் அதிபதி சுக்ரன், பத்தாம் அதிபதி புதன்,

துலா லக்னம்:- 9ம் அதிபதி புதன், பத்தாம் அதிபதி சந்திரன்,

விருச்சிக லக்னம்:- 9ம் அதிபதி சந்திரன், பத்தாம் அதிபதி சூரியன்,

தனுசு லக்னம்:- 9ம் அதிபதி சூரியன், 10ம் அதிபதி புதன்,

மகர லக்னம்:- 9ம் அதிபதி புதன், 10 ம் அதிபதி சுக்ரன்,

கும்ப லக்னம்:- 9ம் அதிபதி சுக்ரன், 10 ம் அதிபதி செவ்வாய்,

மீன லக்னம்:- 9ம் அதிபதி செவ்வாய், 10ம் அதிபதி குரு பகவான்,

இப்போது நீங்களே அறிந்து கொள்ளலாம், இந்த யோகம் உங்களுக்கு இருக்குமாயின், நீங்கள் செய்ய வேண்டியது....

ஆலய கும்பாபிஷேகங்களில் ஏதாவதொரு வகையில் உங்கள் பங்களிப்பு இருக்கட்டும்.

ஒருவேளை பூஜைக்கே வழியில்லாத ஆலயங்கள் பல உள்ளன. அப்படிப்பட்ட ஆலயங்களுக்கு உங்கள் உதவிக் கரம் நீளட்டும்.  உங்கள் தலைமுறையே சீரும் சிறப்புமாய் வாழும். உங்கள் வம்சமே தழைக்கும்!

ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுங்கள், உங்கள் குழந்தைகள் வளமோடு வாழ்வார்கள். 

இன்னும் யோகங்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் அடுத்த பதிவில் பார்ப்போம்.

- தெளிவோம்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close