[X] Close

கல்யாணத் தடை நீக்கும் பங்குனி உத்திரம்


panguni-uthiram

முருகப்பெருமான்

  • வி.ராம்ஜி
  • Posted: 19 Mar, 2019 12:51 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

பங்குனி உத்திர நாளில், விரதமிருந்து சுவாமி தரிசனம் செய்யுங்கள். வாழ்வில் எல்லாத் தடைகளும் நீங்கும். இதுவரை இல்லாத உன்னதத்தையும் உயர்வையும் அடைவீர்கள்.

தமிழ் மாதத்தின் 12வது மாதம் பங்குனி. அதேபோல் நட்சத்திரங்களில் 12வது நட்சத்திரம் உத்திரம். பங்குனியில் வருகிற உத்திரம் விசேஷம் என்று போற்றுகின்றன புராணங்கள்.

‘நாங்களும் பாக்காத ஜாதகமே இல்லீங்க. இன்னும் எங்க பொண்ணுக்கு வரன் அமையல’ என்று பெண்ணைப் பெற்றவர்கள், வேதனையுடன் புலம்புவதைக் கேட்டிருக்கலாம்.

‘கைநிறைய சம்பாதிக்கிறான். கண்ணும்கருத்துமா பாத்துக்கறான். அவனுக்கு ஒரு கால்கட்டு போட்டுட்டா, நிம்மதியாப் போய்ச்சேந்துருவோம். இன்னும் கல்யாண யோகம் கூடிவரலீங்களே...’ என்று மகன்களைப் பெற்றவர்கள் வருத்தத்துடன் சொல்லிக்கொண்டிருப்பதைக் கேட்டிருக்கலாம்.

தடைப்பட்ட கல்யாணத்துடன் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி... அந்தத் தடைகள் அகலும். கல்யாண மாலை தோள் சேரும். அப்படியொரு அற்புதமான பலனைத் தரும் நாளாக, வரத்தைக் கொடுக்கும் தினமாக சிலாகிக்கப்படுகிறது பங்குனி உத்திரம்.

ஸ்ரீராமபிரானுக்கும் சீதாபிராட்டிக்கும் பங்குனி உத்திர நாளில்தான் திருமணம் நடைபெற்றது என்கிறது புராணம். அவர்களுக்கு மட்டுமின்றி, ஸ்ரீராமரின் சகோதரர்களான பரதனுக்கும் மாண்டவிக்கும், லட்சுமணனுக்கும் ஊர்மிளைக்கும், சத்ருக்னனுக்கும் ஸ்ருதகீர்த்திக்கும் திருமணம் நிகழ்ந்தது கூட, ஓர் பங்குனி உத்திர நன்னாளில்தான் என்பது கூடுதல் விசேஷம்!

இதைவிட முக்கியமாக, அப்பன் சிவனுக்கும் அம்மை உமையவளுக்கும் திருமணம் நடந்ததும், அவர்களின் மைந்தன் அழகன் முருகனுக்கும் தெய்வானைக்கும் கல்யாணம் நடந்தேறியதும் கூட பங்குனி உத்திர நன்னாளில்தான் என்கிறது புராணம்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த ஆண்டாளுக்கும் ரங்கமன்னாருக்கும் திருமணம் நிகழ்ந்ததும் பங்குனி உத்திர புண்ய தினத்தில்தான். ஆக சைவத்திலும் வைஷ்ணவத்திலும் முக்கியமானதொரு வைபவமாக பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது.

தெய்வானை முருக்கடவுளை மணந்தது பங்குனி உத்திரம். அதேபோல், முருகப்பெருமானை மணப்பதற்காக வள்ளி அவதரித்ததும் இந்த பங்குனி உத்திர நாளில்தான்!

ஐயன் ஐயப்ப சுவாமி, மணிகண்டனாக, பந்தளராஜாவின் மைந்தனாக மண்ணில் தோன்றியதும் பங்குனி உத்திரத்தில் என்கிறது ஐயப்ப புராணம்.

அவ்வளவு ஏன்... கோபத்தில் நெற்றிக்கண்ணால், மன்மதனைச் சுட்டெரித்த சிவனாரின் கோபமும் கதையும்தான் நமக்குத் தெரியுமே. பிறகு ரதிதேவியின் பெருமுயற்சியாலும் கடும் தவத்தாலும் மனமிரங்கிய சிவனார், இறந்த மன்மதனை உயிர்ப்பித்துக் கொடுத்த உன்னத நாள்... பங்கு உத்திர நன்னாள் என்றெல்லாம் புராணங்கள் தெரிவிக்கின்றன.

ஆகவே, பங்குனி உத்திரம் என்பது முக்கியமான தினம். கடவுளர்களின் திருமணங்கள் நடைபெற்ற புண்ணிய நாளான, பங்குனி உத்திர நாளில், விரதமிருந்து, அருகில் உள்ள ஆலயங்களில் திருக்கல்யாண வைபவத்தைக் கண்ணாரத் தரிசியுங்கள். மனதார வேண்டிக்கொள்ளுங்கள்.

கல்யாணத் தடை அகலும். திருமண வரம் தந்து அருளுவார்கள் தெய்வங்கள்.  

கல்யாணத் தடைகளை நீக்கும் பங்குனி உத்திர நாளில் (21.3.19) ஆலய தரிசனம் செய்யுங்கள். அனைத்துத் தடைகளில் இருந்தும் விடுபட்டு, இனிய வாழ்வைப் பெறுங்கள்!

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close