[X] Close

இன்று உலக தண்ணீர் தினம்:  முன்மாதிரியாக விளங்கும் குளச்சல், குடிமனை கழிவுநீர் சுத்திகரிப்பு முறை: மத்திய அரசு பாராட்டி, சான்று அளிப்பு 


  • kamadenu
  • Posted: 22 Mar, 2019 06:23 am
  • அ+ அ-

ஜோதிடம் அறிவோம் 2 - 19 : இதுதான்... இப்படித்தான்!

- ஜோதிடர் ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே. சனி பகவான் அருளையும் அவரின் கருணையையும் பெற இறைவழிபாடுகள் என்னென்ன? ஆலயங்கள் எவை? பரிகார முறைகள் என்ன? என்பதையெல்லாம் இந்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.

அதற்கு முன்னதாக ஒரு விஷயம்... ஒரு பகிர்வு.

ஒவ்வொரு நாளும் சனி ஓரை எத்தனை மணிக்கு வரும் என்று பலரும் கேட்டுள்ளனர். எனவே தினமும் எந்தநாளில், எந்த நேரத்தில் சனி ஓரை என்பது குறித்த பட்டியலை இங்கே உங்களுக்காகத் தந்திருக்கிறேன்.

இதனைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

சனி ஓரையும் நேரங்களும்...

திங்கட்கிழமை :-

காலை 7 மணி முதல் 8 மணி வரை, மதியம் 2- முதல் 3 மணி வரை,

இரவு  9 மணி முதல் 10 மணி வரை, பின்னிரவு 4 முதல் 5 மணி வரை,

செவ்வாய்கிழமை :-

காலை 11 மணி முதல்- நண்பகல் 12 மணி வரை, மாலை 6 மணி முதல் 7 மணி வரை, நள்ளிரவு 1 மணி முதல் 2 மணிவரை.

புதன்கிழமை :-

காலை 8 மணி - 9 மணி வரை, மதியம் 3 மணி - 4 மணி வரை, இரவு 10 - 11 மணிவரை.

வியாழக்கிழமை :-

அதிகாலை 5 மணி முதல் 6 மணி வரை, நண்பகல் 12 முதல்- மதியம் 1 மணிவரை, மாலை 7 மணி முதல்- 8 மணி வரை, நள்ளிரவு 2 மணி முதல் - 3 மணி வரை. 

வெள்ளிக்கிழமை:-

காலை 9 மணி முதல் - 10 மணி வரை, மாலை 4 மணி முதல் - 5 மணி வரை, இரவு 11 முதல் - நடுநிசி 12 மணி வரை,

சனிக்கிழமை:-

காலை 6 மணி முதல் - 7 மணி வரை, மதியம் 1 மணி முதல் - 2 மணி வரை, இரவு 8 மணி முதல் - 9 மணி வரை, பின்னிரவு 3 மணி முதல் 4 மணி வரை,

ஞாயிற்றுக்கிழமை :-

 காலை  10 மணி - 11 மணிவரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை, இரவு 12 மணி முதல் 1 மணி வரை.

இவை சனி ஓரை நேரங்கள். இந்த நேரங்களில், வங்கியில் பணம்  டெபாசிட் செய்வது, தோல் பொருட்கள் வாங்குவது ( பர்ஸ், தோல் பைகள், செருப்பு, ஷூ), விவசாய இடு பொருட்கள் வாங்குவது, (உரம், பூச்சி மருந்து, விதைகள், நடவு செய்வது) என்று செய்யலாம்.

தொழிற்சாலைகளில் பெரிய இயந்திரங்கள் நிறுவுவது, பூமிக்கடியில் நீர்நிலைத் தொட்டி, பெட்ரோல் பங்குகளில் சேமிப்பு டேங்க் நிறுவுதல் என்று செய்யலாம்.  

சனி ஓரையும் கீழ்நோக்கு நாளும் சேர்ந்த நாட்களில் கிணறு தோண்டுதல், தூர்வாருதல், ஆழ்குழாய் கிணறு(போர்) தோண்டுதல் முதலானவற்றைச் செய்யலாம், 

சனி ஓரையில் செய்யக்கூடாதவை:-

பயணங்கள் கூடாது. ஒப்பந்தங்கள் போடவேண்டாம். சுப காரியங்கள் தவிர்ப்போம். முடி இறக்குதல், காது குத்துதல், திருமணம், வளைகாப்பு, சீமந்தம் முதலானவை செய்யக்கூடாது , ( வளைகாப்பும் சீமந்தமும் ஒரே நிகழ்வுதான் என நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு ஒருவிஷயம்..., வளைகாப்பு என்பது வேறு; சீமந்தம் என்பது வேறு. வேறு வேறு நிகழ்வு என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

சரி, இப்போது பரிகாரங்கள், வழிபாடுகள் பற்றி பார்ப்போம், 

திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற கோளறு பதிகம், நவகிரகங்களின் தோஷங்களையும் போக்கும் வல்லமை படைத்தது. அதிலும் குறிப்பாக சனிபகவானின் அருளையும் கருணையையும் ஒருங்கே பெறுவதற்கு,  கோளறு பதிகத்தை காலை மாலை இரண்டு வேளையும் படித்து வாருங்கள். துன்பங்கள் விலகும்.  நன்மைகள் பெருகும்!

என் நண்பர் ஒருவர் “ஐயா நான் கோளறு பதிகத்தை யூடியூப் - ல் கேட்டேன். கடினமான தமிழாக இருப்பதால் வாசிக்கவும் கடினமாக இருக்குமோ என நினைத்தேன். வாசித்தபிறகுதான் இவ்வளவு அற்புதமான, எளிமையான தமிழ்ப் பாடலையா கடினம் என நினைத்தேன் எனப் புரிந்துகொண்டேன். இப்போதுதான் அதன் இனிமையை உணர்ந்தேன்” என்று கூறினார். இதையேதான் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். மேலோட்டமாக படிக்காமல் ஆழ்ந்து உணர்ந்து படியுங்கள். சனிபகவானின் பரிபூரண அருளைப் பெறுவீர்கள்.

சனி பகவானுக்கு உரிய தானியம் எள். எனவே எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெய் கொண்டு தீபம் ஏற்றுவது மிகுந்த பலன்களைத் தந்தருளும்.  

அதேபோல், ஆலயங்களுக்கு விளக்கேற்ற நல்லெண்ணெய் வழங்குங்கள். அப்படிக் கொடுத்தது முதலாக, வட்டியும்முதலுமாக உங்களுக்கு பலன்கள் தேடி வருவதை உணருவீர்கள்.

எத்தனையோ ஆலயங்கள் விளக்கேற்றும் எண்ணெய் கூட இல்லாமல் இருளடைந்து உள்ளது. எனவே எண்ணெய் தந்து ஆலயத்தில் ஒளியேற்றுங்கள். உங்கள் வாழ்க்கை இதனால் ஒளிமயமாகும் என்பது உறுதி!

சனியின் ஆதிக்கம் உள்ளவர்கள், அதாவது சனி திசை நடப்பவர்கள், ஏழரை சனி காலத்தில் இருப்பவர்கள், அஷ்டம சனி நடப்பவர்கள், கண்டக சனி ஆதிக்கத்தில் உள்ளவர்கள், ஜாதகத்தில் சனி நீசமாக உள்ளவர்கள் ஆகியோர் இரும்பு விளக்கில் நல்லெண்ணெய் தீபமிடுங்கள். உங்கள் துன்பமெல்லாம் பறந்தோடும்.

வெகு முக்கியமாக, தினமும் காகத்திற்கு உணவு வைப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். மன உளைச்சலும் மனக்குழப்பமும் மனதில் பயமும் வரவே வராது. தெளிவும் திடமுமாக, சந்தோஷமும் அமைதியுமாக வாழ்வீர்கள்.

கருங்குவளை மலர் சனி பகவானுக்கு உரிய மலர். எனவே நீல வண்ண மலர்களையும் கருங்குவளை மலர்களையும் என சனீஸ்வரருக்கு சார்த்துங்கள். மலையளவு துயரங்கள் பனியென கரைந்து காணாமல் போய்விடும்.

சனி பகவானுக்கு கந்தல் உடை, அழுக்கு உடை, சுத்தமில்லாத உடல் இதெல்லாம் மிக பிடிக்கும், நீங்கள் இப்படி இருந்தால் மிக்க மகிழ்ச்சியோடு ஓடோடி வந்து உங்களை அணைத்துக்கொள்வார். அதாவது, சனி பகவான் உங்களைப் பிடித்துக்கொள்வார்.

எனவே சுத்தமான உடை, சுத்தமான தேகம் என்று எப்போதும் இருங்கள். சனி பகவான் உங்கள் பக்கம் நெருங்கக்கூட மாட்டார்.  

அதேபோல், அனுமனும் விநாயகரும் சனியிடம் இருந்து விலக்கு பெற்றவர்கள். எனவே, எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போல், விநாயகரையும் ஆஞ்சநேயப் பெருமானையும் முடிந்தபோதெல்லாம் வணங்கி வந்தால், இவர்களின் அருளால், நமக்கு சனியின் ஆதிக்கம் குறையும்.

இவர்களை எப்படி வணங்கவேண்டும்? இன்னும் என்னென்ன பரிகாரங்கள் உள்ளன?

அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

- தெளிவோம்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close