[X] Close

பிரதோஷத்துக்கு மறுநாள் சிவராத்திரி ஏன்? 13ம் எண்ணின் ரகசியம்; - மகா சிவராத்திரி ஸ்பெஷல்


mahasivarathiri

  • kamadenu
  • Posted: 03 Mar, 2019 11:30 am
  • அ+ அ-

வி.ராம்ஜி

மாசி மாதத்தில், தேய்பிறையில் வரும் பிரதோஷத்துக்கு மறுநாள்... மகாசிவராத்திரி. இது ஏன்? இதற்கு காரணம் என்ன?

புராணம் சொல்லும் விளக்கத்தைப் பார்ப்போமா?

என்றைக்கும் அழிவே இல்லாத அமிர்தம் கடையப்படுகிறது. தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் கடைகிறார்கள். மந்தார மலையே மத்தாகிறது.

அப்படிக் கடையும்போது முதலில் ஆலம், காலம் என்கிற இரண்டு விதமான விஷங்கள் வெளிவருகின்றன. உடனே சிவபெருமான், உலக மக்களின் நன்மைக்காக, அந்த விஷத்தை எடுத்துப் பருகினார். அதை அறிந்த பராசக்தி, அந்த விஷத்தை அப்படியே கண்டம் என்று சொல்லப்படுகிற தொண்டைப்பகுதியில் நிறுத்திவிடுகிறார். இதனால்தான் சிவபெருமானுக்கு, விடமுண்டகண்டன், நீலகண்டன், ஆலகாலநாயகன் என்றெல்லாம் பெயர்கள் அமைந்தன.

இதற்குப் பின்னே யோகசாஸ்திரங்கள் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கின்றன சிவாகம நூல்கள்.

நந்திதேவரின் கொம்புகளுக்கு நடுவே நின்று சிவனார் தாண்டவமாடுகிறார் என்கிறது புராணம்.

 முதலில்நந்தியின் கொம்பின் நடுவில் நின்று தாண்டவமாடுவது குறித்துப் பார்ப்போம். திருமந்திரத்தில்,

‘ஐந்து கரத்தனை யானை முகத்தனை

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்

புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே”

                          இந்தப் பாடலை படிக்கும் போது ஒரு சந்தேகம் வரக்கூடும். வினாயகர் சிவனின் மகன்தானே? நந்தி  மகன் என்று போடப்பட்டிருக்கிறதே என்று. சிவபெருமானே நந்தி தேவனாக குருவாக வந்தார் என்றும் சொல்வார்கள். அப்படி என்றால் வாகனமாகக் காட்டுவது எதனால்?

திருப்பட்டூர் பாஸ்கர குருக்கள் இதுகுறித்து விவரிக்கிறார்...

இதில் உள்ள சூட்சுமத்தை நந்தனாரின் பாடலின் ஒரு வரியில் கேட்கலாம். அதாவது அவரைக் கோயிலுக்குள் அனுமதிக்க மாட்டார்கள். காரணம்... அவர் ஜாதியில் குறைந்தவர். ஆனால் பக்தியில் அவருக்கு ஈடு சொல்ல அன்று யாருமே இல்லை.

சரி வாசலில் நின்று எட்டிப் பார்க்கலாம் என்றால், இந்த நந்தி மறைக்கிறது. அதை அவர் ”நான் செய்த பாவங்களல்லவா இப்படி நந்தியாக வந்து குறுக்கே நிற்கிறது” என்பார். ஆக சிவபெருமானை நாம் அடையத் தடையாக உள்ள வினைகள் எங்கே இருக்கும்? நம் உயிர் சக்தியில் பதிந்திருக்கும். அந்த உயிர் சக்தியே  நமக்குள் இருக்கும் நெருப்பாகிய குண்டலினி. அதாவது நம் தீ என்பதுதான் நந்தி  என்றானதாகச் சொல்வார்கள்.

பேராற்றல் சிவம் அவரே இயக்கும் வல்லமையுள்ள சக்தியாகி நம் உடலில் உயிராக விளங்குகிறார். இதையே குண்டலினி சக்தியாகிய நந்தியின் மேலேறி அமர்ந்திருப்பது போல் காட்டப்படுகிறது. விநாயகர் பார்வதியின் பிள்ளை என்று சொல்வார்கள்.

சிவத்தின் சக்தி அம்சமே குண்டலினியாகி, நம் மூலாதாரத்தில் உறைகிறது. எனவேதான் மூலாதாரத்தின் தேவதையாக கணபதிபெருமானைக் குறிப்பிடுவார்கள். விநாயகரின் உருவமானது யோகத்தை உணர்த்துவது என்பதை விநாயகர் அகவல் மூலம் ஔவை தெளிவுபடுத்துகிறார் என்கிறார் பாஸ்கர குருக்கள். .

குண்டலினியானவளை உச்சிக்கு ஏற்றி சிவத்தோடு கலக்கும் போது அமிர்தம் உண்ணலாம். குண்டலினி உச்சியில் இருக்கும் போது உச்சியில் சிவதாண்டவம் காணலாம். எல்லாமே யோக விஷயங்களின் குறியீடுகள்!

பாற்கடல் நம் உடல், நம் முதுகுத் தண்டே மந்தாரமலை, வாசி எனப்படும் சுவாசமே வாசுகி. இடகலை, பிங்கலை என்பது தேவர்கள், அசுரர்கள். வாசி யோகத்தின் மூலம் தவம் செய்யும் போது குண்டலினியானவள் மேலேறும் போது முதலில் நமது பாவ வினைகள்தான் மேலேறும். அது அனாகதம் வரும் போதே அதாவது ஆத்ம லிங்க தரிசனம் காணும் போதே இறையாற்றலோடு கலக்கின்றன. அவ்வாறு கலந்தால் எல்லா தவப் பலனும் வீணாகிவிடும் என்று குண்டலினி தேவியானவள் அதை விசுத்திக்கு மேலேறாமல் தடுத்து விடுவாள். விசுத்திக்கு மேலே பாவம் நீங்கிய சுத்த சக்தியே சிவத்தோடு ஒன்று சேர்ந்துசாதகனுக்கு அமிர்தம் கிடைக்கச்செய்யும்.

பிரதோஷம் என்றால் பகல் முடிந்து சூரியன் அஸ்தமிக்கும் காலம் என்பார்கள். அதற்கு இன்னொரு பொருளும் உண்டு. அதாவது ஒடுங்கும் நேரம். எல்லா புலன்களும் ஒடுங்கி மகாசக்தி மேலேறும் நேரம். ஶ்ரீவித்யை மார்க்கத்தில் தோள்கண்டம், நீள் கண்டம் என்று விளக்கியுள்ளனர் ஞானியர்! அண்டத்தையும் , பிண்டத்தையும் இணைக்கும் கண்டமாகிய தொண்டைப்பகுதியைக் குறித்துசொல்வார்கள். பக்தர்களை இரட்சிக்கும் படி, அவர்களது பாவமாகிய விஷத்தை சிவன் ஏற்றுக் கொள்கிறார். ஆனால், மகா சக்தியானவள் அது மேலேறினால் எல்லாம் கெடும் என்று அதை கண்டத்தில் நிறுத்துகிறாள்.  

ஆக பிரதோஷ வேளையில் (ஒடுங்கும் நேரத்தில்) நமது பாவங்களை சிவன் ஏற்றுக் கொள்வார் என்றுதான் பிரதோஷமும். இதற்கு முன்னால் ஒடுங்கியவர்களின் (நம் முன்னோர்களின்) பாவத்தை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும். பூமியில் உள்ளவர்கள் காலத்தை அறிந்து கொள்ளும் பொருட்டு சந்திரனைத் தேய்ந்து வளரச் செய்து அருளியதற்காகவும், அவ்வாறு தேயும் போது அமாவாசையை ஒட்டிய காலங்களில் ஏற்படும் பலவீனத்தை சரி செய்வதற்காகவும், சிவராத்திரி பூஜை ஏற்படுத்தப்பட்டது என்கிறார்கள் ஆச்சார்யர்கள். .

மேலைநாடுகளில் பதிமூன்றாம் நாள், அல்லது எண்ணைக் கண்டு பயப்படுவார்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால், நம் முன்னோர்களுக்கும் அந்த நம்பிக்கை இருந்தது. பதிமூன்றாவது நாளான (திதி) அன்று பிரதோஷ வேளையில் பூமிக்கு வானில் இருந்து விஷத்தன்மையும், தீயசக்திகளும் வருவதாக நம்பிக்கை இருக்கிறது. அந்த வேளையில் பூஜை செய்து உலகை காக்க வேண்டுவதே பிரதோஷ பூஜை என்றும். அந்த நேரத்தில் முறைப்படி அதாவது ஆகமவிதிப்படி கட்டப்பட்ட கோயில்களில்  இருந்தால் அந்த விஷத்தன்மை உள்ள தீயசக்தியின் பாதிப்பு மனித உயிர்களைத் தாக்காது என்பதுதான் சத்தியமான உண்மை!

ஆகவே, பிரதோஷத்துக்கு அடுத்து வரும் மகா சிவராத்திரியை, நாளைய தினத்தை (4.3.19) மறக்காமல் கொண்டாடுவோம். அந்தநாளில், சிவ தரிசனம் மேற்கொள்வோம். சிவ சிந்தனையில் லயித்திருப்போம்!

அன்பே சிவமே. சிவமே தவம்!

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close