[X] Close

தேர்வில் ஜெயிக்கச் செய்வார் செட்டிபுண்ணியம் ஹயக்ரீவர்!


chetti-punniyam-hayagrivar

செட்டிபுண்ணியம் யோக ஹயக்ரீவர்

  • வி.ராம்ஜி
  • Posted: 01 Mar, 2019 10:02 am
  • அ+ அ-

வி.ராம்ஜி

செட்டிபுண்ணியம் யோக ஹயக்ரீவரைத் தரிசித்தால், மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து, வெற்றி பெறுவார்கள் என்பது உறுதி என்கின்றனர் பக்தர்கள்.

சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் சிங்கபெருமாளை அடுத்து உள்ளது மகேந்த்ரா சிட்டி. இங்கே உள்ள ரயில்வே கேட்டில் இருந்து சுமார் 5 கி.மீ. பயணித்தால், செட்டிபுண்ணியம் கிராமத்தையும் இங்கே குடிகொண்டிருக்கும் யோக ஹயக்ரீவரின் ஆலயத்தையும் அடையலாம்.

குதிரை தலையுடன், அபயக் கரங்களைக் காட்டிக்கொண்டு, லக்ஷ்மிதேவியை மடியில் அமர்த்தியிருந்தால் அவர்... லக்ஷ்மி ஹயக்ரீவர். அவரே தனியே யோக நிலையில் இருந்தால், யோக ஹயக்ரீவர்.

யோக ஹயக்ரீவர்... கல்விக் கடவுள். கல்வி வரம் தரும் கண்கண்ட தெய்வம். யோகமும் ஞானமும் தந்தருளும் இறைவன் என்று கொண்டாடுகின்றனர் பக்தர்கள்.  

கல்விக்கடவுள் ஸ்ரீசரஸ்வதிதேவி. அப்பேர்ப்பட்ட சரஸ்வதிதேவிக்கே ஞானத்தை உபதேசித்த குரு யோக ஹயக்ரீவர். ஆகவே குரு ஹயக்ரீவரை வணங்கினால், சரஸ்வதி தேவியின் அருளையும் சேர்த்தே பெறலாம் என்பது ஐதீகம்!

அதேசமயம், ஹயக்ரீவரையும் சரஸ்வதிதேவியின் வணங்கி வந்தால், குழந்தைகள் கல்வியில் சிறந்துவிளங்குவார்கள் என்பது உறுதி என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

இங்கே, செட்டிபுண்ணியம் கிராமத்தில், அழகுற கோயில்கொண்டிருக்கிறார் ஹயக்ரீவர்.

புதன், வியாழன், ஞாயிற்றுக்கிழமைகளில், செட்டிபுண்ணியத்துக்கு வந்து, ஹயக்ரீவரை வணங்கிவருவது ரொம்பவே சிறப்பு வாய்ந்தது என்கிறார்கள் பக்தர்கள்.

ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலையும் துளசி மாலையும் அணிவித்து, மாணவர்களின் பேனாவை ஹயக்ரீவரின் திருவடியில் வைத்து வேண்டிக்கொண்டால், கல்வியில் சிறப்புறத் திகழலாம். ஹயக்ரீவருக்கு தேனபிஷேகம் செய்து, அந்த தேன் பிரசாதத்தை உட்கொள்வதும், மிகுந்த மகத்துவம் வாய்ந்தது. ஞாபக சக்தி அதிகரிக்கும். புத்தியில் தெளிவு உண்டாகும். மாணவர்கள், தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து வெற்றி பெறுவார்கள் என்பது உறுதி!

புதன், வியாழன், ஞாயிற்றுக்கிழமைகளிலும் திருவோணம் நட்சத்திர நாளிலும், செட்டிபுண்ணியத்துக்கு வந்து யோக ஹயக்ரீவரை வணங்குங்கள். ஞானமும் யோகமும் தந்தருள்வார் ஹயக்ரீவர்.

கோயில் நடை திறந்திருக்கும் நேரம் :

காலை 7.30 முதல் மதியம் 1 மணி வரை.

மாலை 4.30 முதல் இரவு 7.30 மணி வரை.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close