[X] Close

‘சனி ஓரை’யில் பொருள் வாங்குங்கள்; நிலைக்கும்! ’சனி ஓரை’யின் மகத்துவம் இதுதான்!


jodhidam-arivom-2-18

சனி பகவான்

  • kamadenu
  • Posted: 01 Mar, 2019 09:09 am
  • அ+ அ-

ஜோதிடம் அறிவோம் 2 - 18: இதுதான்... இப்படித்தான்!

- ஜோதிடர் ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே.

சனி பகவானின் காரகத்துவத் தன்மைகளை பற்றி பார்த்து வந்தது நினைவிருக்கிறதுதானே.

இதோ... இன்னும் பார்ப்போம்.

இதுவரை நீசம் என்ற நிலையைப் பற்றிப் பார்த்தோம். இனி நீசம் பங்கமானால் என்ன பலன் தரும் என்பதைப் பார்ப்போம்.

சனி பகவான், நீசம் பங்கமானால், ராஜயோகத்தைத் தரும். ஆமாம்... ராஜ வாழ்க்கையைத் தரும்.

அதேசமயம் ’இந்தா வைச்சுக்கோ’ என்று எடுத்தவுடனேயே வெற்றியைக் கொடுத்துவிடாது. ஆரம்பத்தில் சில தோல்விகளையும், மன உளைச்சலையும்  தந்துவிட்டு அடுத்து வெற்றி மேல் வெற்றிகளை குவிக்கச் செய்யும்.

இன்றைக்கு பிரபலமாக இருக்கின்ற நிறுவனங்களின் அதிபர்கள் ஆரம்ப காலத்தில் கடும் போராட்டங்களைச் சந்தித்து பின்னரே வெற்றிகரமான தொழிலதிபர்களாக இருக்கிறார்கள் என்கிற சக்ஸஸ் ஸ்டோரிகளே இதற்கு உதாரணம்.

நன்கு படித்தவர்கள் ஆரம்பகாலத்தில் சின்னச்சின்ன நிறுவனங்களில் வேலை பார்த்து, திடீரென உயர்ந்த நிறுவனங்களில் நல்ல பதவியில் எதிர்பாராத ஊதியத்துடன் பணியில் இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவ்வளவு ஏன்... உங்கள் வாழ்விலும் கூட இப்படி நிகழ்ந்திருக்கும்!

இதையெல்லாம் தருவது நீசபங்கமான சனியின் அருளால்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நீசமானால் என்ன மாதிரியான வேலை என்பதையெல்லாம் முந்தைய பதிவில் பார்த்தோம். 

இப்போது நீசம் பங்கத்தில் என்ன வேலை தரும்? அதையும் பார்ப்போம்.

மண்ணுக்குக் கீழே உள்ள பொருட்கள் தொடர்பான வேலை அனைத்தும் சனியின் காரகம்தான்.

நிலக்கரிச் சுரங்கம், பெட்ரோல் கிணறு, தங்கச் சுரங்கம், புதைபொருள் ஆராய்ச்சி, ஆழ்கடல் ஆராய்ச்சி, மீன் மற்றும் இறைச்சி ஏற்றுமதி மற்றும் வியாபாரம், தோல் வியாபாரம், 

தோல் பொருட்கள் உற்பத்தி மற்றும் வியாபாரம்   (பர்ஸ், செருப்பு , தோல் பைகள்), 

மெக்கானிக் வேலை, இயந்திரங்கள் இயக்குபவர், வாகனப் பழுது நிறுவனங்கள் அல்லது கூடங்கள்,

கரி, விறகு, மூங்கில் வியாபாரக்கடை, வர்ண வியாபாரம், ஆட்டோமொபைல் ஸ்பேர்ஸ் கடை, ஹார்டுவேர்ஸ் கடை, 

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.  

மேலே சொன்ன அனைத்தும், ஏதோ பெட்டிக்கடை வியாபார அளவில் என்று நினைத்துவிடாதீர்கள். எல்லாமே பெரிய அளவிலான வியாபார நிறுவனங்களாக இருக்கும்.

இதெல்லாம் தொழில் சார்ந்தது, வாழ்வியலில் சனி தருவதெல்லாம் சோதனை என்ற பெயரில் நம்மைப் பக்குவப்படுத்தி, இனி இவன் எதையும் தாங்கும் வல்லமை பெற்றவன், நேரம், பணம் என எதையும் திட்டமிட்டு சரியாகச் செயல்படுத்துபவன் என்ற திருப்தி சனி பகவானுக்கு வரும் போது அவர் தரும் உயரம், நீங்கள் எதிர்பாரத இன்ப அதிர்ச்சியாக இருக்கும். சொல்லப்போனால், அந்த் வளர்ச்சி கண்டு, நீங்களே திக்குமுக்காடிப்போவீர்கள்.

சுக்கிரன் தரும் யோகம் “ கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டினாலும்” அது நிலைப்பது கஷ்டம்தான்.

ஆனால் சனி தரும் யோகமானது தலைமுறைகளைத் தாண்டி நிலைத்து நிற்கும்படியான, எளிதில் அழிக்கமுடியாத சொத்துக்களாக அமையும்.

அதனால்தான் சனி ஓரையில் வங்கியில் போடப்படும் வைப்பு நிதிகள், எடுக்க வேண்டிய நிர்பந்தங்களே ஏற்படாமல் நிலையான வருமானத்தைத் தரும்.

அதேபோலத்தான், சனி ஓரையில் வாங்கப்படும் செருப்பு உள்ளிட்ட தோல் பொருட்கள் நீண்ட காலத்துக்கு உழைக்கும். அதாவது அதன் ஆயுட்காலம் தாண்டியும்  கூட உழைக்கும். நாம்தான் பரிதாப்பட்டு  அந்த பொருட்களுக்கு ஓய்வு தருவோம்.

சனி நீசமானால் நித்ய கண்டம், பூரண ஆயுசு. சனி நீசபங்கமானால்  பூரணமான, நோயற்ற, ஆரோக்கியமான வாழ்வு மற்றும் நீண்ட ஆயுளைத் தரும்.  

சனிபகவானின் அருட்பார்வை பெறவும், நீசத்தன்மையை மாற்றி நல்ல பலன்கள் பெறவும் என்ன மாதிரியான வழிபாடுகள்,எந்த தெய்வங்கள், எந்த ஆலயங்கள் என்பதையெல்லாம் தொடர்ந்து அடுத்த பதிவில் பார்ப்போம்.

- தெளிவோம்

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close