[X] Close

கல்யாணம், பிள்ளை வரம், வியாபாரம், உத்தியோகம்! குரு பகவானே காரணம்; ஏன், எப்படி?


jodhidam-arivom-2-14

திட்டை - குரு பகவான்

  • kamadenu
  • Posted: 15 Feb, 2019 09:33 am
  • அ+ அ-

ஜோதிடம் அறிவோம் 2 (14) : இதுதான்... இப்படித்தான்!

ஜோதிடர் ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே! 

குருபகவான் பற்றிய தகவல்களைப் பார்த்தோம். இன்னும் சிலவற்றையும் அறிந்துகொள்வோம்.

குரு நீசமடைய என்ன மாதிரியான பலன்களைத் தருவார்? நீசபங்கம் அடைந்தால் என்னவிதமான பலன்களைத் தருவார்? என்று  பார்ப்போம்.

குருபகவான் பரிபூரண சுபர் ஆவார். ஒருவரின் ஜாதகத்தில் குருபகவான் நல்ல ஸ்தானத்தில் அமர்ந்து எந்த கிரகங்களையெல்லாம் பார்க்கிறாரோ அந்த கிரகங்களும் தங்கள் அசுபத் தன்மையை விடுத்து நற்பலன்களை தரத் துவங்கிவிடும்.

இப்படி, தான் மட்டுமின்றி தன்னுடைய பார்வையில் படுபவர்களையும் புனிதமாக்கும் குருபகவான் "நீசம்" என்ற நிலை அடைந்தால் என்னாகும்?

ராசிக் கட்டத்தில் குரு, மகர ராசியில் இருந்தால் நீசமடைவார். அப்படி நீசமான குரு அந்த ஜாதகருக்கு எந்த உதவியும் செய்யமாட்டார். ஆமாம்... அதுமட்டுமில்லாமல், ஒரு பழமொழி உண்டு ஞாபகம் இருக்கிறதா? ‘உதவி செய்யாட்டியும் உபத்திரவம் செய்யாம இருந்தாலே போதும்’ என்று! குரு பகவான், உதவி செய்யமாட்டார்; ஆனால் அதேசமயம் உபத்திரவங்களைச் செய்வார்.

 அதாவது, வளர்ச்சியைத் தடுப்பார். சுப காரியங்கள் ஈடேறுவதில் முட்டுக்கட்டை போடுவார். விரக்தியின் விளிம்பில் கொண்டுபோய் நம்மை நிறுத்துவார், ஆரோக்கியத்தைக் குறைப்பார். இந்த வாழ்க்கையே போதும்டா சாமீ... என்ற நிலைக்குக் கொண்டுவந்து விடுவார்.

குரு நீசபங்கம் அடைந்தால்:- பிறக்கும் போது குழந்தை பிழைக்குமா ? பிழைக்காதா? என்ற பதைபதைப்பை உண்டாக்கி.... பிறக்கும் போதே மரணத்தை வென்ற குழந்தை என புகழ் பாடும் அளவுக்கு ஆரோக்கிய மேன்மையைத் தந்தருள்வார்.

அதன் பின் குழந்தை வளர வளர பெற்றோருக்கும் உடன் பிறந்தோருக்கும் வளமானதொரு வாழ்க்கையை ஏற்படுத்தித் தருவார்.

கல்வியில், ஆரோக்கியத்தில், வசதி வாய்ப்புகளில், வேலை வாய்ப்பில், சொந்த வீடு வாங்குவதில், சொகுசு வாகனங்கள் வாங்குவதில்,

ஆன்மிக ஈடுபாட்டில், புனிதப் பயணம், சுற்றுலாப் பயணம்  மற்றும் அயல்நாட்டு பயணங்கள் என பொதுவாகவே பயணங்களில் ஆதாயத்தை அள்ளித்தருவார்.

மனதிற்கு பிடித்த வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொடுப்பார்.  குழந்தைச் செல்வமும் சகல செல்வங்களும் தந்து அருளுவார்.

சரி... குருவின் அருளாசியை முழுமையாகப் பெறவும், மேலும் வலுவாக மாற்றிக் கொள்ளவும் என்ன செய்யலாம்?

ஆலங்குடி குருபகவான் பரிகார தலத்துக்குச் செல்லுங்கள். அங்கு சென்று குரு பகவானை வழிபடுங்கள்.

தஞ்சாவூர் அருகில் உள்ள திட்டை திருத்தலத்தில் குடிகொண்டிருக்கும் ராஜகுருவை தரிசித்து வேண்டிக்கொள்ளுங்கள்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பட்டமங்கலம் குரு ஸ்தலத்துக்குச் சென்று வாருங்கள். குருவின் பரிபூரணஅருளைப் பெறுவீர்கள்.

மேலும், சிவாலயங்களில் உள்ள தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வருவதும் சிறப்பு வாய்ந்தது.

சந்நிதியில், எந்தத் தெய்வத்தையும் நேருக்கு நேர் நின்று வழிபடக் கூடாது, ஆனால் குரு மற்றும் தட்சிணாமூர்த்தி இவர்களை மட்டும் நேருக்கு நேர் நின்று வணங்கவேண்டும். குரு பிரம்மாவையும் அப்படித்தான் நேராக நின்று வணங்கவேண்டும்.

திருமண வரத்தையும் புத்திர பாக்கியத்தையும் அருளுகிறவர் குருபகவான். அவர் கருணையின்றி கல்யாணமும் நிகழாது. பிள்ளை வரமும் கிடைக்காது.

ஆக குருபகவானை வியாழன்தோறும் தொடர்ந்து வணங்கி வந்தால், தடைப்பட்ட கல்யாணம் நடந்தேறும். அதேபோல் சந்தான பாக்கியம் எனப்படும் குழந்தை வரமும் கிடைக்கப் பெறலாம்.

அடுத்து, மிக முக்கியமான ஒன்றைப் பார்ப்போம்.

வாழ்வில் வளமாக வாழவும் குறைவற்ற செல்வத்தோடு வாழவும்தான் எல்லோருமே ஆசைப்படுகிறோம். தொழில் செய்பவர்கள், வியாபாரத்தில் வெற்றி பெறவேண்டும் என்றும் பணியில் இருப்பவர்கள், அடுத்தடுத்து சம்பள உயர்வு, பதவி உயர்வு என்று வளரவேண்டும் என்றும் ஆசைப்படுகிறோம். ஏங்குகிறோம். தவிக்கிறோம்.

இதற்கான சில பரிகாரங்களைப் பார்ப்போம்.

வியாழன்தோறும் குருபகவானுக்கு கொண்டைக் கடலை மாலை அணிவித்து வேண்டிக்கொள்ளலாம். கொண்டைக்கடலை சுண்டல் நைவேத்தியம் செய்து விநியோகிக்கலாம். சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு வழங்குவது சிறப்பு.

மேலும் குரு பகவானுக்கு, மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்யுங்கள். மஞ்சள் வஸ்திரம் சாத்தி வழிபடுங்கள்.

குரு பகவான் என்பவர் குழந்தைகளின் அம்சம் என்கிறது ஜோதிட சாஸ்திரம். எனவே, அக்கம்பக்கத்தில் உள்ள குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி அவர்களோடு சிறிது நேரம் செலவழியுங்கள்( குரு  இனிப்புப் பிரியர். குறிப்பாக லட்டு என்றால் குருபகவானுக்கு கொள்ளைப்பிரியம்).

பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள், அவர்களைப் பராமரிக்கும் ஆதரவற்றோருக்கான இல்லங்களுக்கு முடிந்தவரை உதவுங்கள்.

பள்ளிக் குழந்தைகளுக்கு புத்தகம், பேனா, காலணி, சீருடை என வாங்கித் தாருங்கள். குரு என்றுமே உங்களை கைவிட மாட்டார் என்பது உறுதி!

அதேபோல், தங்கத்துக்கு அதிபதி குரு. எனவே வசதியற்ற குடும்பத்தில் நடைபெறும் திருமணத்திற்கு தாலி செய்து தாருங்கள்(இலவசத் திருமணங்கள் நடத்துவதன் காரணமே குரு அருளைப் பெறுவதற்காகத்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்). நாம் மட்டுமின்றி நம் தலைமுறையே வாழ்வாங்கு வாழும்.

மகான்களையும் , குருமார்களையும், சித்தர் பெருமக்களையும், உங்கள் ஆசிரியரையும் மனதில் நினைத்து வணங்கி வாருங்கள். வாழ்வில் வசந்தத்தைக் காண்பீர்கள்.

அதேபோல் ஆலயங்களில் நடைபெறும் உழவாரப் பணி முதலான சேவைகளில் கலந்துகொள்ளுங்கள். இந்தப் புண்ணியம் அனைத்தும் உங்கள் சந்ததியினரை வந்தடையும். வாழ்வாங்கு வாழச் செய்யும்!

நேர்மை, உண்மை, பக்தி, தியாகம், கருணை... இதுவே குருவின் அடையாளம். கூடுமானவரை, உங்கள் வாழ்க்கையில் இவையெல்லாம் இருக்கட்டும். ஏமாற்றம், நோய்த் தாக்கம், வாழ்வில் சரிவு என எதையும் உங்கள் வாழ்நாளில் பார்க்கவே மாட்டீர்கள் என்பது சத்தியம்.

கிருஷ்ண பரமாத்மா என்னும் வழிகாட்டி (குரு) இருந்ததால்தான் குறைந்த அளவிலான படை பலம் இருந்தும் வெற்றிக்கனியை பாண்டவர்கள் அடைய முடிந்தது.

ஆக குருபகவான் பக்கத்துணையாக இருந்துவிட்டால், நாம் இந்த வாழ்க்கைப் பயணத்தில் எதற்காகவும் யாருக்காகவும் எப்போதும் பயப்படத்தேவையே இல்லை!

குருவே சரணம் என்று குருவை கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள். குருவருள் நிச்சயம்!

அடுத்து... சுக்கிர யோகம்.

இறந்தவர்களையும் உயிர்ப்பிக்கும் வல்லமை பெற்ற ஒரே ஆச்சார்யன் சுக்ராச்சாரியர் எனும் சுக்கிர பகவானைப் பற்றிய விபரங்களைப் பார்ப்போம்!

- தெளிவோம்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close