மாசி பிறப்பு; தர்ப்பணம்; பீஷ்ம தர்ப்பணம்

தர்ப்பணம்
வி.ராம்ஜி
மகத்துவம் மிக்க மாசி மாதம் நாளை (13.2.19) பிறக்கிறது. மாதப் பிறப்பில், முன்னோரை ஆராதித்து, அவர்களுக்குத் தர்ப்பணம் செய்வது, மகோன்னதமான பலன்களைத் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். அதுமட்டுமல்ல, நாளை பீஷ்டாஷ்டமியும் கூட!
முன்னோர்களை ஆராதிக்கும் விதமாக, வருடந்தோறும் அவர்கள் இறந்த திதியில், திவசம் எனும் சடங்குகள் செய்து, முன்னோரை வணங்குவோம். இன்னும் சிலர், மாதந்தோறும் அமாவாசையில் தர்ப்பணம் செய்வார்கள்.
ஆனால் வருடத்துக்கு 96 தர்ப்பணங்கள் செய்யச் சொல்கிறது சாஸ்திரம் என்று தெரிவிக்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
எந்த நிலை வந்தாலும், எந்தச் சூழல் ஏற்பட்டாலும் தர்ப்பண காரியங்களை சிரத்தையுடன் செய்யச் செய்ய... அவை பன்மடங்கு பலனாக நம் பிள்ளைகளுக்குப் போய்ச்சேரும் என்கிறார். நம் சந்ததியினருக்கு வங்கி டெபாசிட் போல், நாம் சேர்த்து வைக்கும் சொத்துகள் இவைதான் என தர்ப்பண காரியங்கள் குறித்து வலியுறுத்துகிறார்கள்.
மாதந்தோறும் அமாவாசை நாளிலும் தமிழ் மாதப் பிறப்பின் போதும் தர்ப்பணம் செய்து, பித்ருக்களை ஆராதிக்க வேண்டும் என்கிறது தர்மசாஸ்திரம். தை மாதம் முடிந்து மாசி தொடங்குகிறது. நாளைய தினம் 13.2.19 மாசி பிறக்கிறது.
அதேபோல், நாளைய மாசி மாதப் பிறப்புடன் பீஷ்டாஷ்டமியும் சேர்ந்து வருகிறது. பீஷ்மர் முக்தி அடைந்தநாள். எண்ணற்ற சிஷ்யர்களைக் கொண்டிருந்த பீஷ்மருக்கு, அந்த மகா குருவுக்கு இன்றைய நாளில் நாம் ஒவ்வொருவரும் தர்ப்பணம் செய்து அவரை ஆராதிக்கச் சொல்கிறது புராணம்.
எனவே, மாசி பிறப்புநாளில், பீஷ்டாஷ்டமியில் நம் முன்னோரை நினைத்தும் பீஷ்மரை நினைத்தும் தர்ப்பணம் செய்து ஆராதிப்போம். நம் முன்னோர் ஆசியும் குரு பீஷ்மரின் அருளும் கிடைக்கப்பெறுவோம்!
முடிந்தால், இயலாதோருக்கு உடையோ உணவோ வழங்கி உதவுங்கள். நீங்கள் செய்யும் காரியத்தால் குளிர்ந்து போய், பித்ருக்கள் உங்களையும் உங்கள் சந்ததியினரையும் ஆசீர்வதிப்பார்கள் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்!
இதை மிஸ் பண்ணாதீங்க...
- ’எஜமான்’ படத்துல ரெண்டு பாட்டு; ராஜா சார் எனக்காக போட்ட மெட்டு – மனம் திறந்த பாக்யராஜ்
- ’ரஜினி கேரக்டரில் சிவகுமார்; சிவகுமார் கேரக்டரில் ரஜினி!’ - எஸ்.பி.முத்துராமனின் ‘மாத்தியோசி’ ஹிட்டு
- ரஜினியை கமல்னு, கமலை ரஜினின்னு கூப்பிட்டிருக்கேன்! இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் கலகல
- ‘பாக்யராஜ் பத்தி தப்புக்கணக்கு போட்டுட்டேன்! - இளையராஜா ஓபன் டாக்