[X] Close

செவ்வாய், புதன், குரு பகவானின் பரிபூரண அருளுக்கு... ஆலயங்கள், வழிபாடுகள், பரிகாரங்கள்


jodhidam-arivom-2-13

முருகப்பெருமான்

  • kamadenu
  • Posted: 12 Feb, 2019 10:21 am
  • அ+ அ-

ஜோதிடம் அறிவோம் 2 (13): இதுதான்... இப்படித்தான்! 
ஜோதிடர் ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே!
நீசம் அடைந்த கிரகங்களை பலப்படுத்தவும், யோகமாக மாற்றவும் வணங்க வேண்டிய தெய்வங்கள், ஆலயங்கள் பற்றி பார்த்து வருகிறோம், இதுவரை சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய கோள்களை பற்றி பார்த்தோம், இனி மற்ற கோள்களை பார்ப்போம்.


செவ்வாய் நீசம் என்றால் :- வைத்தீஸ்வரன் கோவில், இது செவ்வாயின் ஆதிக்கம் நிறைந்த பரிகார ஸ்தலம். மற்றும் முருகனின் அனைத்து ஆலயங்களும் செவ்வாய் ஆதிக்கம் நிறைந்த கோயில்கள்தான். ஏனெனில் செவ்வாயின் அதிதேவதை முருகப்பெருமான். எனவே முருகனை வழிபட்டால்தான் செவ்வாயின் கருணை நமக்கு கிடைக்கும், 
மேலும் சக்தி வடிவான அம்மன் ஆலயங்கள் அனைத்தும் செவ்வாயின் ஆதிக்கம் நிறைந்தவை என்பதை மறக்காதீர்கள். .
மேற்கண்ட ஆலயங்களுக்கு அபிஷேகப் பொருட்கள் வாங்கித் தாருங்கள். அதாவது இளநீர், சந்தனம், பன்னீர், நெய், நல்லெண்ணெய் , கஸ்தூரி மஞ்சள், பால், தயிர் முதலான பொருட்களை தானம் தருவது செவ்வாயின் அருட்கடாட்சத்தை மேலும் அதிகப்படுத்தும்.


அதேபோல், பைரவரை வழிபடுவதும் பெரும் நன்மை தரும். செவ்வாய் ... ஊரைக் காக்கும் பைரவர் என்னும் நாய் அம்சம், ஆகவே தெரு நாய்களுக்கு உணவு படைப்பது அளவில்லாத நன்மைகளை வாரி வழங்கும். முடிந்தால் தெரு நாயொன்றை வளர்க்கப் பாருங்கள், பெரும் நன்மை பெறுவீர்கள்,
செவ்வாயின் விருட்சம் வில்வம், ஆகவே வில்வ மரத்திற்கு நீர் ஊற்றி வணங்கி வருதல், அல்லது வில்வமரம் வளர்த்தல் நல்ல பலன்களைத் தரும். சிவபெருமானுக்கு வில்வ அர்ச்சனை செய்து வணங்கி வருவது மகோன்னதமான பலன்களை வழங்கியருளும்! .
மேலும் பவள மாலை அல்லது பவள மோதிரம் அணிவது சிறப்பு.
அடுத்து புதன் கிரகம். 
உங்கள் ஜாதகத்தில் புதன் நீசமாக இருந்தால்:-

திருவெண்காடு ஆலயம் புதன் பரிகாரத் தலம், மதுரை மீனாட்சியம்மன் ஆலயமும் புதன் ஸ்தலமே.
திருச்சி ஸ்ரீரங்கநாதர் ஆலயம் சுக்கிர     ஸ்தலம் என்பதை அறிவீர்கள்தானே. ஆனால் ஸ்ரீரங்கம் ஆலயம், புதன் ஸ்தலமாகவும் இருப்பது வெகு சிலர் மட்டுமே அறிந்த ஒன்று.
ஆமாம்... ரங்கநாதரையும் ரங்கநாயகியையும் வெள்ளிக்கிழமை அன்று தரிசித்து வந்தால்,  சுக்கிரனின் ஆதிக்கமும், புதனன்று வணங்கி வந்தால் புதன் பகவானின் பேரருளும் கிடைப்பது உறுதி. 
புதன் பகவான் தான் கல்விக்கு அதிபதி. ஹயக்ரீவர் இவரும் கல்விக்கு துணை நிற்பவர்தான். கல்விக்கடவுளே ஹயக்ரீவர்தானே!  ஆக ஹயக்ரீவ‌ரை வணங்கி வந்தால் தடைப்பட்ட கல்வியில் முன்னேற்றம் ஏற்படும், ஞாபக சக்தி அதிகரிக்கும். அதாவது புதன் பகவானின் அருளையும் சேர்த்துப் பெறலாம். 
புதன் நீசமடைந்து பின் நீசபங்கமானாலும் சில பாதிப்புகளை உண்டாக்காமல் இருக்க மாட்டார், புதன் கல்விக்கு மட்டும் அதிபதி அல்ல, நம் உடலில் மேல் தோல், நரம்பு மண்டலம், நெற்றி, நாக்கு, காது மடல், கழுத்து, தொண்டை, குரல் வளம் ஆகியவையும் புதனின் அம்சமே.
எனவே ஒரு சிலருக்கு கை கால் நடுக்கம், தோலில் அலர்ஜி, தேமல், வெண்படை, நரம்புத் தளர்ச்சி, வெரிகோஸிஸ் என்னும் நரம்புச் சுருட்டல் நோய் என இதில் ஏதாவது ஒரு பாதிப்பு இருக்கும்.
இதற்கெல்லாம் தீர்வு திருவெண்காடு ஸ்வேதராண்யஸ்வரரையும் ர் பிரம்ம வித்யாம்பிகையையும்  வணங்கி வந்தாலும், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரரை வணங்கி வந்தாலும் பாதிப்புகள் நீங்கி நலமோடு வாழலாம்.
ஆனாலும் இந்த பாதிப்புகள் அனைத்தும் தற்காலிகமானது தான், காரணம் நீசம் - பங்கம் ஆவதால் இந்த பாதிப்புகள் வந்தாலும் குறிப்பிட்ட கால அளவு மட்டும் நம்மிடம் இருந்து விட்டு பிறகு விலகி விடும்.


புதன் மகா விஷ்ணுவின் அம்சம். எனவே அனைத்து பெருமாள் ஆலயங்களும் புதன் ஆலயம்தான். எனவே உங்களுக்கு அருகில் உள்ள பெருமாள் ஆலயங்களுக்கு புதன்கிழமை அன்று துளசிமாலையுடன் சென்று தரிசியுங்கள். எல்லா நன்மைகளும் உங்களைத் தேடி வரும்.
விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பதும் கேட்பதும் நல்ல விளைவுகளையும் நல்ல நல்ல அதிர்வுகளையும் உண்டாக்கும்.
புத்திசாலித்தனம்,  அறிவாளியாக பிரகாசிப்பதில் அனுமனைப் போல் அருளக்கூடிய தெய்வ சக்தி ஏதுமில்லை என்பார்கள். எனவே அஞ்சனை மகனை வணங்குங்கள். புத்திசாலித்தனம் பெருகும். புத்திக்கூர்மையுடனும் தெளிந்த சிந்தனையுடனும் மிகச்சரியான திட்டமிடலுடனும் காரியத்தில் செயலாற்றுவீர்கள்.
புதன் பகவான், கல்வி, கலை, எழுத்து, பதிப்பகம், வங்கிப் பணி முதலானவற்றையும் குறிப்பவர்.  எனவே இந்தத் துறைகளை சார்ந்தவர்கள் தொடர்ந்து வணங்கிவந்தால், பதவி, புகழ், அந்தஸ்து என உயர வைத்து அழகு பார்க்கும். .
அடுத்து குருபகவான் நீசமடைந்தால் :- குரு "பரிபூரண சுபர்" எனப்படுபவர் .அதனால்தான் சொக்கத்தங்கம் என்னும் சுத்தமான தங்கத்துக்கு அதிபதி குரு பகவான் என்று போற்றப்படுகிறார். 


உடலை வலிவு படுத்தும் "கொண்டைக் கடலை" இவரின் தானியம். 
மரங்களின் அரசன் என அழைக்கப்படும் "அரச மரம்" இவரின் விருட்சம். 
இப்படி பல சிறப்பான அம்சங்களைக் கொண்டவர் குருபகவான். ஒருவர் ஜாதகத்தில் எப்படிப் பட்ட தோஷம் இருந்தாலும் குருவின் பார்வை பட்டால் தோஷம் நீங்கும் என்பது ஜோதிட விதி.
இப்படி சிறப்பு வாய்ந்த குருபகவான் நீசம் அடைந்தால் என்ன செய்வார்? நீசபங்கம் அடைந்தால் என்ன பலன்களையும் தருவார்? 
அடுத்த பதிவில் பார்ப்போம்.
- தெளிவோம்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close