[X] Close

சூரிய பலம், சந்திர பலம் தரும் கோயில்கள்; ஜோதிடம் அறிவோம் 2 (12)


jodhidam-arivom-2-12

திருக்கடையூர் அபிராமி

  • kamadenu
  • Posted: 08 Feb, 2019 09:44 am
  • அ+ அ-

ஜோதிடர் ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே.

நீசபங்க ராஜயோகம் பற்றி பார்த்து வருகிறோம், நினைவு இருக்கிறதுதானே!

எப்படி இந்த யோகம் நமக்கு பலன்களைத் தரும்? எப்போது தரும்? எப்படித் தரும்? இன்னும் விபரமாகப் பார்ப்போம்.

நீசபங்கம் அடைந்த கிரகம் முதலில் நீசத்திற்கான அவயோக பலன்களை தந்து பிறகு நீசபங்கத்திற்கான யோக பலன்களை தரும்.

மாற்று வேட்டி கூட இல்லாத ஒருவருக்கு ராஜ யோகத்தை தந்து வளமாக வாழ்கிறார் என்று கடந்தமுறை சொன்னேனில்லையா? அது போல கடும் சிரமங்களைத் தந்து, ஒரு சொடுக்கு போடுகிற நேரத்தில் யோகமான வாழ்வையே தந்திடும்.

 வாசகர்கள் பலர் நீசபங்கத்திற்கான சில விதிமுறைகள் இருப்பதாக நான் குறிப்பிட்டதை விவரித்து எழுதுமாறு கேட்டுள்ளனர்.

அது  ஜோதிட வகுப்பு’ போல ஆகிவிடும் என்பதால் வேண்டாம் என நினைத்தேன், பலரும் கேட்டதற்காக அந்த விதிகளைத் தருகிறேன்.

1) நீச கிரகம் மற்றொரு நீச கிரகத்தைப் பார்த்தால் நீசம் பங்கமாகும்.

(உம் - மேஷத்தில் சனி - துலாத்தில் சூரியன் - ஒன்றுக்கொன்று 7 -ம் பார்வை)

2) நீச கிரகத்தை உச்ச கிரகம் பார்த்தால் நீசம் பங்கமாகும்.(உம் - விருச்சிகத்தில் சந்திரன் - கடகத்தில் குரு - குருபகவான் 5-ம் பார்வையாக சந்திரனைப் பார்ப்பார்)

3) நீச கிரகம் பரிவர்த்தனை பெற நீசம் பங்கம் ஆகும்.(உம் - கடகத்தில் செவ்வாய் நீசம் - விருச்சிகத்தில் சந்திரன் நீசம், அதாவது சந்திரன் வீட்டில் செவ்வாய், செவ்வாயின் வீட்டில் சந்திரன்)  என தங்களுக்குள் வீடு மாறி அமர்ந்ததால் பரிவர்த்தனை யோகம் ஏற்பட்டு நீசபங்கம் ஆகின்றது.

4) நீசமடைந்த கிரகம் அமர்ந்த வீட்டின் அதிபதி ஆட்சி பலம் பெற நீசம் பங்கமாகும். (உ. ம் கன்னி ராசியில் சுக்கிரன் நீசம். கன்னி ராசியின் அதிபதி புதன் கன்னி ராசியில் இருக்க சுக்ரனுக்கு நீசம் நீங்கி நீசபங்கம் ஆகும்.

5) நீசம் பெற்ற கிரகம், நவாம்சம் என்னும் கட்டத்தில் ஆட்சி வீட்டில் அமர நீசபங்கம் ஆகும்.(உம் - புதன் மீன ராசியில் நீசம், ஆனால் நவாம்சத்தில் புதன் மிதுனம் அல்லது கன்னி ராசியில் இருந்தால் நீசம் பங்கமாகும்)

6) நீசம் அடைந்த கிரகம்,  நவாம்சத்தில் உச்சம் அடைய நீசம் பங்கமாகும், ( உம் - குரு மகரத்தில் நீசம். ஆனால் நவாம்சத்தில் கடக ராசியில் இருந்தால் உச்சம் என்ற மதிப்பைப் பெற்று, நீசம் என்ற நிலை நீங்கி நீசபங்கம் ஆகிறது.

7) நீசம் அடைந்த கிரகம் நவாம்சத்திலும் நீசம் பெற நீசபங்கம் ஆகும்.(உம் - புதன் மீனத்தில் நீசம், நவாம்ச கட்டத்திலும் மீன ராசியில் இருந்தால் "நீச வர்க்கோத்தமம்" என்னும் சிறப்பு அந்தஸ்து பெற்று நீசபங்கம் ஆகும்.

8) நீசம் பெற்ற கிரகம், கேந்திர ஸ்தானத்தில் நட்பு கிரக தொடர்பு பெற நீசபங்கம் ஆகும். (உம் - சனி மேஷத்தில் நீசம் அதற்கு கேந்திரத்தில் சுக்கிரன் இருக்க நீசபங்கம் ஆகும் (கேந்திரம் - 1.4.7.10 ).

9) குரு பார்வை கோடி நன்மை தரும் என்பது ஜோதிட வாக்கு, ஆக நீச கிரகத்தை குரு பார்க்க நீசத்தன்மை குறைந்து சுபபலன் தரும்.

ஆக இத்தனை விதிமுறைகள் இருப்பதால் நீச கிரகம் எந்த வகையிலாவது நீசம் நீங்கி நீசபங்கம் அடைந்து விடும்.

சரி இப்போது என்ன மாதிரியான பலன்களைத் தரும் என்று பார்ப்போமா?

சாதாரண நிலையில் இருப்பவரையும் சமூகத்தில் மிகப் பெரிய அந்தஸ்தோடு வாழ வைக்கும்.

கல்வியில் சிறிய பின்னடைவை சந்திக்க வைத்து, பிறகு சாதிக்க வைக்கும்.

வறுமையின் எல்லை வரை அழைத்துச் சென்று குபேர யோகத்தை அள்ளித்தரும்.

வாடகை கூட தர முடியாமல் அவமானப்பட வைத்து பிறகு பல வீடுகளை வாங்க வைக்கும்.

தகுதிக்கேற்ற வேலை கிடைக்காமல் அலைக்கழித்து திடீரென அயல் நாட்டு வேலை கிடைத்து மொத்த வாழ்வையே மாற்றித் தரும்.

ஆக மொத்தம் game changer என்ற வாழ்க்கையின் போக்கை மொத்தமாக மாற்றி வளம்பட வாழ வைக்கும் யோகமே இந்த "நீசபங்க ராஜ யோகம்!"

சரி எப்போது பலன் தரும்?

நீசபங்கம் பெற்ற கிரகத்தின் திசா நடக்கும் போது அல்லது (எந்த திசை நடந்தாலும்) புத்தி நடக்கும் போது நிச்சயமாகப் பலனை தரும்.

ஒரு விஷயத்தை இங்கே நன்றாகப் புரிந்து கொள்ளவேண்டும். நல்ல நேரம் என்பது சொல்லிக் கொண்டு வராது, சட்டென்று ஒரு விநாடியில் ஆரம்பித்து யோகத்தை வாரி வழங்க ஆரம்பித்து விடும். எனவே எப்போதும் எல்லாத் தருணங்களிலும் அலர்ட்டாகவே இருங்கள். குறிப்பாக, சோதனைக்காலங்களிலும் வேதனைக்காலங்களிலும் மிக உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டே இருங்கள்.

அடுத்து, எந்த தெய்வத்தை வணங்கினால் மேலும் நற்பலன்கள் பெறலாம் என்பதைப் பார்க்கலாம்.

உங்கள் ஜாதகத்தில் எந்த கிரகம் நீசபங்கம் ஆனது என்பதை அறிந்து கொண்டு, அந்த கிரகம் தொடர்பான ஆலயங்களுக்குச் சென்று வாருங்கள். நல்ல பலன்களைத் தொடர்ந்து பெறுங்கள். கீழே கிரகமும் அதன் தொடர்பான ஆலயங்களையும் தந்துள்ளேன்.

உங்கள் ஜாதகத்தில் :- 

சூரியன் நீசம் என்றால்:- கும்பகோணம் அருகில் உள்ள சூரியனார் கோயில்லுக்குச் சென்று வாருங்கள் நன்மைகள் பல மடங்காகும்.

தினமும் காலையில் அதாவது சூரியோதயத்தில் சூரிய பகவானை தரிசியுங்கள்,

ஆதித்ய ஹிருதயம் படியுங்கள் அல்லது கேளுங்கள். ஆன்ம பலம் பெறுவீர்கள்.

சூரியனின் சமித்து எருக்கு, எனவே வெள்ளெருக்கு விநாயகரை வீட்டில் வைத்து வழிபடுங்கள். நன்மைகள் கூடும்.

விநாயகருக்கு எருக்கம் பூ மாலை சூடி வழிபடுங்கள். நன்மைகள் வந்து நம்மைத் திக்குமுக்காடச் செய்யும்.

சந்திரன் நீசம் என்றால்:- திருமலை திருப்பதி சந்திர ஸ்தலம் ஆகும். எனவே ஏதாவதொரு திங்கட்கிழமை அன்று ஸ்ரீனிவாச பெருமாளை தரிசனம் செய்து இரவு தங்கி வாருங்கள், அதன் பிறகு ஏற்படும் நற்பலன்களை நீங்களே நம்ப முடியாத அளவுக்கு இருக்கும்.

மேலும் தஞ்சாவூர் திருவையாறு அருகில் உள்ள திங்களூர் சென்று கைலாசநாதரை வணங்குங்கள். நன்மைகள் அதிகமாகும்.

ஆதி சங்கரர் அருளிய "செளந்தர்ய லஹரி" படித்தோ இசை வடிவாகக் கேட்டோ வாருங்கள். நன்மை பல மடங்காகும்.

சக்தி வடிவான அம்மன் ஆலயங்கள் அனைத்தும் சந்திர ஸ்தலம்தான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

திருக்கடையூர் ஆலயமும் சந்திர ஸ்தலமே! எனவே அபிராமி அன்னையை தரிசியுங்கள்.  அபிராமி அந்தாதி படித்து வாருங்கள். மகிழ்ச்சிக்கும் வெற்றிக்கும் பஞ்சமே இருக்காது.

சந்திர பகவானுக்கான விருட்சம் கல்யாண முருங்கை. முடிந்தால் வளர்த்து வாருங்கள் அல்லது தண்ணீர் ஊற்றி வாருங்கள்.

சந்திரனின் அம்சம் பச்சரிசி,  பால். ஆகவே, முடிந்தபோதெல்லாம் பச்சரிசியையும் பாலையும் தானமாக வழங்கி வாருங்கள்.

மற்ற கிரகங்கள் குறித்து, அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

- தெளிவோம்


 

வாக்களிக்கலாம் வாங்க

'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close