[X] Close

தனுசு - ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்


dhanusu-raaghu-kedhu

தனுசு - ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

  • kamadenu
  • Posted: 07 Feb, 2019 14:12 pm
  • அ+ அ-

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

தனுசு ராசி வாசகர்களே

ஈரமான மனசுடன் எப்போதும் வாழ வேண்டுமென என்ற எண்ணமுடையவர்களே! உங்களுக்கு 13.02.2019 முதல் 31.08.2020 வரை உள்ள காலகட்டங்களில் ராகுவும் கேதுவும் எப்படிப்பட்ட பலன்களைத் தரப்போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

ராகு தரப்போகும் பலன்கள்:

இதுவரை உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் அமர்ந்து நின்று காரியத் தடைகளையும் மன உளைச்சல்களையும் கொடுத்துவந்த ராகு பகவான் இப்போது ராசிக்கு ஏழாம் வீட்டில் வந்து அமர்கிறார். உங்களின் அறிவாற்றலை மழுங்க வைத்த ராகு, இப்போது உங்களுக்கே தெரியாமல் உங்களுக்குள் மறைந்து கிடக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வரப் போகிறார். வீண் விவாதங்கள், அலைச்சல்கள், கோபதாபங்கள் எல்லாம் குறையும்.

கணவன் மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு என்றாலும் மனைவியுடன் சின்னச் சின்னப் பிரச்சினைகளும் பெரிதாகும். மனைவிக்கு மருத்துவச் செலவு வரும். அவர்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். எந்த விஷயமாக இருந்தாலும் சுயமாக யோசித்து முடிவெடுக்கப் பாருங்கள்.  குழந்தை பாக்கியம் உண்டு. நண்பர்களுடன் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கப் பாருங்கள். வருவாய் அதிகரித்தாலும் சேமிக்க முடியாது கையிருப்பு கரையும்.

திடீர்ப் பயணங்களுக்குக் குறையிருக் காது. பிள்ளை களின் வருங்காலத்துக்குச் சேமிப்பீர்கள். அவர்கள் உயர்கல்வித் தேர்வுகளில் வெற்றிபெற்று உங்களைப் பெருமைபடுத்துவார்கள்.  அரைகுறையாக நின்றுபோன பல வேலைகளை இனி விரைந்து முடிக்கும் அளவுக்கு நேரம் ஒத்துழைக்கும்.

ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்

குருவின் புனர்பூசம் நட்சத்திரத்தில் 13.2.2019 முதல் 18.8.2019 வரை ராகு பகவான் செல்வதால் தாழ்வுமனப்பான்மை நீங்கித் தன்னம்பிக்கை பிறக்கும். லோன் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். தள்ளிப்போன திருமணம் முடியும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றிப் புதுசு வாங்குவீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். தாய்வழி உறவினர்கள் மத்தியில் இருந்த மோதல்கள் விலகும். வி.ஐ.பி.க்கள் அறிமுகமாவார்கள்.            

ராகு பகவான் தன் சுய நட்சத்திரமான திருவாதிரையில் 19.8.2019 முதல் 26.4.2020 வரை செல்வதால் வழக்கில் வெற்றி உண்டு. சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களுக்குத் தலைமை தாங்குவீர்கள். வேற்றுமதத்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். மூத்த சகோதரர் உதவுவார். ஷேர் மூலம் பணம் வரும்.      

செவ்வாயின் மிருகசிரீஷம் நட்சத்திரத்தில் 27.4.2020 முதல் 31.8.2020 வரை ராகு பகவான் செல்வதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். சகோதரிக்குத் திருமணம் நடக்கும். பழைய கடன் பிரச்சினை ஒன்று தீரும். நீண்ட நாட்களாகப் போக நினைத்த அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்வீர்கள். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள்.

கேதுவின் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் நின்றுகொண்டு உங்களைப் பக்குவமில்லாமல் பேசவைத்த கேது பகவான் இப்போது உங்கள் ராசியிலேயே வந்தமர்வதால் இனி சமயோஜிதப் புத்தியுடன் பேச வைப்பார்கள். எப்போது பார்த்தாலும் எதிர்மறையாகச் சிந்தித்துவந்த நீங்கள் இனி ஆக்கப்பூர்வமாக செயல்படுவீர்கள். குடும்பத்தினரின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளப் பாருங்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் அவ்வப்போது வந்துபோகும்.

ராசிக்குள் கேது அமர்வதால் தலைச்சுற்றல், ஒற்றைத்தலைவலி, காய்ச்சல், தூக்கமின்மை, சலிப்பு, முன்கோபம் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாக முடியும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவதால் தெய்வபலம் கூடும்.

கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்

சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 1-ம் பாதத்தில் 13.2.2019 முதல் 17.4.2019 வரை கேது பகவான் செல்வதால் அரசு காரியங்கள் விரைந்து முடியும். பணப்பற்றாக் குறை ஏற்படும். தந்தைக்கு வேலைச்சுமை இருக்கும். தந்தைவழி உறவினர்கள் மதிப்பார்கள். பிதுர்வழிச் சொத்துப் பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். வெளிநாடு, வேற்று மாநிலம் செல்லும் வாய்ப்பு வரும்.

சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 18.4.2019 முதல் 22.12.2019 வரை கேது செல்வதால் வற்றிய பணப்பை நிரம்பும். புது வேலை அமையும். எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் வாங்குவீர்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். தொண்டைப் புகைச்சல், சளித் தொந்தரவு வந்து போகும். உறவினர்கள் வீட்டு விசேஷங்களை எடுத்து நடத்துவீர்கள். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். சிலர் வீடு மாறுவீர்கள்.              

கேது பகவான் தன் சுய நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் 23.12.2019 முதல் 31.8.2020 வரை  செல்வதால் எதிர்மறை எண்ணங்கள் தலைதூக்கும். தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். பிள்ளைகளால் அலைச்சல், பிரச்சினைகள் வந்து போகும். பூர்வீகச் சொத்துப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

இந்த ராகு-கேது மாற்றம் வேலைச்சுமை களைப்பையும் சோர்வையும் சின்ன சின்னத் தோல்விகள் மன இறுக்கத்தைத் தந்தாலும் தெய்வ பலத்தாலும் கடின உழைப்பாலும் இலக்கை அடைய வைக்கும்.

ஞாயிற்றுக்கிழமையன்று ஸ்ரீமஹா ப்ரத்யங்கரா தேவியை வணங்குவதுடன் காகத்திற்கு எள் சாதம் கொடுங்கள்.

 

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close