கும்பம் - ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்

கும்பம் - ராகு கேது பெயர்ச்சி பலன்கள்
ஜோதிஷபூஷண் வேங்கட சுப்பிரமணியன்
கும்ப ராசி வாசகர்களே
உணர்வுப்பூர்வமாக வாழும் வாழ்க்கையில்தான் சுவாரசியம் இருக்கும் என்று நம்புபவர்களே! உங்களுக்கு 13.02.2019 முதல் 31.08.2020 வரை உள்ள காலகட்டங்களில் ராகுவும் கேதுவும் எப்படிப்பட்ட பலன்களைத் தரப்போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.
ராகு தரப்போகும் பலன்கள்
இதுவரை உங்கள் ராசிக்கு ஆறில் நின்ற ராகு ஒருபுறம் நல்லதைச் செய்து மறுபுறம் வீண் டென்ஷன், மன உளைச்சல், மறைமுக எதிர்ப்புகள், கடன் தொல்லைகள் என்று பல விதங்களில் உங்களைப் பாடாய்ப் படுத்தினாரே! ராகு பகவான் இப்போது உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அடியெடுத்து வைப்பதால் குடும்பத்தில் குதூகலம் பிறக்கும்.
கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். வீண் டென்ஷன், அலைச்சல், முன் கோபம் குறை யும். மனைவி, பிள்ளைகள் கேட்டதை வாங்கிக் கொடுப்பீர்கள். சோம்பல் நீங்கிச் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். சொந்தபந்தங்களிடையே மனக்கசப்பு விலகும்.
ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்
குருபகவானின் புனர்பூசம் நட்சத்திரத்தில் 13.2.2019 முதல் 18.8.2019 வரை ராகு பகவான் செல்வதால் கல்யாணம், சீமந்தம், காதுகுத்து, கிரகப்பிரவேசம் என வீட்டில் களைகட்டும். புதுச் சொத்து வாங்குவீர்கள். ஆடை, அணிகலன் சேரும். உறவினர்கள் மெச்சுவார்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். பதவிகள் தேடி வரும். வேலை கிடைக்கும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். ஷேர் மூலம் பணம் வரும்.
ராகு பகவான் தன் சுய நட்சத்திரமான திருவாதிரையில் 19.8.2019 முதல் 26.4.2020 வரை செல்வதால் குடும்பத்தில் கூச்சல், குழப்பங்கள், செலவினங்கள், இனம்புரியாத கவலைகள், கனவுத் தொல்லைகள் வந்து போகும். உடம்பில் இரும்புச் சத்து குறையும். பலவீனமாக இருப்பதாக நினைப்பீர்கள். காய், கனி, கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். வாகனத்தை இயக்கும்போது செல்போனில் பேசுவதைத் தவிர்த்துவிடுங்கள். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். முக்கியப் பொறுப்புகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காதீர்கள்.
செவ்வாய் பகவானின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் 27.4.2020 முதல் 31.8.2020 வரை ராகு பகவான் செல்வதால் ஒருவிதப் பயம், படபடப்பு வந்து செல்லும். உடன்பிறந்தவர்களுடன் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கவலைப்படுவீர்கள். சொத்து வாங்கும்போது தாய்பத்திரத்தைச் சரி பார்த்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் அலட்சியம் வேண்டாம்.
கேதுவின் பலன்கள்
இதுவரை உங்கள் ராசிக்குப் பன்னிரண்டாம் வீட்டில் அமர்ந்து விரயச் செலவுகளையும், வீண் அலைச்சலையும் தந்து தூக்கமில்லாமலும் தவிக்கவைத்த கேது பகவான் இப்போது உங்கள் ராசிக்கு லாப வீட்டான பதினொன்றில் வந்தமர்கிறார். திடீர் யோகம், வெற்றி வாய்ப்புகள் தேடி வரும். வீட்டில் தடைபட்ட சுபகாரியங்கள் ஏற்பாடாகும். பிரபலங்களின் சந்திப்பு கிட்டும். பாதியிலேயே நின்று போன வீடுகட்டும் பணியை வங்கிக் கடனுதவியால் முழுமையாக முடிப்பீர்கள்.
வீட்டில் தடைபட்ட சுபகாரியங்கள் ஏற்பாடாகும். சிலர் சொந்தத் தொழில் தொடங்குவீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். புது வீடு கட்டி குடி புகுவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வழக்கு சாதகமாகும். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். புதிய பொறுப்புகள், பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்
சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 1-ம் பாதத்தில் 13.2.2019 முதல் 17.4.2019 வரை கேது பகவான் செல்வதால் தள்ளிப்போன திருமணம் முடியும். மனைவிவழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். அரசால் ஆதாயம் உண்டு. அயல்நாடு செல்ல விசா கிடைக்கும்.
சுக்ரனின் பூராடம் நட்சத்திரத்தில் 18.4.2019 முதல் 22.12.2019 வரை கேது செல்வதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். பழைய நகையை மாற்றி புது டிசைனில் நகை வாங்குவீர்கள். வீடு கட்டும் முயற்சியில் இறங்குவீர்கள். குறைந்த வட்டிக்கு வங்கிக் கடன் கிடைக்கும். தந்தை வழி சொத்து வந்து சேரும்.
கேது பகவான் தன் சுய நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் 23.12.2019 முதல் 31.8.2020 வரை கேது செல்வதால் சோம்பல் நீங்கும். தைரியம் பிறக்கும். சவாலான காரியங்களையும் எளிதில் முடிப்பீர்கள். உங்கள் ஆலோசனையை அனைவரும் ஏற்பார்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். வேற்றுமதத்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். இழுபறியான வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.
ராகு உங்களைப் பின்னோக்கி இழுத்தாலும், கேதுவின் ஆதரவு வலுவாக உள்ளதால் எங்கும் எதையும் சாதிக்கும் வல்லமையுண்டாகும்.
புதன்கிழமையன்று பெருமாள் கோயிலுக்குப் போய் பெருமாளை வணங்குவதுடன் பசுவுக்கு வாழைப்பழம் கொடுங்கள்.