[X] Close

சிம்மம் - ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்


simmam-raaghu-kedhu

சிம்மம் - ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

  • kamadenu
  • Posted: 07 Feb, 2019 13:23 pm
  • அ+ அ-

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

சிம்ம ராசி வாசகர்களே

நிறை குறைகளை அலசி ஆராய்ந்து யாரையும் துல்லியமாகக் கணிப்பவர்களே! உங்களுக்கு 13.02.2019 முதல் 31.08.2020 வரை உள்ள காலகட்டங்களில் ராகுவும் கேதுவும் எப்படிப்பட்ட பலன்களைத் தரப்போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

ராகுவின் பலன்கள்:

இதுவரை உங்களின் ராசிக்குப் பன்னிரண்டில் அமர்ந்து கொண்டு அடுக்கடுக்காகப் பல பிரச்சினைகளையும் நெருக்கடிகளையும் தந்த ராகு பகவான்  இப்போது உங்கள் ராசிக்கு லாப வீட்டுக்கு வருவதால் தன்னம்பிக்கையையும் பண வரவையும் கொடுப்பதுடன் வீண் செலவுகளையும் குறைப்பார். சவாலான காரியங்களைக்கூட சர்வ சாதாரணமாக இனிச் செய்து முடிப்பீர்கள். கலகம், கலாட்டாவாக இருந்த குடும்பத்தில் இனி அமைதி திரும்பும்.

உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். குழந்தை இல்லாத தம்பதியர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிட்டும்.  கடனை அடைத்து முடிப்பீர்கள். பிள்ளைகள் கெட்ட நண்பர்களிடமிருந்து விலகுவார்கள். உயர்கல்வியில் வெற்றி பெறுவார்கள். மகனின் அடிமனத்தில் இருக்கும் தனித் திறமைகளைக் கண்டுபிடித்து உற்சாகப்படுத்துவீர்கள். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். அரைகுறை யாக நின்றுபோன பல வேலைகள் உடனே முடியும்.

ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்

குருவின் புனர்பூசம் நட்சத்திரத்தில் 13.2.2019 முதல் 18.8.2019 வரை ராகு பகவான்  செல்வதால் அடிமனத்திலிருந்த பயம், கவலை விலகும். கல்யாணம், கிரகப் பிரவேசம் என அடுத்தடுத்த சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். நிரந்தர வேலை கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். புதுரக வாகனம் வாங்குவீர்கள். நாடாள்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். மகளுக்குத் திருமணம் முடியும்.

ராகு பகவான்  தன் சுய நட்சத்திரமான திருவாதிரையில் 19.8.2019 முதல் 26.4.2020 வரை செல்வதால் தைரியமாகச் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். புதியவர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். அரசால் ஆதாயமுண்டு. புதிய முதலீடு செய்து வியாபாரத்தைத் தொடங்குவீர்கள். வழக்குகள் சாதகமாகும். ஷேர் மூலம் பணம் வரும். பழைய பிரச்சினைகள் தீரும்.                                                                                        

செவ்வாயின் மிருகசிரீஷம் நட்சத்திரத்தில் 27.04.2020 முதல் 31.08.2020 வரை ராகு பகவான்  செல்வதால் குடும்ப வருவாய் உயரும். பழைய சொத்து வந்து சேரும். பிள்ளைகளின் உயர்கல்வி, வேலை, திருமண முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பெற்றோரின் உடல்நிலை சீராகும். புதிய பொறுப்புகள், பதவிகள் தேடி வரும்.

வியாபாரம் செழிக்கும். வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். வெளி மாநிலம், வெளி நாட்டிலிருப்பவர்களின் உதவியால் சிலர் சில்லறை வியாபாரத்திலிருந்து மொத்த வியாபாரத்துக்கு மாறுவீர்கள்.

கேதுவின் பலன்கள்

இதுவரை உங்களின் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்திருந்த கேது பகவான் இப்போது உங்கள் ராசிக்கு பூர்வபுண்ணிய வீடான ஐந்தாம் வீட்டுக்கு வந்து அமர்கிறார். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். ஆனால், அவர்களால் அலைச்சலும் செலவுகளும் உண்டு. கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். சேமித்து வைத்த காசில் சொந்தமாக ஒரு வீட்டை வாங்குவீர்கள்.

கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்

சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 1-ம் பாதத்தில் 13.2.2019 முதல் 17.4.2019 வரை கேது பகவான் செல்வதால் உங்கள் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 18.4.2019 முதல் 22.12.2019 வரை கேது செல்வதால் தைரியமாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். குடும்ப வருவாய் உயரும். வேலை கிடைக்கும். மகளுக்குத் திருமணம் கூடி வரும். வீடு மாறுவீர்கள். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். மனைவிவழி உறவினர்கள் உதவுவார்கள்.

கேது பகவான் தன் சுய நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் 23.12.2019 முதல் 31.8.2020 வரை செல்வதால் பூர்வீகச் சொத்தைப் போராடிப் பெறுவீர்கள். செலவுகள் கட்டுப்படுத்த முடியாமல் போகும். தந்தையாருக்கு நெஞ்சுவலி, மூச்சுத்திணறல் வந்து போகும். புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. மற்றவர்களை நம்பிப் பெரிய முடிவுகளை எடுக்க வேண்டாம். விருதுகள், பாராட்டுகள் வரும்.

இந்த ராகு-கேது பெயர்ச்சியில் கேதுவால் ஞானமும் ராகுவால் வசதியும் நிம்மதியும் சமூகத்தில் மிகப் பெரிய அந்தஸ்தும் கிட்டும்.

சஷ்டி திதியில் ஆறுமுகக் கடவுளான முருகன் கோயிலுக்குச் சென்று முருகனை வணங்குவதுடன் கோசாலையிலிருக்கும் பசுவிற்கு வாழைப்பழம் கொடுங்கள்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close