[X] Close

பாவமெல்லாம் தீரும்; யோகமெல்லாம் கிடைக்கும்! சனி பிரதோஷம்; சிவ தரிசனம் மறக்காதீங்க!


pradhosham

  • kamadenu
  • Posted: 02 Feb, 2019 08:42 am
  • அ+ அ-

வி.ராம்ஜி

சகல பாவங்களுக்கும் போக்குகிற சனிப்பிரதோஷம் இன்று (2.2.19). இன்றைய நன்னாளில், மாலையில், மறக்காமல் சிவாலயம் செல்லுங்கள். சிவ தரிசனம் செய்யுங்கள். நந்திதேவரையும் தரிசனம் செய்யுங்கள்.

பிரதோஷத்தன்று சிவாலயம் சென்று தரிசனம் செய்வதும் நந்திதேவருக்கு நடைபெறும் விசேஷ அபிஷேக ஆராதனைகளில் கலந்துகொண்டு, பிரார்த்தனை செய்வதும் மிகுந்த பலனைத் தந்தருளும் என்பது ஐதீகம்.

ஏகாதசியில் பெருமாள் கோயிலுக்கும் திரயோதசியில் சிவன் கோயிலுக்கும் சென்று தரிசித்து வணங்குவது வழக்கம். திரயோதசி திதியில் வருவதே பிரதோஷம். இதில் பிரதோஷ வேளை என்பது, மாலை 4.30 முதல் 6 மணி வரையிலானது.

எனவே, இந்த பிரதோஷ நாளில், பிரதோஷ வேளையில், அருகில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்று வழிபடுவது, சிவனாரின் பேரருளைப் பெற்றுத் தரும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். .

அதிலும் குறிப்பாக, சனிக்கிழமை அன்று வரும் பிரதோஷம், சனிப் பிரதோஷம் என்றும் சனி மகா பிரதோஷம் என்றும் மகா பிரதோஷம் என்றும் போற்றப்படுகிறது. மேலும் சனிப் பிரதோஷம் சர்வ பாப விமோசனம் என்றே சொல்லிவைத்திருக்கின்றன ஞானநூல்கள்.

ஆகவே சனிக்கிழமையன்று வரும் பிரதோஷத்தில், சிவாலயம் சென்று தரிசித்து வேண்டுவது, சகல பாபங்களையும் போக்கிவிடும். யோகமும் பலமும் கிடைக்கச் செய்யும். சகல நல்லதுகளையும் அடைய வழிகளை அருளுவார் ஈசன் என்பது உறுதி! அதுமட்டுமா? சனிப் பிரதோஷ தரிசனம் செய்வது, எண்ணற்ற பிரதோஷ தரிசனம் செய்தால் கிடைக்கும் பலன்களையெல்லாம் தந்தருளக் கூடியது எனும் பெருமையும் உண்டு.

மேலும், பிரதோஷ நாளில், நந்திதேவரே நாயகன். பிரதோஷ நாயகன். ஆகவே நந்திதேவருக்கு அப்போது, 16 வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். எனவே, பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், திரவியப் பொடி, அரிசி மாவு, தேன் முதலான அபிஷேகப் பொருட்களை தங்களால் முடிந்தது வழங்குங்கள்.

அத்துடன் நந்திதேவருக்கு அருகம்புல், வில்வம், செவ்வரளி முதலான மலர்களை வழங்கி ஆராதனை செய்யுங்கள்.

சகல பாவமும் போக்கும், சகல யோகங்களும் கிடைக்கும் சனி பிரதோஷத்தில், சிவ தரிசனம் செய்ய மறக்காதீங்க!

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close