[X] Close

பிள்ளையார், அம்மன், முருகன், பைரவர், அனுமன்; இவர்களால் உங்களுக்கு கஜகேசரி யோக பலன்!  


jodhidam-arivom-2-7

  • kamadenu
  • Posted: 21 Jan, 2019 23:48 pm
  • அ+ அ-

ஜோதிடம் அறிவோம் (2) -7: 

ஜோதிடர் ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே.

கஜகேசரி யோகம் பற்றி பார்த்து வருகிறோம்.  

எதிரிகளை வெல்லும் ஆற்றல், எதிர்ப்புகளை பொடிப்பொடியாக்கும் வல்லமை, தோல்வியை சந்திக்காத வாழ்க்கை, ஆஜானுபாகுவான  தோற்றம், உடல் பொலிவு மற்றும் வலிமை பெற்றவர்கள் இந்த கஜகேசரி யோகம் உடையவர்கள் என்றெல்லாம் தெரிந்துகொண்டிருப்பீர்கள்.

சரி… கஜகேசரி யோகத்தை அடைந்தவர்களும் சரி, கஜகேசரி யோக பலனைப் பெற விரும்புவர்களும் சரி… இவர்கள் எந்தத் தெய்வத்தை வணங்க வேண்டும்?, எந்த ஆலயத்துக்குச் செல்லவேண்டும்? எந்த மந்திரத்தை ஜபிக்கவேண்டும்? அல்லது எந்த மந்திரங்களை, துதிகளை காதாரக் கேட்கவேண்டும்?

இவற்றையெல்லாம் பார்ப்போம்.

கஜமுகன், சிம்ம வாகினி, வாயுபுத்ரன், தேவ சேனாதிபதி, காலங்களை காக்கும் வீரன், இவர்களை வணங்கி வர நன்மைகள் பெருகும் என்பது உறுதி.

’அட… என்னங்க. என்னென்னமோ சொல்றீங்களே? கொஞ்சம் புரியற மாதிரிதான் சொல்லுங்களேன்’ என்று நீங்கள் பரபரப்பது புரிகிறது.

முழு முதற் கடவுள் கணபதி. எனவே, ஆனைமுகத்தானை வணங்கி வாருங்கள். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியாகும். காரியத்தில் இருந்து வரும் தடைகள் அனைத்தும் தவிடுபொடியாகும். ஆகவே, முடிந்தபோதெல்லாம், விநாயகப் பெருமானை வணங்குங்கள். சங்கடஹர சதுர்த்தியின் போது, விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்தி பிரார்த்தனை செய்யுங்கள்.

சிம்ம வாகினி. சிம்மம் என்றால் சிங்கம். பராசக்தி, துர்கை, காளி, வராஹி, ப்ரத்தியங்கிரா தேவி முதலான சிங்கத்தை வாகனமாகக் கொண்டுள்ள மகா சக்தியரை, தேவியரை, அன்னையரை வணங்குங்கள். நம் வாழ்வில் எதிரிகளே இல்லாத நிலையைத் தந்தருள்வாள் தேவி. எதிர்ப்பையெல்லாம் இருந்த இடம் தெரியாமல் அகற்றி அருள்வாள் மகாசக்தி!

செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், அம்மனை தரிசியுங்கள். அருகில் உள்ள அம்மன் குடிகொண்டிருக்கும் ஆலயத்துக்குச் சென்று வழிபடுங்கள். செவ்வரளி முதலான செந்நிற மலர்களை சார்த்தி, வேண்டிக்கொள்ளுங்கள். முடிந்தால், அப்போது ராகுகால வேளையில் துர்கைக்கு செவ்வரளி மலர்கள் சார்த்தி, எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடுங்கள். எதிர்ப்புகளும் இருக்காது.தீய சக்திகளும் அண்டாது என்பது சத்தியம்.

அடுத்து, வாயுபுத்திரனான அனுமனை வழிபடுங்கள். எதிர்ப்புகளையும் தடைகளையும் தகர்த்தெறிவார். சில தருணங்களில் நமக்கு நாமே கூட எதிரியாகிவிடுவோம். அதாவது, மனதில் சஞ்சலம், குழப்பம், பயம், தயக்கம் என்றெல்லாம் இருந்து நம்மை செயல்படாமல் முடுக்கிப் போடும் அல்லவா? அவற்றையெல்லாம் நீக்குவார்; போக்கி அருள்வார் அனுமன். மன பயம் நீக்கி, மனோபலம் பெருக்குவார் ஆஞ்சநேயர்.

புதன், சனிக்கிழமைகளில், அனுமனை வணங்குங்கள். துளசி மாலையும் வெற்றிலை மாலையும் சார்த்துங்கள். வெண்ணெய்க்காப்பு அணிவித்து அவரை ஆராதியுங்கள். உங்களுக்கு எப்போதுமே வெற்றி நிச்சயம் என்பதில் சந்தேகமே இல்லை.

தேவசேனாதிபதி முருகப்பெருமான்.  கஜகேசரி யோகத்தின் மொத்த வடிவானவரே முருகக் கடவுள்தான். ஆகவே, வடிவேலனை வணங்குங்கள். எந்த வினை இருந்தாலும் கந்தவேள் இருக்கிறான் என அவனை பற்றிக்கொள்ளுங்கள். வேலும் மயிலும் துணை நிற்கும். வேலவன் பக்கத்துணையாக இருப்பான். வழக்கு முதலான சிக்கல்களையெல்லாம் தீர்த்து வைப்பான் சிங்காரவேலன்.

அடுத்து, காலங்களின் வடிவம், காலங்களைக் காப்பவர், பைரவர். அதனால்தான் அவருக்கு காலபைரவர் என்றே பெயர். சிவ வடிவமான கால பைரவரை  கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள். கலியுகத்துக்கு காலபைரவர் என்று சொல்லுவார்கள். உங்களை ஒட்டுமொத்தமாக காபந்து செய்வார் காலபைரவர். உங்களை மட்டுமின்றி, உங்கள் வம்சத்தையே காத்தருள்வார். கரை சேர்ப்பார்.

முடியும் போதெல்லாம் பைரவரை வணங்குங்கள். முடிந்தால், தேய்பிறை அஷ்டமியில் செந்நிற மலர்கள் சார்த்தி வணங்குங்கள்.

கால பைரவருக்கு மட்டுமே எல்லாவிதமான தீய சக்திகளும் கட்டுப்படும் அல்லது காணாமல் போகும். அவ்வளவு ஏன்… அழிந்தே போகும். 

எதிரிகள், துரோகிகள், சூழ்ச்சியாளர்கள், வஞ்சகர்கள் இவர்களை இனம் காணவும், எதிர்த்துப் போராடவும் பைரவர் துணை நிற்பார்.

அடுத்ததாக, மந்திரங்கள் குறித்துப் பார்ப்போமா?

 விநாயகர் அகவல், விநாயகர் மூல மந்திரம் என தினமும் படித்து வாருங்கள். உங்களுக்கு கஜகேசரி யோகம் வலுப்பெறும் என்பது உறுதி.

துர்கை அஷ்டோத்திரம், துர்கை மூல மந்திரம், துர்கை துதி என அனுதினமும் படித்து வாருங்கள். செவ்வாய், வெள்ளியிலேனும் படித்து வாருங்கள்.  கஜகேசரி யோகம் இன்னும் இன்னும் உங்களுக்கு வலுவாக அமையும்.  மேலும் வராஹி மூல மந்திரம், அம்மன் பாடல்கள் துதித்து வருவதன் மூலம் மேலும் மேலும் நன்மைகளைப் பெறுவீர்கள்.

முருகனின் சஷ்டி கவசம், சண்முக கவசம், திருமுருகாற்றுப்படை, பாராயணம் செய்யுங்கள். பலன் நிச்சயம்!

இவற்றையெல்லாம் காதாரக் கேட்டுக்கொண்டிருந்தாலும் பலன் உண்டு!

அனுமன் சாலீசா படியுங்கள் அனுமன் துணை நிற்பான். அனுமனின் பெருமைகளை எல்லோரும் அறிவோம். துர்தேவதை தலைதெறிக்க ஓடிவிடுவாள், உங்களை விட்டு!

மாந்திரிகம், சூன்யம் எல்லாமே ஒழிந்து விடும். ஓடியே போய்விடும்!

மேலும் கும்பகோணம் அருகில் உள்ள பட்டீஸ்வரம் துர்கை ஆலயம், அருகில் உள்ள முருகன் கோயில்கள், சிவகங்கை மாவட்டம் வைரவன் பட்டி பைரவர் கோயில், மைசூர் சாமுண்டீஸ்வரி, கொல்லூர் மூகாம்பிகை, சமயபுரம் மாரியம்மன், திருவக்கரை வக்ர காளி, நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம், மற்றும் உங்களுக்கு அருகில் உள்ள ஆலயங்களில் இந்த தெய்வங்கள் குடிகொண்டிருக்கிற கோயில்களில் வணங்கி வாருங்கள். கஜகேசரி யோகம் இன்னும் இன்னும் பலமாகும். அதனால் நீங்கள் வளமாவீர்கள்!

  • தெளிவோம்

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close