[X] Close

சந்தோஷம் பொங்கும் சங்கராந்தி


sankarandhi

  • வி.ராம்ஜி
  • Posted: 13 Jan, 2019 14:41 pm
  • அ+ அ-

 வி.ராம்ஜி

தைத் திருநாளை தைப்பொங்கல் என்றும் சொல்லலாம். சங்கராந்தி பண்டிகை என்றும் போற்றலாம். பண்டிகைகளைக் கொண்டாடுவது மகிழ்ச்சி.  அதன் தாத்பரியங்களை முழுமையாக அறிந்து கொண்டாடும்போது கிடைக்கிற மனநிறைவு அதைவிட சிறப்பானது! அந்த வகையில், தொன்மையான பண்டிகை, பொங்கல் திருநாள் என்கிறார்கள் ஆய்வாளர் பெருமக்கள்!

  தமிழ் கூறும் நல்லுலகில், பொங்கல் விழாவுக்கு முக்கியமான இடம் உண்டு.

சோழர்கள் காலத்திலேயே பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டாடப் பட்டிருக்கிறது. அப்போது பொங்கல் விழா என்று இதைக் குறிப்பிடவில்லை. ஆனால், அந்தக் கொண்டாட்டத்தைத்தான் பிற்பாடு தமிழர்கள் பொங்கல் பண்டிகை, தமிழர் திருநாள் என்று பெயர் வைத்துக் கொண்டாடி, வழிபட்டு, குதூகலம் அடைந்து வருகின்றனர்’’ என்று  வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியம் சொல்கிறார்.

 ‘‘சோழர் காலத்துக் கல்வெட்டுகளிலும் சரி, பல்லவர்கள் காலத்துக் கல்வெட்டுகளிலும் சரி... எந்தவொரு இடத்திலும் பொங்கல் என்ற சொல்லை உபயோகிக்கவே இல்லை. ஆனால், தை மாதத் திருநாளை விசேஷ நாளாக, அற்புத விழாவாகக் கொண்டாடியிருப்பதற்கான சான்றுகள் இருக்கின்றன. உத்தராயன சங்கராந்தி எனும் பெயரில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டதாக இருக்கிறது.

  ‘சங்கரம்’ என்றால் ‘நகரத் தொடங்குதல்’ என்று அர்த்தம். உத்தராயன சங்கராந்தி என்பது, வருடந்தோறும் தை மாதம் முதல் நாளன்று, சூரியனானது தென் திசையில் இருந்து வட திசை நோக்கித் தன் பயணத்தைத் துவக்குகிறது. இதையே உத்தராயன புண்ய காலம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்!

  ஒரு மாதத்துக்கு முன்னதாகவே, அதாவது மார்கழி மாதத்திலேயே குளிர்காலம் துவங்கிவிடுகிறது. மார்கழி மாதத்தில் பூமியெங்கும் குளிர் பரவி, அதிகாலை 3 மணியில் இருந்து 6 மணி வரைக்கும் காற்று மண்டலத்தில் ஓசோன் அதிகமாகக் கிடைக்கிறது. இந்தக் காற்றைச் சுவாசித்தால், ஆயுள் பலமும் ஆன்ம பலமும் பெருகும். மார்கழியில் காலையில் சீக்கிரமே எழுந்து, பெரிய கோலங்களைப்  போடச் சொன்னார்கள். ஆலய வழிபாட்டை வலியுறுத்தினார்கள்! பஜனை பாடிக் கொண்டு தெருவில் வரச் செய்தார்கள். ஊர் முழுக்க வெட்டவெளியில் திரண்டு, சூரியன் வருவதற்கு முன்பு வரை பூஜைக்கான ஆயத்தங்களைச் செய்யச் சொன்னார்கள். சூரியனை நமஸ்கரிக்கச் சொன்னார்கள்.

 தெருக்களில் பஜனைப் பாடல்களைப் பாடி நகர்வலம் வரும் வழக்கம் இதனால்தான் உதயமானது. இந்த நாளில், அதிகாலை நேரத்தில் அந்தக் காற்றைச் சுவாசித்தால், உடலில் ரத்த ஓட்டம் வேகமாகும்; ஞாபக சக்தி அதிகரிக்கும்‘’ என்கிறார் குடவாயில் பாலசுப்ரமணியம்.

சூரியக் கடவுளுக்குப் படையல். ஒற்றுமையுடன் ஊர் கூடி கோலாகலமாகக் கொண்டாடும் பண்டிகை. வீட்டை சுத்தப்படுத்தி, மாடுகன்றுகளை நீராட்டி, அழகுபடுத்தி அலங்கரித்து, காடுகழனியை வணங்கி, சுபிட்சம் நோக்கியதாக வேண்டுதல்களை வைத்தார்கள்.

சுபிட்சம் தரு ம் சங்கராந்தியைக் கொண்டாடுவோம். சுபிட்சமும் சந்தோஷமும் பொங்க வாழ்வோம்!

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close