[X] Close

தாலி, கணவன், பிறந்தவீடு, புகுந்தவீடு, சகோதரன், சந்ததி; கஷ்டங்களைப் போகும் காணும் பொங்கல்!


kanu-pongal

பொங்கல் விழா

  • வி.ராம்ஜி
  • Posted: 13 Jan, 2019 13:37 pm
  • அ+ அ-

  வி.ராம்ஜி

 உங்களின் வம்சத்தை வளரச் செய்யும் வழிபாடுகள் பல உள்ளன. அந்த வழிபாடுகளில் மிக முக்கியமானது காணும்பொங்கல் என்கிற கணுப் பண்டிகை. பொங்கலுக்கு மறுநாள் செய்யப்படும் விசேஷ நிகழ்ச்சி இது.

முழுக்க முழுக்க பெண்களுக்கான வைபவம் இது. பெண்கள், பொங்கல் பானையில் கட்டி வைத்த மஞ்சள் கிழங்கை எடுத்து, வயதில் முதிர்ந்த ஐந்து சுமங்கலிகளிடம் கொடுத்து, கல்லில் இழைத்து தங்கள் நெற்றியில் தீற்றிக் கொள்வார்கள். சிலர், கணவனிடம் மஞ்சளைத் தந்து தங்களின் நெற்றியில் தீற்றச் செய்வார்கள்.

  இரண்டு வாழை இலைகளை கிழக்குப் பக்கமாக நுனியை வைத்து, ஆற்றங்கரை அல்லது வீட்டு மொட்டைமாடியில் கணுப்பிடி வைப்பார்கள். முன்னதாக, அந்த இடத்தில் கோலமிட வேண்டியது அவசியம். பிறகு, செம்மண் பூசி மெழுகுவது இன்னும் சிறப்பும் மகத்துவமும் வாய்ந்தது!

  முதல் நாள் (மீதமிருக்கும்) சாதத்தில் மஞ்சள் குங்குமம் கலந்து, மஞ்சள் சாதம், வெள்ளை சாதம், சிவப்பு சாதம் என்று தனித்தனியே தயார் செய்து, சர்க்கரைப் பொங்கலை பழுப்பு நிற சாதமாக எடுத்து வைத்துக் கொள்வார்கள்.   ஒவ்வொரு வகை சாதத்தையும் ஏழு அல்லது ஒன்பது என ஒற்றைப்படை எண்ணிக்கையில் வரும்படியாக, இலைகளில் மூன்று வரிசைகளாக வைக்கவேண்டும். இப்படியாக பூஜை செய்து, தீபாராதனை காட்டி, நமஸ்கரித்தால், மாங்கல்ய பலம் பெருகும். தாலி பாக்கியம் கிடைக்கும். சந்ததி சிறக்கும்.

  வெற்றிலை-பாக்கு,பழம்,தேங்காய், கரும்புத் துண்டு,  மஞ்சள் அட்சதை (முனை முறியாத அரிசி), பூக்கள் ஆகியவை ஒரு தட்டிலும், மற்றொரு தட்டில் ஆரத்தியும் (மஞ்சள், சுண்ணாம்பு, குங்குமம் கலந்து கரைத்த நீர்) தயாராக வைத்துக்கொள்ளவேண்டும்.

  கணுப்பிடி வைக்கும் விடியற் காலை நேரத்தில் ராகு காலம், எம கண்டம் ஆகியவை இல்லாத நேரமாகப் பார்த்து பூஜை செய்வது நன்மை பயக்கும்!

 அட்சதையையும் பூக்களையும் இட்டு (கணுப்பிடியாக வைத்த சாத வகைகளுக்கு), ‘கணுப்பிடி வைத்தேன். காக்கைப் பிடி வைத்தேன். காக்கைக்கு எல்லாம் கல்யாணமாம் கல்யாணம்’’ என்று கிராமங்களில் பாடுவார்கள்! குலவையிட்டும் கும்மியடித்தும் மகிழ்வார்கள்.

பிறகு தேங்காய் உடைத்து, சூடம் ஏற்றி, கணுப்பிடி வைத்த இலைகளையும் சூரிய பகவானையும் வணங்கி ஆரத்தி எடுப்பார்கள். கணுப்பிடி வைத்த சாதத்தை, நாய்-பூனை  முதலானவை எச்சில் பண்ணாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

  கணுப்பிடி நாளில், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், புளியஞ் சாதம், தயிர் சாதம் முதலான சாத வகைகளும், அவியல் அல்லது கூட்டு, பாயசம், தேங்காய்த் துவையல், அப்பளம் முதலானவையும் உணவாக சமைப்பது வழக்கம்!

  கணுப்பிடி வைத்த பெண்கள் அன்று இரவு சாப்பிட மாட் டார்கள்.  இந்த கணுப்பிடி நோன்பு, உடன் பிறந்தவர்களின் நன்மைக்காகச் செய்யப்படுவதாக ஐதீகம்! இதை உணர்த்தும் விதமாக, ‘கார்த்திகை எண்ணெயும் கணுப்பழையதும் கூடப் பிறந்தவர்களுக்கு’ எனும் சொலவடை கிராமங்களில் உண்டு.

  அதாவது, கார்த்திகையில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதும், பொங்கல் அன்று சமைத்த சாதத்தை, (பழையதை) மறுநாள் கணுப்பிடியாக வைப்பதும் உடன்பிறந்தவர்களின் நலனுக்காக என்பதே இதன் விளக்கம்!

 இந்த பண்டிகையையொட்டி, பிறந்த வீட்டுச் சீராகப் பெண் களுக்குப் பணமோ, துணியோ பிறந்த வீட்டில் இருந்து வரும். அந்த நாளில், வீடே குதூகலமாகிவிடும்.

  வீட்டில் பிறந்த பெண், புகுந்த வீட்டில் பூஜை புனஸ்காரங்களுடன் வலம் வந்தால், அவள் சௌக்கியமாக இருக்கிறாள் என்று அர்த்தம். அப்படி புகுந்த வீட்டில் இருந்தபடி, உடன்பிறந்தானின் நலனுக்காக, விரதம் மேற்கொண்டால், சீரும் சிறப்புமாக வாழ்கிறாள் என்று பொருள். அப்படி, வீட்டுக்குப் பிறந்த பெண் வாழ்ந்தால்தான், உடன்பிறந்தானும் பிறந்த வீடும் சுபிட்சமாகவும் நிம்மதியாகவும் வாழ முடியும்!

காணும் பொங்கலை, பெண்கள் சிரத்தையாகச் செய்யச் செய்ய, வீட்டாரின் கண்ணீரெல்லாம் கரைந்து காணாமல் போய்விடும் என்பது உறுதி! 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close