[X] Close

நாலு இட்லியாவது கொடுங்க; குரு மங்கள யோகம் கிடைக்கும்!


jodhidam-arivom3

  • kamadenu
  • Posted: 08 Jan, 2019 09:30 am
  • அ+ அ-

ஜோதிடம் அறிவோம் (2) - 3: இதுதான்... இப்படித்தான்!

ஜோதிடர் ஜெயம் சரவணன்

வாசகர்களுக்கு வணக்கம்.

கடந்த அத்தியாயத்தில், குரு மங்கள யோகம் குறித்து எழுதியிருந்தது குறித்து, ஏகப்பட்ட வாசகர்கள் உற்சாகம் அடைந்தார்கள் என்பதை அறிந்தேன். நிறைய பேர் போன் செய்து பேசினார்கள். ‘ஜாதகத்தை வைத்துக் கொண்டு, நீங்கள் சொன்னதையும் வைத்துக்கொண்டு, குரு மங்கள யோகம் பார்த்தேன். மிக்க நன்றி’ என்று சொன்னார்கள்.

இதற்கு எதற்கு நன்றி. ஒரு ஜோதிட சாஸ்திரம் அறிந்த ஜோதிடரின் கடமை இது.

இன்னும் பலர்,  " ஏங்க, எனக்கு ஜாதகம் இல்லை. நான் எப்படி இந்த யோகங்களைத் தெரிஞ்சுக்கறது? " என்று வருத்தத்துடன் கேட்டிருந்தார்கள்.

அவர்களுக்கான என் பதில்.

முதலில், மன்னிக்கவேண்டும். ஜாதகம் இல்லை என்றால் யோகங்களைப் பார்ப்பதும் அறிவதும் சிரமம்தான்.

ஆனால் அதே சமயம் இறைவழிபாடு மூலமாக சில யோக பலன்களை நாம் வரவழைத்துக் கொள்ள முடியும். அதாவது அமைத்துக்கொள்ளமுடியும். இறையருள் சில யோகங்களை நமக்கு வாரி வழங்கும்.

இந்த குருமங்கள யோகத்தை பெறுவதற்கு வழி இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில், கடலோரத்தில் அற்புதமாக, கடல் காற்றை வாங்கிக் கொண்டு, நம்மையெல்லாம் குளிரப் பண்ணுகிறாரே திருச்செந்தூர் செந்திலாண்டவர். அவரை கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள். முடியும்போதெல்லாம், தோன்றும்போதெல்லாம் திருச்செந்தூர் சென்று வேலவனைத் தரிசனம் செய்யுங்கள். குருமங்கள யோகத்தை நமக்குத் தந்தருள்வார் முருகப்பெருமான்!

இன்னொன்றின் மூலமாகவும் குரு மங்கள யோகத்தைப் பெறலாம்.

அதாவது, குரு என்பவர் நம் ஜீவனைக் குறிப்பவர். செவ்வாய் என்பவர் நம் உடலில் உள்ள ரத்தம் . எனவே குருதி கொடை (ரத்த தானம் ) தந்து உயிரைக் காப்பாற்றுவது நமக்கு உயர்ந்த பலன்கள் அனைத்தையும் தரும்; தந்தே தீரும்!

செவ்வாய் என்பவர் பெண்களுக்கு கணவரை குறிப்பது. எனவே ஏழைப் பெண்கள் திருமணத்திற்கு மாங்கல்யம் தானம் தந்து உதவுவது, மங்கல காரியங்களையும் மங்கல யோகங்களையும் நமக்கு வழங்கி வாழச் செய்யும்!

இன்னும் சில விஷயங்களையும் பார்ப்போம்.

செவ்வாய் என்பவர்  முருகப் பெருமான் அம்சம் மட்டும் அல்ல.

பைரவர் அம்சமும் கூட!

அதேபோல், சக்கரத்தாழ்வார் அம்சமும்தான்!  

பெண் அம்சத்தில் "சக்தி " வடிவான பார்வதிதேவி, மாரியம்மன், காளியம்மன், துர்கை முதலான தெய்வங்களும் செவ்வாய் அம்சம் என்கிறது சாஸ்திரம். அதனால்தானோ என்னவோ, செவ்வாய்க்கிழமையை அம்பிகையைத் தரிசிப்பதும் வணங்குவதும் விசேஷம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

குருபகவான் நவக்கிரகத்தில் இருக்கிறார். மேலும் தட்சிணாமூர்த்தியாகவும் இருப்பவர்.

அவர்கள் மட்டுமா?

பிரம்மாவும் குரு அம்சம். இவர் குடிகொண்டிருக்கும் திருப்பட்டூர் திருத்தலம், நம் தலையெழுத்தையே திருத்தி அருளும் புண்ணியபூமி! வாழ்வில், இங்கு ஒரேயொரு முறை சென்று, பிரம்மாவுக்கு எதிரே நின்று நம் குறைகளை எடுத்துச் சொன்னாலே போதும்.. அடுத்தடுத்து நம் வாழ்க்கையில் நல்ல நல்ல திருப்பங்கள் நடந்தேறும்.

அடுத்து, குருபகவானும்  வாயு பகவானும் வழிபட்ட குருவாயூர்,  குருவின் ஸ்தலம்தான்.

எனவே குரு குடிகொண்டு அருள்பாலிக்கும் தலங்களுக்குச் சென்று வாருங்கள். முடியும் போதெல்லாம் சென்று தரிசித்து வாருங்கள். இதுவரை உங்கள் வாழ்வில் நீங்கள் அனுபவித்த இன்னல்களில் இருந்தும் இடைஞ்சல்களில் இருந்தும் முற்றிலுமாக விடுபடுவீர்கள். இதுவரை கிடைத்திடாத நிம்மதியும் சந்தோஷமும் ஐஸ்வர்யமும் சுபிட்சமும் பதவி உயர்வும் கெளரவமும் கிடைக்கப்பெறுவீர்கள்!

மேலும் பள்ளிக் குழந்தைகளுக்கு சீருடை, காலணிகள், எழுது பொருட்கள் என முடியும்போதெல்லாம் வழங்குங்கள்.

அதேபோல், அன்னதானத்துக்கு மிஞ்சிய தானம் எதுவுமே இல்லை. வாரத்தில் இரண்டொரு நாள், உங்களால் ஒருவருக்கு நாலு இட்லி வாங்கித்தரமுடியும்தானே. ஒரு புளியோதரையோ தயிர்சாதமோ ஒரு பொட்டலம் வாங்கித் தரமுடியும்தானே! இவையெல்லாம் செய்யச் செய்ய, குரு மங்கள யோகத்தின் பலன்கள், உங்களுக்குக் கிடைத்துக்கொண்டே இருக்கும்.

உங்கள் பிறந்த நாள் மற்றும் விசேஷ நாட்களில், உங்கள் ஆசிரியரை சந்தியுங்கள். அதாவது நீங்கள் யாரையெல்லாம் குரு என்று மனதில் ஆசனம் கொடுத்து அமர வைத்திருக்கிறீர்களோ... அவர்களைச் சந்தித்து, நமஸ்கரியுங்கள். அதன் மூலம் கிடைக்கும் நல்லதுகளுக்கு அளவே இல்லை!

வயதில் மூத்தோரை அலட்சியப்படுத்தாதீர்கள். அவர்களை மதித்துப் போற்றுங்கள். அவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்யுங்கள், குருமங்கள யோகம் மட்டுமல்ல எல்லா யோகங்களும் கிடைக்கப்பெறுவீர்கள்.

இப்போது நாம் அடுத்த யோகத்தைப் பார்ப்போம்....

குரு சந்திர யோகம்.

இதுவும் குருமங்கள யோகம் போல, பல நன்மைகளை வாரி வழங்கும் யோகம்.

ஒன்றுக்கும் மேற்பட்ட வீடு முதலான சொத்துகள், வாகனங்கள், நோய்நொடி இல்லாத ஆரோக்கியமான வாழ்வு , தாயாரின் உதவியோடு முன்னுக்கு வருதல், எந்த பிரச்சினை வந்தாலும் அதை அநாயசமாக கடந்து போகுதல், மன உறுதி என குரு சந்திர யோகம் தந்தருளும் என்கின்றன ஜோதிட சாஸ்திர நூல்கள்.

வீட்டை கலை நயமாக நிர்மாணித்தல், எந்தச் செயலிலும் கச்சிதமான நேர்த்தி, அலுவலகத்தில் தனது அறை, தமது மேஜை ஆகியவற்றை, நேர்த்தியாக, சுத்தமாக, அழகாக பராமரித்தல்  இவையெல்லாம் குரு சந்திர யோகத்தால், நம் குணங்களில் விளையும் நல்ல நல்ல மாற்றங்கள்!

கலாரசனை, கலையார்வம், இறை வழிபாடு, கலகலப்பு, நகைச்சுவை ததும்ப பேசுதல் என பலவிதமான நன்மைகளை வாரி வழங்கும் இந்த குரு சந்திர யோகம்... இன்னும் இன்னுமான பல நன்மைகளை நமக்குத் தந்தருளும்.

அவையெல்லாம் என்ன?

அடுத்து பார்ப்போமா?

- அறிவோம்

 

 

 

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close