[X] Close

உங்கள் ஜாதகத்தில் குருமங்கள யோகம்!


jothdam-arivom-2-2

  • kamadenu
  • Posted: 04 Jan, 2019 10:39 am
  • அ+ அ-

ஜோதிடம் அறிவோம்  2;  இதுதான்... இப்படித்தான்!  

ஜோதிடர் ஜெயம் சரவணன்

வணக்கம், வாசகர்களே!

"குரு மங்கள யோகம்" என்றால் என்ன? என்ன செய்யும்? எப்போது யோக பலனைத் தரும்? இது நம் எல்லோருக்கும் இருக்கும் கேள்வி.

 இது பற்றி விரிவாகப் பார்ப்போம்! 

குரு மங்கள யோகம் உள்ளவர்கள் பிறக்கும்போதே சொந்த வீட்டில்தான் பிறந்திருப்பார்கள் அல்லது பிறந்தவுடன் சொந்த வீடு அமைந்திருக்கும். குறைந்த பட்சம் வீட்டு மனையாவது சொந்தமாக இருக்கும்.

ஒரு முக்கிய தகவல் " ஒரு குழந்தை பிறந்து 12 வயது வரை நன்மை செய்யும் யோகங்கள் அனைத்தும் அந்த குடும்பத்திற்கே கிடைக்கும் "

அப்படியானால் பாதிப்பை உண்டாக்கும் யோகங்கள் என்ன செய்யும்? அது யாரைப் போய்ச்சேரும்?

நிச்சயமாக அது குழந்தையை மட்டுமே பாதிக்கும் .

இது எப்படி சாத்தியம்?

ஆமாம். ஒரு குழந்தை பிறக்கும்போதே, ஆடம்பர வீடு, சொகுசு வாகனம் போன்ற யோகங்களோடு பிறப்பதாக வைத்துக் கொள்வோம். அந்தக் குழந்தையால் இதையெல்லாம் சம்பாதிக்க முடியுமா?

ஆனால் அவருடைய தந்தைக்கு இந்த யோக பலன்களைத் தந்து, அவரை வசதி மிக்கவராக மாற்றும்.  அப்படி வசதி வந்த தந்தை அந்தக் குழந்தையை சொகுசு வாகனத்தில் பள்ளிக்கு அனுப்புவார். இப்படியாக ஒரு குழந்தை தன் யோகத்தை தன் குடும்பத்துக்கு தரும்.

அப்படியானால், ஒரு வேளை சோதனையான அவயோகத்தை   (உதாரணமாக:-  பாலாரிஷ்டம் எனும் அவயோகம்)

 பெற்றிருந்தால் என்ன நடக்கும்?  அந்த அவயோகம் குடும்பத்தினரை பாதிக்குமா? குறிப்பாக தந்தையைப் பாதிக்குமா? 

நிச்சயமாக இல்லை!

அந்தக் குழந்தை தன் 12 வயது வரையிலும் "பாலாரிஷ்டம்" எனும் ஆயுள் அரிஷ்டத்தை,  நோய்த் தாக்கத்தை அனுபவித்தே தீர வேண்டும். அதாவது வியாதி என்னும் பாதிப்பை அந்தக் குழந்தை அனுபவிக்கும். இப்படி ஒரு துன்பத்தை கடவுள் தந்து விட்டானே என பெற்றோர் அனுபவிக்க வேண்டும்.

ஆக நல்ல யோகத்தை அனைவரும் அனுபவிப்பார்கள். அவயோகத்தை குழந்தை மட்டுமே அனுபவிக்கும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

சரி... நாம் விஷயத்திற்கு வருவோம். 

ஆக இந்த "குருமங்கள யோகம்" ஒட்டு மொத்த குடும்பத்தையே தலை நிமிர வைக்கும். சொந்த வீடு, சுய தொழில், பலவித வருமான வகைகள் , சமுதாயத்தில் மதிப்பு மரியாதை, வாகன யோகம், விவசாய வளர்ச்சி, விவசாய வாகன யோகம், கன ரக வாகனத் தொழில் என பலவாறான நற்பலன்களை வாரி வழங்கும் வல்லமை குருமங்கள யோகத்துக்கு உண்டு!

எப்போது, எந்தத் தருணங்களில் பலனைத் தரும்?

குருவின் நட்சத்திரமான புனர்பூசம் , விசாகம், பூரட்டாதி, 

செவ்வாயின் நட்சத்திரமான மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்

இந்த நட்சத்திரங்களில் பிறந்து,  "குருமங்கள யோகம்" இருந்தால், பிறந்த உடனேயே பலன்களும் பிறந்துவிடும். அதாவது பிறந்த உடனேயே நற்பலன்களை வாரி வழங்கத் தொடங்கிவிடும்.  

மற்ற நட்சத்திரங்களில் பிறந்தால், குரு திசை நடக்கும்போதோ அல்லது செவ்வாய் திசை நடக்கும் போதோ இந்த யோகங்கள் நடந்தேறும்.

எல்லாம் சரிங்க... இந்த யோகம் என் ஜாதகத்தில் இருக்கிறதா என்பதை நான் எப்படி அறிந்துகொள்வது? இதுதானே உங்களின் கேள்வியும் ஆர்வமும்!  

இதை எளிமையாக அறியலாம்.  இதற்கு ஜோதிடம் அறிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மிக எளிமையாக  நீங்களே அறிந்து கொள்ளலாம்.

உங்கள் ஜாதகத்தில் ராசிக் கட்டத்தில் குரு இருக்கும் ராசியில் செவ்வாய் இருந்தாலும், அல்லது குரு அமர்ந்த இடத்தை ஒன்று என எண்ணத் தொடங்கி 5 ம் இடம், 7ம் இடம், 9ம் இடம் ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தாலும் இந்த "குருமங்கள யோகம்" உங்களுக்கு உண்டு என்பதை உணர்ந்து புரிந்து தெளியுங்கள்.

இந்த யோகத்தை மேலும் பலமாக மாற்ற நீங்கள் செல்ல வேண்டிய ஆலயங்கள் இருக்கின்றன.

திருச்செந்தூர் முருகன் ஆலயம் செல்லுங்கள்.  செவ்வாயின் அதிதேவதை முருகப்பெருமான். செந்தூர் முருகனை குருபகவான் வழிபட்ட தலம் திருச்செந்தூர் . இதுவே முழுமையான "குருமங்கள தலம் " எனப்படுகிறது.

மேலும் முருகன் ஆலயங்கள் அனைத்தும் குருமங்கள திருத்தலங்கள் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

 குருவாயூர், ஆலங்குடி , திட்டை, சிதம்பரம் அருகே உள்ள ஓமாம்புலியூர், சிவகங்கை அருகே பட்டமங்கலம் குருபகவான் ஆலயங்கள்  என நிறைய கோயில்கள் இருக்கின்றன.  

இந்த ஆலயங்களுக்குச் செல்ல முடியாதவர்கள் அருகிலுள்ள சிவாலயங்களில் தட்சிணாமூர்த்தி அல்லது நவக்கிரகங்களில் உள்ள  குரு பகவானை வழிபட்டு வந்தாலே போதும்.

அத்துடன், பாம்பன் சுவாமிகள், ராமானுஜர் , மற்றும் மகான்கள், சித்தர்கள், யோகிகள், ஞானிகள், ஆசிரியர்கள், குருமார்கள் இவர்களை  வழிபட்டு வந்தாலும் பூரணமாய் குருமங்கள  யோகம் கிடைக்கும். 

- அறிவோம்

 

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close