[X] Close

புதிய தொடர்: ஜோதிடம் அறிவோம்- பாகம் 2 : இதுதான்... இப்படித்தான்!


jothdam-arivom-2

முருகப்பெருமான்

  • kamadenu
  • Posted: 01 Jan, 2019 10:19 am
  • அ+ அ-

ஜோதிடர் ஜெயம் சரவணன்

யோகம் எத்தனை யோகமடி!

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்.

உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

எம்பெருமான் முருகப்பெருமான், எல்லா வளமும் நலமும் தந்தருளப் பிரார்த்திக்கிறேன்.

இந்து தமிழ்திசை இணையதளத்தில், ஜோதிடம் அறிவோம் முதல் பாகம் உங்களின் பேராதரவுடன் பெற்ற வெற்றி தந்த ஊக்கத்துடன்,

இந்த பாகம் 2 தொடரை, காமதேனு இணையதளத்தில் தொடங்குகிறேன்.

"ஜோதிடம் அறிவோம் -பாகம் 2 " என்ற இந்தத் தொடர், உங்களின் ஜோதிடம் குறித்த சந்தேகங்களைத் தெளிவுபடுத்தும்விதமாக அமையும் என்பது உறுதி.

என் குருநாதர் யோக ராம்சங்கர் அவர்களை மனதில் நிறுத்தி , எம்பெருமான் முருகன் ஆசியுடன் இந்தத் தொடரைத் தொடர்கிறேன்.

முதலில், புத்தாண்டின் பொதுப் பலன்களை பார்த்துவிடுவோமா?  

2019 புத்தாண்டு செவ்வாய்க் கிழமையும், தசமி திதியும், சுவாதி நட்சத்திரமும் கூடிய நன்னாளில் தொடங்குகிறது.

செவ்வாய் மங்கலகாரகன். நிலம், வீடு, தைரியம், விடாமுயற்சி, வேகம், விவேகம் என அனைத்துக்கும் காரணமானவன். எனவே,  இந்த ஆண்டு... நிலம், வீடு சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் தொழில் நல்ல வளர்ச்சி ஏற்படும். கட்டுமானத் தொழில் எழுச்சி அடையும். 

காவல்துறை, ராணுவம், மருத்துவம், சீருடை பணியாளர்கள் என பல துறைகளுக்கு மதிப்பும் மரியாதையும் கூடும்.

மாணவர்களின் கல்வித் திறன் மந்த கதியில் இருக்கும். காரணம் அலட்சியம்.  

விளையாட்டுத்துறையினர் சாதனைகளை ஏற்படுத்துவார்கள்.

திருமணத் தடை இருப்போர்க்கு இந்த வருடம் தடை விலகும். கல்யாண மாலை தோள் சேரும். வீட்டில் கெட்டிமேளம் ஒலிக்கும்.

விவாகரத்து வழக்கு போட்டவர்கள் வழக்கை ரத்து செய்வார்கள்.  சேர்ந்து வாழ வழி உண்டாகும்.  

இதற்குக் காரணம் செவ்வாய் மட்டுமல்ல...  சுவாதி நட்சத்திரத்தின் மகிமையும் கூட!

ஆமாம். சுவாதி நட்சத்திரத்தின் வடிவம்  தேன்கூடு. எனவே பிரிந்தவர் சேர்வர். பகையாக மாறிய நட்பு மீண்டும் துளிர்க்கும். மெல்லமெல்ல மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும். சேமிப்புப் பழக்கம் உருவாகும். 

மேலும் தசமி திதியில் புத்தாண்டு தொடங்குவது இன்னும் சிறப்பு. எனவே தொழில் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். வேலை வாய்ப்புகள் பெருகும். 

மிக மிக முக்கியமாக "செவ்வாய் குரு " பரிவர்த்தனை யோகம்  உள்ளது, இது, அற்புதமான பலன்களைத் தந்தருளும் யோகம் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

ஆம். அதைத்தான் " குருமங்கல யோகம்"  என்று கொண்டாடுகிறார்கள். எனவே சொந்த வீடு இல்லாதவர்களுக்கு சொந்த வீடு வாங்கும் யோகம் இந்த ஆண்டு ஏற்படும். தாராளமாக முயற்சி செய்யுங்கள். முருகப்பெருமானை தரிசியுங்கள். வீடு கட்டி, கிரகப்பிரவேசத்தை ஜாம்ஜாமென்று நடத்துவீர்கள்.

குருசெவ்வாய்   பரிவர்த்தனையால் உண்டாகும்  குரு மங்கல யோகம் ஆண்டு பலன் என்னும் பொதுப் பலனுக்கே நிறைய நன்மைகள் செய்யும் போது, இந்த அமைப்பு உங்களின் பிறப்பு ஜாதகத்தில் இருந்தால் எவ்வளவு நன்மைகள் ஏற்படும்  என்பதை யோசித்துப் பாருங்கள்.

உங்கள் ஜாதகத்தில் உங்களுக்கே தெரியாத இனி நீங்கள்தெரிந்து கொள்ளப் போகின்ற "யோகங்கள் " பற்றி கொஞ்சம் விரிவாகவும் ஆழமாகவும் அதேசமயம் புரியும் வகையில் எளிமையாகவும் சொல்லப் போகிறேன்.

முதலில் யோகம் என்றால் என்ன?

இரண்டு வெவ்வேறு சக்திகள் இணையும் போது " புதிதாக ஒரு சக்தி உருவாகும்" என்பதுதானே இயற்கையின் ஆகச்சிறந்த மாற்றம். அந்த புதிய சக்தியே "யோகம்"  எனப்படுகிறது. அந்த இரண்டு சக்திகளுடன் புதிய சக்தியும் சேர்ந்து ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கும்.

உதாரணமாக வாயுக்களான ஹைட்ரஜன் 2 பங்கு , ஆக்சிஜன் ஒரு பங்கு, இவை இணையும்போது  "தண்ணீர்" என்னும் புதிய வடிவம் கிடைக்கிறது. புதியதொரு விஷயம் கிடைக்கிறது. இந்த தண்ணீர் தான் ஒட்டுமொத்த ஜீவ ராசிகளுக்கும் மூலாதாரம்.

இரு கிரகங்களின் கூட்டு எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும்.

உதாரணமாக ஒரு சிறுமி தன் வீட்டில் கழிவறை கட்டித் தராமல் என் தந்தை ஏமாற்றுகிறார் என காவல் நிலையத்தில் புகார் தருகிறார். அரசு தற்போது அவருக்கு கழிவறை மட்டுமல்ல அரசு சார்பில் "புதிய வீடு" ஒன்றையும் தருகிறது. இந்தச் செய்தியை சமீபத்தில் படித்திருப்பீர்கள். நினைவிருக்கிறதுதானே.

இதுதான் "யோகம்" என்பது.  இப்படிப்பட்ட யோகம் ஒருவரது ஜாதகத்தில் இருந்தால் வாழ்வில் ஏற்றம் தரும் மாற்றங்கள். இவையெல்லாமே சொடுக்கு போடுகிற ஒரு நொடியில் உண்டாகும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

ஆனால் அது எப்போது நிகழும்?எப்படி நிகழும்?  என்பது தான் வாழ்வின், ஜோதிடத்தின் ஆச்சரிய சுவாரஸ்யம். 

குருமங்கல யோகம் மட்டும் அல்ல... இன்னும் பல யோகங்கள் இருக்கின்றன.  

குரு சந்திர யோகம்

கஜகேசரி யோகம்

 சந்திர மங்கல யோகம்

விபரீத ராஜ யோகம் 

 நீசபங்க ராஜ யோகம்

 தர்ம கர்மாதிபதி யோகம்

 ராஜ யோகம்

சக்ரவர்த்தி யோகம்

நிபுணாதித்ய யோகம்

துருதுரா யோகம்

அமல யோகம்  

மகாசக்தி யோகம் 

 லக்ஷ்மி யோகம்

அதி யோகம் 

 அனபா யோகம்

சுனபா யோகம்

ஹம்ச யோகம்

மாளவ்யா யோகம்

பத்ர யோகம் 

இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.  

’அடேங்கப்பா... ஒருவரது வாழ்க்கைக்குள்ளேயே, ஒருவரின் ஜாதகத்திற்குள்ளேயே இவ்வளவு யோகங்களும் இருக்கின்றனவா? இவையெல்லாம் நமக்கு ஏற்றத்தையும் மாற்றத்தையும் தருகின்றனவா?’ என்று வியப்பு மேலிடுகிறதுதானே!  

இதை எப்படி நாம் அறிவது? என்பதை எளிமையாகவும் இனிமையாகவும் தருவதுதான் இந்தத் தொடரின் நோக்கம்.

வாருங்கள் நண்பர்களே! ஜோதிட சாஸ்திர நுட்பங்களை அறிந்துகொள்வோம்!

- அறிவோம்

 


 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close