[X] Close

2019 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - கும்பம்


2019-kumbam

  • kamadenu
  • Posted: 27 Dec, 2018 13:53 pm
  • அ+ அ-

ஜோதிஷ பூஷண் வேங்கடசுப்பிரமணியன்

விட்டுக் கொடுத்தவர் கெட்டுப் போனதில்லை என்பதை அறிந்தவர்களே! உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் சந்திரன் நிற்கும் நேரத்தில் இந்த 2019-ம் ஆண்டு பிறப்பதால் தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும். சந்தர்ப்ப, சூழ்நிலையறிந்து செயல்படும் சாமர்த்தியத்தை கற்றுக் கொள்வீர்கள். செலவுகளைக் கட்டுப்படுத்தத் திட்டமிடுவீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும்.

சூரியனும் புதனும் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த 2019- ம் ஆண்டு பிறப்பதால் உங்களுடைய ஆளுமைத் திறன், நிர்வாகத் திறன் அதிகரிக்கும். சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். சிலர் வாஸ்துப்படி வீட்டை மாற்றி, விரிவுபடுத்தி, அழகுபடுத்துவீர்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புது வேலை அமையும். அரசால் அனுகூலம் உண்டாகும். சிலர் அயல்நாடு சென்று வருவீர்கள்.

12.02.2019 வரை உங்கள் ராசிக்கு 12-ல் கேது தொடர்வதால் நீண்ட நாட்களாகப் போக நினைத்த குலதெய்வக் கோவிலுக்குக் குடும்பத்தினருடன் சென்று நேர்த்திக் கடனைச் செலுத்துவீர்கள். தூக்கம் குறையும். ஆனால், ராகுவும் 6-ம் வீட்டில் நிற்பதால் மறைமுக எதிரிகளால் ஆதாயமடை வீர்கள். சொந்தபந்தங்கள் மதிக்கும்படி நடந்துகொள்வீர்கள். பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை் கிடைக்கும்.

பால்ய நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். 13.02.2019 முதல் வருடம் முடியும் வரை கேது லாப வீட்டில் அமர்வதால் செல்வாக்குக் கூடும். கௌரவப் பதவிகள் தேடி வரும். ஷேர் மூலம் பணம் வரும். ஆனால், ராகு 5-ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் இருக்கும்.

இந்தாண்டு முழுக்க சனி 11-ம் வீடான லாப வீட்டில் தொடர்வதால் வசதி, வாய்ப்புகள் பெருகும். வருமானம் உயரும். இந்தி, தெலுங்கு பேசுபவர்களால் உதவிகள் உண்டு. வீடு வாங்குவீர்கள். சிலருக்குப் புதுத் தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும். சங்கம், டிரஸ்ட் இவற்றில் சேருவீர்கள். குலதெய்வ பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பணவரவு உண்டாகும். கௌரவப் பதவிகள் தேடி வரும். வெளிநாடு சென்று வருவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். அரசால் ஆதாயமடைவீர்கள். புது வேலைக்கு முயன்றீர்களே! நல்ல பதில் வரும். தற்காலிகப் பணியில் இருப்பவர்கள் நிரந்தரமாக்கப்படுவீர்கள்.

இந்த ஆண்டு பிறப்பு முதல் 12.03.2019 வரை மற்றும் 19.05.2019 முதல் 27.10.2019 வரை குரு உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் நிற்பதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்குள்ளாவீர்கள். மறைமுக அவமானம் வந்து நீங்கும். 13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசார வக்ரமாவதாலும் மற்றும் 28.10.2019 முதல் வருடம் முடியும் வரை குரு 11-ம் வீடான லாப வீட்டில் அமர்வதாலும் எங்குச் சென்றாலும் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தருவார்.

கல்வியாளர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். புதுச் சொத்து வாங்குவீர்கள். கணவன் மனைவிக்குள் எலியும் பூனையுமாக இருந்த நிலை மாறி நகமும் சதையுமாக இணை வீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி, உத்தியோகம் அமையும். பெரிய பதவிக்கு உங்களுடைய பெயர் பரிந்துரை செய்யப்படும். தாயாரின் உடல் நிலை சீராகும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும்.

வியாபாரிகளே! போட்டிகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். என்றாலும், சின்ன சின்ன நஷ்டங்கள் இருக்கும். தொடர்ந்து லாபம் பெற முடியவில்லையே என்ற ஒரு கவலையும் இருக்கும். ஒரு வாரம் நன்றாக இருந்தால் மறுவாரம் வருமானம் இல்லாமல் போகிறதே என்று நினைத்துக் கலங்குவீர்கள்.

வியாபாரத்தை நம்பி ஒரு லோன் வாங்கலாம் என்று நினைத்தால்கூட முடியாமல் போகிறதே நிலையற்ற வருமானமாகி விட்டது என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள். உணவு, மருந்து, கட்டுமானப் பொருட்கள், நெல் மண்டி வகைகளால் லாபமடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பிரச்சினைகள் வெடிக்கும். தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

உத்தியோகஸ்தர்களே! தலைமைக்கு நெருக்க மாவீர்கள். என்றாலும் கொஞ்சம் வேலைச்சுமை, டென்ஷன் இருக்கத்தான் செய்யும். உயரதிகாரி உங்களின் கடின உழைப்புக்கு அங்கீகாரம் அளிப்பார்.

புது வாய்ப்புகள் தேடி வரும். சம்பளப் பாக்கி கைக்கு வரும். இழந்த உரிமையை மீண்டும் பெறுவீர்கள். சக ஊழியர்களால் சின்ன சின்ன நெருக்கடிகளைச் சமாளிக்க வேண்டி வரும். நேரம்காலம் பார்க்காமல் உழைத்தும் எந்தப் பயனும் இல்லையே, என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள்.

ஆகமொத்தம் இந்தப் புத்தாண்டு கட்டுக்கடங்காத செலவுகளை ஏற்படுத்தினாலும் கடினமாக உழைக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளினாலும், தன்னம்பிக்கையால் சாதிக்க வைப்பதாக அமையும்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சின்ன திருப்பதியில் வீற்றிருக்கும் ஸ்ரீபத்மாவதி, மகாலெட்சுமி அம்பாள் சமேத ஸ்ரீபிரசன்ன வெங்கடேஸ்வரரைச் சனிக்கிழமைகளில் சென்று துளசி மாலை அணிவித்து வணங்குங்கள், நன்மை உண்டாகும்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close