[X] Close

2019 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - மகரம்


2019-makaram

  • kamadenu
  • Posted: 27 Dec, 2018 13:47 pm
  • அ+ அ-

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

விடாமுயற்சியால் வெற்றிக் கனியைச் சுவைப்பவர்களே! உங்களது 10-வது ராசியில் இந்த 2019-ம் வருடம் பிறப்பதால் உங்களின் நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். இதுநாள் வரை நீங்கள் உழைத்த உழைப்பு, சிந்திய வியர்வைக்கெல்லாம் நல்ல பலன் கிடைக்கும். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்துக்கொண்டிருந்தவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் புது உத்தியோகம் அமையும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். மகிழ்ச்சியான சம்பவங்கள் குடும்பத்தில் நடக்கும். புதுப் பதவி, பொறுப்புகளெல்லாம் தேடி வரும்.

செவ்வாய் பகவானும் 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த 2019-ம் ஆண்டு பிறப்பதால் சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். தைரியமாகச் சில முக்கிய முடிவுகளெல்லாம் எடுப்பீர்கள். பாதியில் நின்ற வேலைகளெல்லாம் ஒவ்வொன்றாக முடியும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். ஒரு காணி நிலமாவது வாங்க வேண்டுமென நினைப்பீர்கள்.

பூமிப் பிரச்சினை முடியும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களைச் சரியாகப் புரிந்துகொள்வார்கள். பழைய வீட்டை இடித்துக் கட்டுவது, அழகுபடுத்துவது, வர்ணம் பூசுவது போன்ற முயற்சிகள் நல்ல விதத்தில் முடிவடையும்.

12.02.2019 வரை உங்கள் ராசிக்குள்ளேயே கேது பகவானும், ராசிக்கு 7-ம் வீட்டில் ராகுவும் நிற்பதால் தலைச்சுற்றல், தூக்கமின்மை, செரிமானக் கோளாறு, மன இறுக்கம் வந்து செல்லும். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். மனைவிக்கு தைராய்டு போன்ற பிரச்சினைகளெல்லாம் வந்து் செல்லும். ஆனால், 13.02.2019 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசியை விட்டு கேது விலகி 12-ம் வீட்டிலும், ராகு 6-ம் வீட்டிலும் அமர்வதால் பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமையிலிருந்து விடுபடுவீர்கள்.

திடீர்திடீரென்று எதையோ இழந்ததைப் போல் முகவாட்டத்துடன் காணப்பட்டீர்களே! இனி முகம் மலரும். உற்சாகத்துடன் வலம் வருவீர்கள். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகைகளெல்லாம் கைக்கு வரும். மனைவியுடன் இருந்த மோதல்கள் நீங்கும். அவரின் ஆரோக்கியம் சீராகும். திருமணத் தடைகள் நீங்கும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள்.

இந்தாண்டு முழுக்க சனி 12-ல் மறைந்து விரயச் சனியாக வருவதால் அநாவசியச் செலவுகளைத் தவிர்க்கப் பாருங்கள். வேலைச்சுமை இருக்கும். கனவுத் தொல்லையால் தூக்கம் குறையும். பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். சிலர் எப்படியெல்லாம் போலித்தனமாகப் பழகி காரியத்தை சாதித்துக் கொள்கிறார்கள் என்பதை நினைத்தும் வருத்தப்படுவீர்கள்.

உள்மனது சிலவற்றை அறிவுறுத்தியும் அதைச் சரியாகப் பின்பற்றாமல் விட்டு விட்டோமே என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள். கூடாப்பழக்கங்களிலிருந்து முழுமையாக வெளியேறுவது நல்லது. நல்லவர்களுடன் பழகுங்கள். கடன் பிரச்சினையால் கௌரவம் குறைந்துவிடுமோ என்ற அச்சம் வரும்.

இந்த ஆண்டு பிறப்பு முதல் 12.03.2019 வரை மற்றும் 19.05.2019 முதல் 27.10.2019 வரை குரு உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்திருப்பதால் உங்களின் செல்வம், செல்வாக்குக் கூடும். கல்யாணப் பேச்சுவார்த்தை நல்ல விதத்தில் முடியும். ஆனால், 13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசார வக்கிரமாவதாலும் 28.10.2019 முதல் வருடம் முடியும் வரை குரு உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் மறைவதாலும் வீண் செலவுகளால் சேமிப்புகள் கரையும். யாருக்காகவும் சாட்சி கையொப்பமிட வேண்டாம்.

வியாபாரிகளே! போட்டிகளைச் சமாளிப்பீர் கள். தொலைக்காட்சி, வானொலி, வாட்ஸ் அப் விளம்பரங்களைப் பயன்படுத்தி தொழிலை விரிவுபடுத்தி லாபம் ஈட்டுவீர்கள். வாடிக்கை யாளர்களின் ரசனைக்கேற்ப பொருட்களைக் கொள்முதல் செய்வீர்கள். சிலர் கடையை நவீனமாக்குவீர்கள்.

புரோக்கரேஜ், சினிமா, சிமெண்ட் வர்த்தகத்தில் ஆதாயமடைவீர்கள். விலகிப் போன வியாபார வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். புகழ் பெற்ற நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து அதிக லாபம் ஈட்டுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களே! சூட்சுமங்களை உணருவீர்கள். உங்களைப் பற்றி அவதூறான கடிதங்கள் உங்களை விமர்சித்து வரக் கூடும். எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். உங்களுக்கு கீழ் பணியாற்றும் ஊழியர்களிடம் போராடி வேலை வாங்க வேண்டி வரும். எதிர்ப்பார்த்திருந்த இடமாற்றங்கள் உண்டு. சம்பள பாக்கி கைக்கு வரும்.

இந்த 2019-ம் ஆண்டு உங்கள் செயல் வேகத்தைத் துரிதப்படுத்துவதுடன், புதிய முயற்சிகளில் வெற்றியையும் தருவதாக அமையும்.

காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காட்டில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீகாமாட்சி அம்மனை ஞாயிற்றுக்கிழமைகளில் சென்று மரிக்கொழுந்து இலைமாலை அணிவித்து வணங்குங்கள் ஆரோக்யம், அழகு கூடும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close