[X] Close

2019 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - விருச்சிகம்


2019-viruchigam

  • kamadenu
  • Posted: 27 Dec, 2018 13:06 pm
  • அ+ அ-

ஜோதிஷணபூஷண் வேங்கடசுப்பிரமணியன் 

எதையும் நேருக்கு நேராகப் பேசுபவர்களே! இந்தப் புத்தாண்டு உங்களுடைய ராசிக்கு 12-ம் வீட்டில் பிறப்பதால் அலைச்சலுடன் ஆதாயம் உண்டாகும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். கடந்த காலத்தில் ஏற்பட்ட சுகமான அனுபவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். பால்ய நண்பர்களால் உதவிகள் உண்டு. பிரிந்துபோன உறவினர் சேர்வார்். திடீர் பயணங்கள் உண்டாகும். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். வங்கிக் கடன் கிடைக்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள்.

செவ்வாய் 5-ல் நிற்பதால் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். சகோதரர்களுடன் பிணக்குகள் வரும். கர்ப்பிணிப் பெண்கள் எடைமிகுந்த பொருட்களைச் சுமக்க வேண்டாம்.

இந்த ஆண்டு தொடக்கம் முதல் 12.02.2019 வரை உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் கேது நிற்பதால் எதையும் திட்டமிட்டுச் செய்வீர்கள்-. ஷேர் மூலம் பணம் வரும். வேற்றுமதத்தைச் சேர்ந்தவர்களால் உதவி் உண்டு. ராசிக்கு 9-ம் வீட்டில் ராகு நிற்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். தந்தையாருக்கு வேலைச்சுமை, வீண் டென்ஷன் அவருடன் மனத்தாங்கல் வந்து செல்லும். தந்தைவழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகளும் வரும்.

13.02.2019 முதல் வருடம் முடியும் வரை கேது உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டிலும், ராகு 8-ம் வீட்டிலும் அமர்வதால் சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களைத் தவிர்ப்பது நல்லது. கண்ணைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள். பல் வலி, காது வலி வந்து விலகும். பழைய கசப்பான சம்பவங்களையெல்லாம் பேசிக் கொண்டிருக்க வேண்டாம். அதன் மூலமாகப் பிரச்சினைகள் வரக்கூடும். காலில் அடிபடும்.

இந்த வருடம் முழுக்க சனி 2-ல் அமர்ந்து ஏழரைச் சனியில் பாதச் சனியாக இருப்பதால் பல் வலி, காது வலி வந்து நீங்கும். கண் பார்வையைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள். பிள்ளைகளைப் படிப்பின் பொருட்டுக் கசக்கிப் பிழிய வேண்டாம். அவர்களை விட்டுப் பிடிப்பது நல்லது. உறவினர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். சில உண்மைகளை வெளியிடங்களில் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். அந்தரங்க விஷயங்களை வெளியிடாமல் தேக்கி வைப்பது நல்லது. பணப்பற்றாக்குறை ஏற்படும். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையொப்பமிட்டுச் சிக்கிக் கொள்ளாதீர்கள்.

இந்த ஆண்டு பிறப்பு முதல் 12.03.2019 வரை மற்றும் 19.05.2019 முதல் 27.10.2019 வரை குரு உங்கள் ராசிக்குள்ளேயே அமர்ந்து ஜென்ம குருவாக இருப்பதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை இருக்கும். மஞ்சள் காமாலை, தலைச்சுற்றல், காய்ச்சல், அலர்ஜி வந்து நீங்கும். தண்ணீரைக் காய்ச்சி அருந்துங்கள். குடும்பத்தில் சச்சரவு வந்து விலகும். வெளியூர்ப் பயணங்களின்போது கவனமாகத் தேர்ந்தெடுத்து உணவருந்துங்கள். வாழ்க்கையின் மீது வெறுப்புணர்வு வந்து செல்லும்.

ஆனால், 13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசார வக்கிரமாவதாலும் 28.10.2019 முதல் வருடம் முடியும் வரை குரு உங்கள் ராசியை விட்டு விலகி 2-ம் வீட்டில் தொடர்வதாலும் பணவரவு உண்டு. பிரிந்திருந்த தம்பதி ஒன்று சேருவீர்கள். கூடாப்பழக்கங்களிலிருந்து விடுபடுவீர்கள். பிள்ளை பாக்கியம் கிடைக்கும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். ஒதுங்கியிருந்த உறவினர், நண்பர்கள் உங்கள் வளர்ச்சி கண்டு வலிய வந்து உறவாடுவார்கள். புது வீடு கட்டிக் குடிபுகுவீர்கள்.

வியாபாரிகளே! ஏற்ற இறக்கங்கள் இருக்கும். புது சலுகைத் திட்டங்களை அறிமுகப்படுத்துவீர்கள். சந்தை நிலவரங்களை உன்னிப்பாகக் கவனியுங்கள். பெரிய அளவில் முதலீடுகள் வேண்டாம். இருப்பதை வைத்து லாபம் ஈட்டப்பாருங்கள். புகழ் பெற்றவர்கள் உங்களுக்கு வாடிக்கையாளர்களாக வருவார்கள். அனுபவமிக்க வேலையாட்களைப் பணியில் அமர்த்துவீர்கள். அயல்நாடு, வெளிமாநிலத் தொடர்புடனும் புது வியாபாரம் செய்யத் தொடங்குவீர்கள்.

குழந்தைகள் வெளிநாடு செல்வார்கள். திருமண விஷயங்களும் சாதகமாகும். வியாபார விஷயமாக வழக்கு, நீதிமன்றம் செல்ல வேண்டாம். எதுவாக இருந்தாலும் பேசித் தீர்ப்பது நல்லது. முடிந்தவரை புதிய பங்குதாரரைச் சேர்க்கும் போது வழக்கறிஞரை ஆலோசித்து முடிவெடுக்கப் பாருங்கள். வெகுநாட்களாகப் பார்க்காமல் இருந்த பெரியவர்களைப் பார்த்து ஆசிர்வாதம் பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களே! உங்கள் கை ஓங்கும். உங்களுடைய ஆலோசனைகளை அதிகாரிகள் ஏற்றுக்கொள்வார்கள். சக ஊழியர்களுக்கும் சலுகைகள் பெற்றுத் தருவீர்கள். சம்பள உயர்வு, பதவி உயர்வையெல்லாம் எதிர்பார்க்கலாம். தேர்வில் தேர்ச்சி பெற்று அதன் மூலமாகவும் புதுப் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. எதிர்பாராத இடமாற்றம் உண்டு. சிலருக்கு அயல்நாட்டு வாய்ப்பும் வரும்.

இந்த 2019-ம் ஆண்டு சின்னச் சின்ன எதிர்ப்புகளையும் எதிர்பார்ப்புகளில் தாமதத்தையும் தந்தாலும் மாற்றுப் பாதையில் சென்று வெற்றிபெற வைக்கும்.

திருச்சி மாவட்டம், கல்லுக்குழி எனும் ஊரில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீஆஞ்சநேயரைச் சனிக்கிழமைகளில் சென்று வெற்றிலைமாலை அணிவித்து வணங்குங்கள், வசதி வாய்ப்புகள் பெருகும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close