[X] Close

2019 ஆங்கிலப் புத்தாண்டுப்பலன்கள் - துலாம்


2019-thulam

  • kamadenu
  • Posted: 27 Dec, 2018 13:01 pm
  • அ+ அ-

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

மனதில் பட்டதை மறைக்காதவர்களே! செவ்வாய் பகவான் 6-ம் வீட்டில் வலுவாக நிற்கும்போது இந்த 2019-ம் ஆண்டு பிறப்பதால் எல்லாப் பிரச்சினைகளையும் நெருக்கடிகளையும் சமாளிக்கும் சக்தி உண்டாகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களால் உதவிகள் உண்டு. கணவன்  மனைவிக்குள் இருந்துவந்த பிணக்குகள் விலகும். மனைவிவழியில் ஆதரவு் பெருகும். விலையுயர்்ந்த மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு் கூடும். வீடு, மனை வாங்குவது, விற்பது சுலபமாக முடியும்.

உங்களுடைய ராசியிலேயே இந்தப் புத்தாண்டு பிறப்பதால் வேலைச்சுமை அதிகமாகும். ஓய்வெடுக்க முடியாத நிலை உருவாகும். குடும்பத்தினருடன் சேர்ந்திருக்கும் நேரம் குறையும். உடல் உஷ்ணத்தால் வயிற்று வலி, தொண்டை புகைச்சல், கண் எரிச்சல் வந்துபோகும். வாயுக் கோளாறால் நெஞ்சு வலிக்கும் பயந்துவிடாதீர்கள்.

12.02.2019 வரை உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் கேது பகவானும் ராசிக்கு 10-ம் வீட்டில் ராகுவும் நிற்பதால் வாகன விபத்துகள், காரியத் தாமதம், வீண் அலைச்சல், டென்ஷன் வந்து் போகும். தாயாருக்குக் கை, கால் வலி, சோர்வு வந்து நீங்கும். அவ்வப்போது மற்றவர்களைப் போல நம்மால் சுதந்திரமாக இருக்க முடியவில்லையே என வருந்துவீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். ஆனால், 13.02.2019 முதல் வருடம் முடியும் வரை கேது 3-ம் வீட்டில் அமர்வதால் புதிய முயற்சிகள் பலிதமாகும்.

உங்களுக்குள் ஒரு சுயகட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வீர்கள். எதிரி அடிக்கடி வாய்தா வாங்கியதால் தள்ளிப் போய்க் கொண்டிருந்த வழக்கில் இனி, சாதகமான தீர்ப்பு வரும். இளைய சகோதரர் வகையில் ஆதாயமடைவீர்கள். ஆனால், ராகு 9-ம் வீட்டில் நிற்பதால் சேமிப்புகள் கரையும். தந்தையின் ஆரோக்கியம் பாதிக்கும். பிதுர்வழி சொத்தைப் பெறுவதில் தடைகள் வந்து நீங்கும். உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை தலைதூக்கும். வேற்றுமொழி பேசுபவர்கள், வேற்று மதத்தைச் சார்ந்தவர்கள், வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். வாகனங்களாலும் லாபமடைவீர்கள்.

இந்தாண்டு முழுக்க சனி 3-ம் வீட்டிலேயே நிற்பதால் திடீர் யோகம் உண்டு. பெரிய பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். நேர்மறைச் சிந்தனைகள் பிறக்கும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த விலைக்குப் பழைய மனையை விற்பீர்கள்.

சகோதர வகையில் அனுகூலம் உண்டு. அக்கம்பக்கத்து வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். வேற்றுமதத்தவர்கள், மொழியினரால் ஆதாயமடைவீர்கள். சிலர் அண்டை மாநிலம், வெளிநாடு சென்று வருவீர்கள். சபைகளில் முதல் மரியாதை கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.

இந்த ஆண்டு பிறப்பு முதல் 12.03.2019 வரை மற்றும் 19.05.2019 முதல் 27.10.2019 வரை குரு உங்கள் ராசிக்கு தனஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். ஆனால், 13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசார வக்ரமாவதாலும் 28.10.2019 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு குரு 3-ம் வீட்டிலேயே அமர்வதாலும் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளைப் பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். முக்கியக் கோப்புகளைக் கையாளும்போது அலட்சியம் வேண்டாம்.

வியாபாரிகளே! ஆழம் தெரியாமல் காலைவிடாதீர்கள். புது முதலீடுகளைத் தவிர்க்க வேண்டும். வேலையாட்களால் நிம்மதி குறையும். அதிக வேலையிருக்கும் நாட்களில் பணியாட்கள் விடுப்பில் செல்வார்கள். பல நேரம் நீங்களே முதலாளி, நீங்களே தொழிலாளி என்ற வகையில் வேலை பார்க்க வேண்டி வரும். அரசு சம்பந்தப்பட்ட டெண்டர்கள், காண்ட்ராக் விஷயத்தில் கவனமாகச் செயல்படுங்கள். கடையை வேறு இடத்திற்கு மாற்றுவீர்கள்.

போராடி பழைய பாக்கிகளை வசூல் செய்வீர்கள். யாருக்கும் கடன் தர வேண்டாம். அனுபவமில்லாத தொழிலில் பணத்தைக் கொட்டி நட்டப்படாதீர்கள்.  பழைய வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள். புரோக்கரேஜ், மூலிகை, பெட்ரோகெமிக்கல், பிளாஸ்டிக் வகைகளால் லாபமடைவீர்கள். அலங்காரப் பொருள் வர்த்தகம் சிறப்பாக நடக்கும். பங்குதாரர்களால் பிரச்சினைகள் வெடிக்கும். எதிர்பார்த்த ஆர்டர் தாமதமாக வரும்.

உத்தியோகஸ்தர்களே! உங்கள் ராசியிலே இந்தாண்டு பிறப்பதால் உத்தியோ கத்தில் நிலையற்ற போக்கு நிலவும். உங்களை விட வயதில், அனுபவத்தில் குறைவானவர்களிடமெல்லாம் நீங்கள் விட்டுக் கொடுத்துப்போக வேண்டிய சூழ்நிலை உருவாகும். அவசரப்பட்டு வேலையை விடுவதோ புது வேலையில் சேர்வதிலோ கவனம் தேவை.

சக ஊழியர்களைப் பற்றிய குறைப்பாடுகளை மூத்த அதிகாரிகளிடம் எடுத்துச் செல்ல வேண்டாம். ரகசியம் காக்க வேண்டும். அதிகாரிகளுக்குள் நடக்கும் மோதல்களையும் ஈகோ பிரச்சினைகளையும் வெளியாட்களிடம் சொல்லிக்கொண்டிருக்க வேண்டாம். சிலர் உங்கள் மீது அவதூறு வழக்குத் தொடர வாய்ப்பிருக்கிறது. நியாயமாகக் கிடைக்க வேண்டிய சம்பள உயர்வு, சலுகைகளைக் கூடப் போராடிப் பெற வேண்டி வரும்.

இந்தப் புத்தாண்டு உங்களுக்குப் பல சோதனைகளைத் தந்தாலும், எதையும் திட்டமிட்டுச் செய்ய வேண்டிய அவசியத்தையும் தன் கையே தனக்குதவி என்பதையும் அறிவுறுத்துவதாக அமையும்.

திருவாரூர் மாவட்டம், வேளுக்குடி எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீகோமளாம்பிகை அம்பாள் உடனுறை ஸ்ரீருத்ரகோடீஸ்வரரைத் திங்கட்கிழமைகளில் சென்று வில்வமாலை அணிவித்து வணங்குங்கள், பிணிகள் அகலும்.

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close