[X] Close

2019 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - தனுசு


2019-dhanusu

  • kamadenu
  • Posted: 27 Dec, 2018 12:37 pm
  • அ+ அ-

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

தராதரம் அறிந்து பழகுபவர்களே! உங்களுடைய ராசிக்கு லாப வீட்டில் சந்திரன் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் அதிகரிக்கும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சவாலான காரியங்களைக் கூட எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தில் நல்லது நடக்கும்.

மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். நட்பு வட்டம் விரிவடையும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். வீடு கட்டு வதற்கு, தொழில் தொடங்குவதற்கு வங்கிக் கடன் உதவி கிடைக்கும். ப்ளான் அப்ரூவாகி வரும்.

புத்தாண்டின் தொடக்கத்தில் உங்களுடைய ராசிக்குள்ளேயே சூரியனும் புதனும் நிற்பதால் செயலில் வேகம் கூடும். அரசால் அனுகூலம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வி.ஐ.பிகளின் உதவியுடன் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள்.

வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். நவீன ரக மின்னணு, மின்சாரச் சாதனங்கள் வாங்குவீர்கள். சொந்த ஊர், பொது நிகழ்ச்சிகளையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள்.

12.02.2019 வரை உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் கேதுவும், 8-ல் ராகுவும் அமர்ந்திருப்பதால் சிறுசிறு விபத்துகள், ஏமாற்றங்கள், வீண் விரயம், இனந்தெரியாத கவலைகள் வந்து செல்லும். சிலர் உங்கள் வாயைக் கிளறி வேடிக்கைப் பார்ப்பார்கள். அதிகம் பேச வேண்டாம். பார்வைக் கோளாறு, பல் வலி, காது வலி மற்றும் கணுக்கால் வலி வந்து செல்லும். 13.02.2019 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்குள்ளேயே கேது பகவானும் ராசிக்கு 7-ம் வீட்டில் ராகுவும் அமர்வதால் கோவில் விஷேங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். திடீர் பயணங்கள் உண்டு. என்றாலும் தூக்கம் குறையும். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்சினையால் பிரிவு வரக்கூடும். மனைவிக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மாதவிடாய்க் கோளாறு வந்து செல்லும். வழக்கால் நெருக்கடிகள் வந்து நீங்கும்.

இந்தாண்டு முழுக்க சனி உங்கள் ராசிக்குள் நின்று ஜென்மச் சனியாக வருவதால் யாரிடமாவது சண்டைபோட வேண்டுமென்று தோன்றும். உங்களைப் பற்றித் தவறாக எப்போதோ எங்கேயோ யாரோ சொன்னதெல்லாம் இப்போது நினைவிற்கு வந்து புலம்புவீர்கள். சாப்பாட்டில் உப்பை க்குறை யுங்கள். நெஞ்சு படபடப்பு, தலைச்சுற்றல், கை, கால் மரத்துப் போகுதல் வந்து நீங்கும். லாகிரி வஸ்துக்களைத் தவிர்ப்பது நல்லது.

உங்கள் இயல்புக்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். சிலர் மூக்குக் கண்ணாடி அணிய வேண்டி வரும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் இருக்கும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். வழக்கை நினைத்துக் கவலையடைவீர்கள்.

இந்த ஆண்டு பிறப்பு முதல் 12.03.2019 வரை மற்றும் 19.05.2019 முதல் 27.10.2019 வரை குரு உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் நிற்பதால் திடீர் பயணங்களால் அலைச்சல், செலவுகள் இருக்கும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். தூக்கமின்மை, கனவுத் தொல்லை, ஒருவிதப் படபடப்பு வந்து செல்லும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். யாருக்கும் பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். கோயில் கும்பாபிஷேகத்தில் முதல் மரியாதை கிடைக்கும்.

13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசார வக்ரமாவதாலும் 28.10.2019 முதல் வருடம் முடியும் வரை குரு உங்கள் ராசிக்குள் நுழைந்து ஜென்ம குருவாக அமர்வதாலும் ஆரோக்யம் பாதிக்கும். வேலைச்சுமையால் டென்ஷன் அதிகரிக்கும். பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரம்மை வந்து நீங்கும். வாயுத் தொந்தரவால் நெஞ்சு வலிக்கும். காய்ச்சல், சிறுநீரகத் தொற்று வந்து் செல்லும். வெளி உணவுகள், வாயுப் பதார்த்தங்களைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில், கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகத்தால் பிரிவுகள் வரக்கூடும்.

விலை உயர்ந்த தங்க ஆபரணங்களைக் கவனமாகக் கையாளுங்கள். இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து போகும். பல வருடங்களாகப் பழகிய நண்பர்கள் கூட உங்களைத் தவறாகப் புரிந்துகொள்வார்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும்.

வியாபாரத்தில் நமக்குப் பின்னால் வந்து முதல் போட்டு ஏகப்பட்ட லாபம் எதிர்கடையில் உள்ளவர்கள் பார்த்துவிட்டார்கள். பல வருடம் இங்கேயே இருந்தும் லாபத்தைப் பார்க்க முடிய வில்லையே-என்று நீங்கள் புலம்பித் தவித்தீர்களே! இனி, கடையை நவீனமயமாக்குவீர்கள். பொறுப்பில்லாத வேலையாட்களை மாற்றுவீர்கள். விளம்பர உத்திகளைச் சரியாகக் கையாண்டு பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள்.

உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். அலுவலகம் சம்பந்தமாக வெளி மாநிலம், அயல்நாடு செல்ல வேண்டி வரும். என்றாலும், அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாகச் செயல்பட வாய்ப்பிருக்கிறது. அலுவலகம் சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங் களைக் கவனமாக கையாளுங்கள். காணாமல் போக வாய்ப்பிருக்கிறது. சக ஊழியர்களால் சின்ன சின்ன இடையூறுகளைச் சமாளிக்க வேண்டி வரும்.

இந்த 2019-ம் ஆண்டு உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை காட்டிக் கொடுப்பதுடன், நீண்டகாலக் கனவுகளை நனவாக்குவதாகவும் அமையும்.

திருநெல்வேலி மாவட்டம், தாமிரபரணி நதிக்கரையில் அமர்ந்திருக்கும் ஸ்ரீஉச்சிஷ்ட கணபதியை சதுர்த்தி திதி நடைபெறும் நாளில் சென்று அருகம்புல் மாலை அணிவித்து வணங்குங்கள், மகிழ்ச்சி பெருகும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close