[X] Close

2019 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - கன்னி


2019-kanni

  • kamadenu
  • Posted: 27 Dec, 2018 12:30 pm
  • அ+ அ-

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

கனிவாகப் பேசி காய் நகர்த்துபவர்களே! சூரியனும் புதனும் 4-ல் வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டாகும். புதிதாகச் சொத்து வாங்குவீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும்.

திடீர் பயணங்கள் உண்டு. உங்கள் ராசிக்கு 2-வது ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எதிர்பார்த்திருந்த தொகை வந்து சேரும். குடும்பத்தில் அமைதி பிறக்கும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக்கொள் வார்கள். இந்த ஆண்டு தொடக்கம் முதல் 12.02.2019 வரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் கேது நிற்பதால் பிள்ளைகள் கோபப்படுவார்கள். அவர்களிடம் உங்களின் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் அதிக எடையுள்ள சுமைகளைத் தூக்க வேண்டாம். கர்ப்பச் சிதைவு ஏற்படக்கூடும்.

பூர்வீகச் சொத்தைச் சரியாகப் பராமரிக்க முடியவில்லையே என வருத்தப்படுவீர்கள். ராகு லாப வீட்டில் நிற்பதால் ஷேர் மூலம் பணம் வரும். கடந்த கால இனிய அனுபவங்களை நினைவு்கூர்ந்து மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். அரசால் அனுகூலம் உண்டு. ஆனால், 13.02.2019 முதல் வருடம் முடியும் வரை கேது 4-ம் வீட்டிலும், ராகு 10-ம் வீட்டிலும் அமர்வதால் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும்.

எதிர்காலம் பற்றிய கவலை அடி மனதில் நிழலாடும். வாகனத்தை இயக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா எனப் பார்த்துக் கொள்ளுங்கள். அவ்வப்போது நேர்மறை எண்ணங்களை உள்மனதில் வளர்த்துக்கொள்வது நல்லது.

வருடப் பிறப்பின்போது செவ்வாய் 7-ம் வீட்டில் நிற்பதால் கணவன் மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து் போகும். மனைவியின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். இந்தாண்டு முழுக்க சனி சாதகமாக இல்லாததால் மனத்தாங்கலால் தாயாரைப் பிரிய வேண்டி வரும். தாய்வழி உறவினர்களுடனும் கருத்து மோதல்கள் வரும்.

இந்த ஆண்டு பிறப்பு முதல் 12.03.2019 வரை மற்றும் 19.05.2019 முதல் 27.10.2019 வரை குரு உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் நிற்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளைப் பார்க்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகும். ஆனால், 13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசார வக்கிரமாவதாலும் 28.10.2019 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு குரு 4-ம் வீட்டிலேயே அமர்வதாலும் இழுபறியாக இருந்த காரியங்களெல்லாம் முடிவடையும்.

என்றாலும் தாயாருக்கு முதுகு, மூட்டு வலி, சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்து் செல்லும். தாயார், அத்தை வழியில் மனஸ்தாபம் வந்து நீங்கும். வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அணிந்து செல்லுங்கள்.

வியாபாரிகளே! கடந்தாண்டில் ஏற்பட்ட நஷ்டங்களையெல்லாம் சரி செய்வீர்கள். மக்களின் ரசனையைப் புரிந்துக்கொண்டு புது வியூகம் அமைத்து லாபம் ஈட்டுவீர்கள். முக்கிய சாலைக்குக் கடையை மாற்றத் திட்டமிடுவீர்கள். சிலர் சொந்த இடம் வாங்கிக் கடையை மாற்றுவீர்கள். சந்தையில் மதிக்கப்படுவீர்கள். மாற்றுமொழி் பேசுபவர்களும், பிரபலங்களும் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள்.

உத்தியோகஸ்தர்களே! அலுவலகத்தில் பாராட்டப்படுவீர்கள். எதிராகச் செயல்பட்ட அதிகாரி வேறு இடத்திற்கு மாறுவார். புது அதிகாரியால் மதிக்கப்படுவீர்கள். என்றாலும் ராகு 10-ல் அமரவிருப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளைச் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். அடிக்கடி விடுப்பில் செல்லாதீர்கள்.

உங்களுடைய உழைப்பைப் பயன்படுத்தி வேறு சிலர் முன்னேறுவார்கள். சக ஊழியர்களில் ஒருசாரார் உங்களுக்கு ஆதரவாகவும் மற்றொரு சாரார் எதிராகவும் செயல்படுவார்கள். எதிர்பார்த்த சலுகைகளும், சம்பள உயர்வும் சற்றுத் தாமதமாகக் கிடைக்கும். உத்தியோகம் சம்பந்தமாக அயல்நாடு செல்வீர்கள்.

இந்த 2019-ம் ஆண்டு எவ்வளவோ முயன்றும் முன்னுக்கு வராமல் முனகிக் கொண்டிருந்த உங்களை வெற்றி பெற வைப்பதுடன், எதிர்காலத் திட்டங்களையும் நிறைவேற்றுவதாக அமையும்.

மதுரை மாவட்டம், பசுமலை எனும் ஊரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீவிபூதி விநாயகரை சதுர்த்தி திதி நடைபெறும் நாளில் சென்று அருகம்புல்மாலை அணிவித்து வணங்குங்கள் சங்கடம் தீரும்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close