[X] Close

2019 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - கடகம்


2019-kadagam

  • kamadenu
  • Posted: 27 Dec, 2018 12:17 pm
  • அ+ அ-

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

புதுமை விரும்பிகளே! சூரியனும் சந்திரனும் வலுவாக வீடுகளில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த 2019-ம் ஆண்டு பிறப்பதால் தன்னம்பிக்கையுடன் எதையும் சாதிப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. பேச்சில் முதிர்ச்சி தெரியும். பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமலிருந்த சொத்தை மீதிப்பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் உயர்கல்வி அமையும்.

பழைய கடன் பிரச்சினையில் ஒன்று தீரும். சொந்தபந்தங்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். சகோதரிக்குத் திருமணம் நிச்சயமாகும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். 12.02.2019 வரை ராசிக்கு 7-ல் கேதுவும் உங்கள் ராசிக்குள்ளேயே ராகுவும் நிற்பதால் மூச்சுத் திணறல், அல்சர், ரத்த சோகை வந்து் செல்லும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து விலகும். மனைவி உணர்ச்சிவசப்பட்டுப் பேசினால் அதைப் பெரிதுபடுத்த வேண்டாம்.

ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போங்கள். முன்கோபத்தைத் தவிர்க்கப் பாருங்கள். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கர்ப்பப்பையில் கட்டி வந்து நீங்கும். 13.02.2019 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசியை விட்டு ராகு விலகி 12-ம் வீட்டிலும், கேது 6-ம் வீட்டிலும் அமர்வதால் மனப்போராட்டங்கள் ஓயும். கணவன் மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். கோயில் கும்பாபிஷேகத்தை எடுத்து நடத்துவீர்கள்.

ஷேர் மூலம் பணம் வரும். பழைய சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள். சோர்வு, சலிப்பு நீங்கி உற்சாகத்துடன் வளம் வருவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை உணர்வீர்கள். வேற்றுமதத்தவர், வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள்.

இந்த ஆண்டு பிறப்பு முதல் 12.03.2019 வரை மற்றும் 19.05.2019 முதல் 27.10.2019 வரை குரு உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் நிற்பதால் நல்லவர் களின் நட்பு கிடைக்கும். பழைய சிக்கல்கள், பிரச்சினைகளெல்லாம் ஒவ்வொன்றாகத் தீரும். குடும்பத்தில் நல்லது நடக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி, உத்தியோகம் அமையும்.

குடும்பத்தினருடன் குலதெய்வக் கோயிிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை நிறைவேற்றுவீர்கள். ஆனால், 13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசார வக்கிரமாவதாலும் 28.10.2019 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு குரு 6-ம் வீட்டில் மறைவதாலும் சின்னச் சின்ன காரியங்களைக் கூட இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து விலகும். பிரபலங்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். சட்ட விதிகளை மீறி யாருக்கும் உதவ வேண்டாம். சிலர் தங்களின் ஆதாயத்துக்்காக உங்களைப் பற்றிய தவறான வதந்திகளைப் பரப்புவார்கள்.

இந்தாண்டு முழுக்க சனி 6-ம் வீட்டிலேயே நீடிப்பதால் எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். பாதியில் நின்ற வீடு கட்டும் வேலையைத் தொடங்குவீர்கள். வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். சொத்து சேரும். தந்தையாருடனான கருத்து மோதல்கள் நீங்கும். அவருக்கு இருந்த நோய் விலகும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். புது வேலை கிடைக்கும். வேற்றுமதத்தவர்கள், வெளிநாட்டிலிருப்பவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும்.

வியாபாரிகளே! இரட்டிப்பு லாபம் உண்டாகும். அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். சந்தை நிலவரத்தை அறிந்து அதற்கேற்ப முதலீடு செய்து வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள். உணவு, ஃபைனான்ஸ், தோல், வாகன வகை்யில் ஆதாயமடைவீர்கள். பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். விலகிச் சென்ற நம்பிக்கையான பங்குதாரர் மீண்டும் வந்து இணைவார். வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களே! தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். சவாலான காரியங்களையும் சாராணமாகச் செய்து முடிப்பீர்கள். சில சிறப்புப் பொறுப்புகளை உங்களிடம் ஒப்படைப்பார்கள். சக ஊழியர்களும் மதிப்பார்கள். பதவி உயர்விற்காக உங்களது பெயர் பரிசீலிக்கப்படும். எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும். சம்பளம் உயரும்.

இந்த 2019-ம் ஆண்டு உங்களை விஸ்வரூபமெடுக்க வைப்பதுடன், திடீர் யோகங்களையும் வெற்றியையும் அள்ளித் தருவதாக அமையும்.

பொள்ளாச்சி, சுந்தராபுரம் எனும் ஊரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு முத்துமாரியம்மனை வெள்ளிக்கிழமைகளில் சென்று வேப்பிலைமாலை அணிவித்து வணங்குங்கள். பகை நீங்கும்.

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close