[X] Close

2019 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - மேஷம்


2019-mesham

  • kamadenu
  • Posted: 27 Dec, 2018 11:58 am
  • அ+ அ-

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

கற்பூரப் புத்தி கொண்டவர்களே! உங்கள் ராசியைச் சந்திரன் பார்த்துக்கொண்டிருக்கும் போது இந்த ஆண்டு பிறப்பதால் மன இறுக்கம் குறையும். எதையும் திட்டமிட்டுச் செயல்படுவீர்கள். வேலையில்லாதவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பழைய சிக்கல்களுக்குத் தீர்வு கிடைக்கும். கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். பொது விழாக்கள், கல்யாணம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள்.

12.02.2019 வரை உங்கள் ராசிக்கு 10-ல் கேதுவும், 4-ம் வீட்டில் ராகுவும் நீடிப்பதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்குள்ளா வீர்கள்.  உத்தியோகத்தில் இடமாற்றங்கள், சம்பளப் பிரச்சினை, மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். தாயாருக்கு முதுகுத் தண்டு வடத்தில் வலி, தலைச்சுற்றல் வந்து செல்லும். வாகனத்தை இயக்கும்போது அலைபேசியில் பேச வேண்டாம். விபத்துகள் நிகழக்கூடும்.

13.02.2019 முதல் இந்த ஆண்டு முடியும் வரை ராசிக்கு 9-ம் வீட்டில் கேது அமர்வதால் பிதுர்வழி சொத்துப் பிரச்சினை தலைதூக்கும். தந்தையாருடன் மனஸ்தாபங்கள் வரக்கூடும். அவருக்கு மூட்டு வலி, சின்ன அறுவை சிகிச்சைகள் வந்து செல்லும். ஆனால், ராகு 3-ம் வீட்டில் அமர்வதால் பயம், படபடப்பு நீங்கும். மனோபலம் அதிகரிக்கும். தள்ளிப் போன விஷயங்கள் முடியும். இளைய சகோதரர் வகையில் இருந்த பிணக்குகள் நீங்கும்.

பங்கு வர்த்தகத்தால் பணம் வரும். இந்தாண்டு முழுக்க சனி பகவான் உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் நிற்பதால் தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். புதிதாக சொத்து வாங்குவீர்கள். தந்தைவழியில் உதவிகள் உண்டு. வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். பயணங்கள் அதிகரிக்கும்.

உங்கள் ராசிநாதன் செவ்வாய் ராசிக்கு 12-ல் நிற்கும் போது இந்தாண்டு பிறப்பதால் சிக்கனமாக இருப்பது சிரமமாக இருக்கும். சிலர் அயல்நாடு சென்று வருவீர்கள். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். சகோதர வகையில் அன்புத் தொல்லைகள் அதிகரிக்கும். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் ஏற்படும்.

இந்த ஆண்டு பிறப்பு முதல் 12.03.2019 வரை மற்றும் 19.05.2019 முதல் 27.10.2019 வரை குரு உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் நிற்பதால் வீண் அலைக்கழிப்புகள் அதிகரிக்கும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தாமதமாக வரும். மனத்தில் இனம்புரியாத கவலைகள் வந்துபோகும். தன்னம்பிக்கை குறையும். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள்.

தங்க நகைகளை இரவல் வாங்கவோ தரவோ வேண்டாம். ஆனால், 13.03.2019 முதல் 18.05.2019 வரை குரு பகவான் அதிசார வக்கிரமாவதாலும்  28.10.2019 முதல் வருடம் முடியும் வரை குரு உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டிலேயே அமர்வதாலும் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துச் சேமிக்கத் தொடங்குவீர்கள். குடும்பத்திலும் மகிழ்ச்சி உண்டு. பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ளுமளவுக்கு நெருக்கமாவீர்கள்.

திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் அல்லது அறை அமைக்கும் முயற்சிகள் பூர்த்தியாகும். தந்தையுடனான மோதல்கள் விலகும். அவருக்கிருந்த நோய் விலகும்.

வியாபாரிகளே! இந்தாண்டு பற்று வரவு சுமாராக இருக்கும். பழைய சரக்குகளை வீற்றுத் தீர்ப்பீர்கள். கடை ஊழியர்களின் நடத்தையை நினைத்து வருத்தப்படுவீர்கள். கடையை அவசரப்பட்டு வேறு இடத்துக்கு மாற்ற வேண்டாம். இருக்கிற இடத்திலேயே தொடர்வது நல்லது. பங்குதாரர்கள் கொஞ்சம் ஏடாகூடமாகப் பேசுவார்கள். தரமான பொருட்களை விற்பனை செய்வதால் புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். தரகு, இரும்புக்கழிவு, சிமெண்ட், மருந்துகளால் ஆதாயமடைவீர்கள்.

உத்தியோகஸ்தர்களே! எதிர்ப்புகள் எவ்வளவு இருந்தாலும் உங்களின் விடா முயற்சியும் கடின உழைப்பும் உங்களை வெற்றிப் பாதைக்குக் கொண்டுசெல்லும். சக ஊழியர்களுடன் சலசலப்புகள் வரக்கூடும். நியாயத்தை எடுத்துச் சொல்லப் போய் உங்கள் பெயர் கெட வாய்ப்பிருக்கிறது. எனவே இடம், பொருள், ஏவல் அறிந்து உங்கள் கருத்துகளை வெளியிட வேண்டும். அதிக சம்பளத்துடன், சலுகைகளுடன் வாய்ப்புகள் வந்தாலும் யோசித்து ஏற்பது நல்லது.

இந்த 2019-ம் ஆண்டு வேலைச்சுமையையும், மன அமைதியின்மையையும் தந்தாலும் உங்களுடைய பலம் எது, பலவீனம் எது என்பதை உணர்த்துவதாக அமையும்.

தர்மபுரி மாவட்டம், தகட்டூர் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீகாமாட்சி அம்பாள் உடனுறை ஸ்ரீமல்லிகார்ஜுனேசுவரரை பிரதோஷ நாளில் சென்று திருநீற்றுப்பச்சை இலைமாலை அணிவித்து வணங்குங்கள், செல்வம் பெருகும்.

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close