[X] Close

சிதம்பர அதிசயங்கள்!


chidambarm

  • வி.ராம்ஜி
  • Posted: 23 Dec, 2018 10:32 am
  • அ+ அ-

வி.ராம்ஜி

     தில்லை எனும் மரங்கள் சூழ்ந்திருந்ததால் தில்லைவனம் என அழைக்கப்பட்டது. இப்போது சிதம்பரம் என்றால்தான் தெரியும் எல்லோருக்கும்!  புலிக்கால் முனிவர் என்ற வியாக்ரபாதருக்கும்,  ஆதிசேஷனின் அவதாரமான பதஞ்சலி முனிவருக்கும் தைப்பூசத் திருநாள் அன்று தில்லையில் இறைவன் ஆனந்த நடனத் திருக்காட்சி அளித்தான் என கோயில்புராணம் கூறும். அவர்களுக்குக் காட்சியளித்த அன்று தொட்டு இறைவன் அங்கே ஆனந்தத் தாண்டவ மூர்த்தியாய் எழுந்தருளி ஆன்மாக்களுக்கு அருள் வழங்கி வருகிறான்.

 இரண்டு முனிவர்களுக்கும் இறைவன் காட்சியளித்த இடம் சித்சபை எனப்படுகிறது.  இதுவே ’திருச்சிற்றம்பலம்’ என்பதாக விவரிக்கின்றன புராணங்கள். இங்குதான் நடராஜர் எழுந்தருளியுள்ளார். இதன் மேற்கூரை தங்கத்தால் வேயப்பட்டுள்ளது. சிறு & அம்பலம் என்பதே சிற்றம்பலம். சிறிய வெளி என்று பொருள். அம்பலம்- என்றால் வெளி, ஆகாயம்.நமது இதயத்தில் ஒரு சிறு வெளி இருப்பதாகவும் அதில் கட்டைவிரல் அளவே நம் ஆன்மா இருப்பதாகவும் கடோபநிஷத் விவரிக்கிறது!

 அந்த ஆன்மாவுக்குள் ஆன்மாவாய் இறைவன் ஆனந்த நடனம் ஆடிக்கொண்டிருப்பதாய் சிவாகமங்கள் கூறுகின்றன. அந்தச் சிறு வெளியை நம் சாஸ்திரங்கள் ‘தகர ஆகாயம்’ எனக் குறிப்பிடுகின்றன. தகரம் என்றால் சிறுமை. ஆகாயம் என்பது வெளி. இதுவே தமிழில் ‘சிற்றம்பலம்’ எனப்படுகிறது. இதனை நம் போன்றோர் உணர்ந்து வழிபட்டு உய்வதற்காக தில்லையில் திருச்சிற்றம்பலத்தில் இறைவன் திருக்காட்சியளித்ததாக ச் சொல்கிறது ஸ்தல புராணம்!

 எல்லா சிவாலயத்திலும்  கருவறையில் சிவலிங்கம் காணப்படும். அந்தக் கருவறையைச் சுற்றி தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், சண்டிகேசர், நடராஜர், பைரவர், பிட்சாடனர் ஆகியோர் வீற்றிருப்பர். ஆனால் திருச்சிற்றம்பலம் எனப்படும் சிதம்பரத்தில் ஆடல்வல்லானே முதல் மூர்த்தியாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறார். சிவலிங்க மூர்த்தியான திருமூலநாதர் சித்சபைக்குப் பின்புறம்தான் எழுந்தருளியிருக்கிறார்.

   இறைவன் உயிர்களுக்காக 9 வித வடிவங்கள் எடுக்கிறான். பிரம்மன், விஷ்ணு, ருத்ரன், மகேஸ்வரன், சதாசிவன், விந்து, நாதம், சக்தி, சிவம் என்பன அவை. இந்நிலையை ’நவந்தரு பேதம்’ என சைவ சித்தாந்த நூல்கள் விளக்குகின்றன. இந்த ஒன்பது வடிவங்களுக்கும் மேலான நிலைதான் மகாசதாசிவ தாண்டவேஸ்வரர்! இந்த வடிவில்தான் சிதம்பரத்தில் அருள்பாலிக்கிறார்!

  நடராஜரின் வழிபாட்டின் போது ‘நடராஜர் வருகிறார்’ எனும் கட்டியம் கூறும் மரபு உள்ளது. எனவே இந்த அடிப்படையிலேயே தில்லை நடராஜப் பெருமான் மூல மூர்த்தியாக வழிபடப்படுகிறார்.

  சாதாரணமாக, கருவறை என்பது ஒரு கலசம் உடையது. கருவறைக்கு அதிஷ்டானம், பாதம், பிரஸ்தாரம், கண்டம், சிகரம், ஸ்தூபி என்று 6 உறுப்புகள் உண்டு. இதிலிருந்து வேறுபடுவது சபை. திருச்சிற்றம்பலம் சபை ஆதலினால் அதற்கு 9 கலசங்கள் உள்ளன. அதில் கண்டம் என்ற உறுப்பு தவிர பிற காணப்படுகின்றன. திருச்சிற்றம்பலம் மரத்தாலானது.

 தில்லையில் மட்டுமே 5 சபைகள் உள்ளன. ஆயிரங்கால் மண்டபம் ஆன ராஜசபை, உற்ஸவ மூர்த்திகள் வீற்றிருக்கும் தேவ சபை, நிருத்த சபை, கனக சபை, சித்சபை என்பன.இவை ஐந்தும் அன்னமய, பிராணமய, மனோமய, விஞ்ஞானமய, ஆனந்தமய கோசங்களைக் குறிப்பிடுகின்றன!

  ஸ்ரீமத் ஆனந்த நடராஜப் பெருமான் எழுந்தருளியுள்ள திருச்சிற்றம்பலம் தங்க விமானத்தில் 9 கலசங்களுடன் கிழக்கு மேற்காக நீள் சதுர வடிவிலானது. தெற்குப்பகுதி தவிர மற்றப் பகுதிகள் சந்தனப் பலகைகளால் மூடப்பட்டுள்ளன. நடராஜப் பெருமான் வீற்றிருக்கும் மேடை தரை மட்டத்திலிருந்து சுமார் 5 அல்லது 6 அடி உயரத்தில் உள்ளது.

  திருச்சிற்றம்பலத்தின் முன்புறம் கனகசபை அமைந்துள்ளது. அடியார்கள் இங்கிருந்தே நடராஜப் பெருமானை வணங்குவர். இந்த கனகசபையில் ஒன்பது வாசல்கள் உள்ளன. இவை நமது உடலில் உள்ள ஒன்பது வாசல்களைக் குறிக்கும். இந்த கனக சபை பிரம்மபீடப் பகுதி. கனக சபையில் உள்ள 18 தூண்கள் 18 புராணங்களைக் குறிக்கின்றன!

அந்தச் சபையில் அன்னப் பாவாடை பரப்புவதற்காக அமைக்கப்பட்டுள்ள ஐந்து பெரிய தளவரிசைக் கற்கள் பஞ்ச பூதங்களைக் குறிப்பிடுகின்றன. கனகசபையிலிருந்து திருச்சிற்றம்பலத்திற்கு ஏறும் ஐந்து வெள்ளிப் படிகளும் பஞ்சாட்சரப் படிகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்தப் படிகளின் இருபக்கங்களிலும் யானை உருவம் இருப்பதால் திருக்களிற்றுப்படி எனப் போற்றப்படுகிறது!

 கனகசபையிலிருந்து திருச்சிற்றம்பலம் எனப்படும் சித்சபைக்கு செல்லும் நுழைவாயிலில் பஞ்சாட்சரப் படிகளுக்கு மேலே அமைந்த கதவினை அவித்யை என்பர். இருபுறமும் தண்டி , முண்டி எனும் இரு துவாரபாலகர்கள் உள்ளனர். இவ்வாயில் இதயவாயில் எனப்படும்.  திருச்சிற்றம்பலத்தில் ஐந்து தெய்வீகப் பீடங்கள் உள்ளன. பஞ்சாட்சரப் படி ஏறி கால் வைக்கும் இடம் பிரம்ம பீடம்.

 அடுத்து திருச்சிற்றம்பலத்தினுள் சுமார் ஓரடி அகலமுள்ள இடத்தில் ஐந்து தங்கத் தூண்கள் உள்ளன. இது விஷ்ணுபீடம் எனப்படும். இந்த ஐந்து தூண்களும் பஞ்ச பூதங்களாகும்.

  நடராஜப் பெருமான் முன்பு தீட்சிதர்கள் நின்று பூஜை செய்யும் இடம் ருத்ரபீடம் என்றும் நடராஜ மூர்த்தியும் சிவகாமி அம்மையும் வீற்றிருக்கும் பீடம் மகேஸ்வர பீடம் என்றும் சொல்லப்படுகிறது. இது சுமார் 6 அல்லது 7 அடி நீளமும் 3 அடி அகலமும் கொண்டு தங்கத்தால் மூடப்பட்டிருக்கும்.

  மகேஸ்வர பீடத்துக்கு இருபடிகள் உண்டு. மேற்குப்படியில் சந்திரமௌலீசுவரர் ஆகிய ஸ்படிக லிங்கமூர்த்தியும், ரத்தின சபாபதி ஆகிய ரத்தினத்தினாலான நடராஜ மூர்த்தியும் தனித் தனிப் பெட்டிகளில் எழுந்தருளியுள்ளனர். மகேஸ்வர பீடத்தில் ரத்தினம் இழைத்த இறைவனின் திருவடிகள் சிவ பாதுகை எனும் தங்கத் தட்டில் இறைவனுக்கு வலப் பக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீமத் நடராஜ மூர்த்தியின் வலப்புறத்தில் ஸ்ரீமுகலிங்கம் உள்ளது.

 நடராஜமூர்த்தியும் சிவகாமி அன்னையும் வீற்றிருக்கும் மகேஸ்வர பீடத்தில் பத்து தூண்கள் உள்ளன. அதில் உள்ள 4 தூண்கள் 4 வேதங்களையும்  ஆறு தூண்கள் ஆறு சாஸ்திரங்களையும் குறிக்கின்றன!

  சிதம்பர ரகசியம் எனப் போற்றப்படும் ஸ்ரீ ரகசியம் இருக்கும் பீடம் சதாசிவ பீடம் ஆகும். இறைவன் ஓர் உருவும் ஒரு நாமமும் இன்றி சிற்பர வியோமமாக அண்ட சராசரங்களையும் தொழிற்படுத்தி நடத்தி வரும் ஞான வடிவமே சிதம்பர ரகசியம்!

 திருச்சிற்றம்பலத்தின் மேல் அமைந்த 64 சந்தனக் கைமரங்களும் 64 கலைகளைக் குறிக்கும். பொன்னம்பலத்தின் தங்கக் கூரையில் உள்ள 21,600 தங்க ஓடுகள் ஒரு நாளில் மனிதன் விடும் சுவாசங்களின் எண்ணிக்கையைக் குறிக்கின்றன. இந்த ஓடுகளில் பொருத்தப்பட்டுள்ள 72,000 ஆணிகளும் நம் உடலில் உள்ள நாடிகளின் எண்ணிக்கையைச் சொல்கின்றன!

       சித்சபையின் 9 கலசங்கள் நவசக்திகளைக் குறிக்கும்.இதில் உள்ள 224 அடைப்புப் பலகைகள் 224 உலகங்களைக் குறிப்பன. சிதம்பர ரகசியத்தை கனகசபையிலிருந்து 96 துவாரங்கள் உள்ள பலகணி (ஜன்னல்) வழியாக தரிசிக்க வேண்டும். இந்த 96 துவாரங்கள் 96 தத்துவங்களைத் தெரிவிக்கின்றன!

  சித்சபையின் உள்ளே இறைவன் அருவம், உருவம், அருவுருவம் எனும் 3 நிலைகளில் எழுந்தருளியுள்ளான். சிதம்பர ரகசியம் அருவம், ஆனந்த நடராஜர் உருவம், ஸ்படிகலிங்கம் அருவுருவம். இதனை சேக்கிழார் பெரியபுராணத் தொடக்கத்தில், ’உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்’ எனும் திருப்பாடலில் விளக்குகிறார்!

  திருச்சிற்றம்பலம்... திருச்சிற்றம்பலம்..!
 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close