[X] Close

திருமணஞ்சேரிக்கு இணையான தண்டந்தோட்டம்!  - நடனபுரீஸ்வரர் அற்புதங்கள்


nadanapureeswarar

  • வி.ராம்ஜி
  • Posted: 22 Dec, 2018 15:45 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

 தேவர்களுக்காகவும் முனிவர் பெருமக்களுக்காகவும் சிவபெருமான் தன் திருநடனக் காட்சியைக் காட்டி அருளினார் என்கிறது ஸ்தல புராணம். அப்போது, வேகவேகமாக ஆடிய வேளையில், அவர் காலில் கட்டியிருந்த சலங்கையின் மணிகள், தெறித்து எங்கெங்கோ விழுந்தன. அப்படி மணிகள் சிதறிய இடங்களில் கோயில்கள் எழுப்பப்பட்டன. அவற்றில், நடார் எனும் ஊரில் ஸ்ரீமணிகண்டேஸ்வரர் என்றும், தாண்டவர்தோட்டம் எனும் கிராமத்தில் திருநடனபுரீஸ்வரர் என்கிற திருநாமத்துடனும் சிவபெருமான் அருள்பாலிக்கிறார்!

  நடனபுரி, நர்த்தனபுரி, தாண்டவர்தோட்டம் என்று இந்த ஊருக்கு பல பெயர்கள். இப்போது தாண்டவர்தோட்டம் தண்டந்தோட்டம் என்றாகிவிட்டது! ஸ்வாமியின் திருநாமம் - திருநடனபுரீஸ்வரர். அம்பாள்- ஸ்ரீசிவகாம சுந்தரி.

  கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது தண்டந்தோட்டம். மிகச் சிறிய கிராமம். மிகச் சிறிய ஆலயம். ஆனால்,  அரசலாற்றங்கரையில் அற்புதமாக அருளாட்சி செய்து கொண்டிருக்கிறார் ஸ்ரீநடனபுரீஸ்வரர்.

சிவபெருமானின் திருநடனத்துக்கும் இந்தத் தலத்துக்கும் தொடர்பு உண்டு. எனவே, தில்லையம்பதி என்று போற்றப்படும் சிதம்பரம் திருதலத்துக்கு இணையானது என்கிறார்கள். ஈசனின்   காலில் இருந்த சலங்கை மணிகள் தெறித்து விழுந்ததைக் கண்டு பதறிய விநாயகர், ஓடோடிச் சென்று, மணியை எடுத்து வந்து,  தந்தையின் சலங்கையில் கோத்துக் கட்டி இணைத்தாராம்! எனவே இதே ஊரில், விநாயகப்பெருமானுக்கு தனிக்கோயிலே உள்ளது. அங்கே உள்ள விநாயகரின் திருநாமம் & ஸ்ரீமணிக்கட்டி விநாயகர்!

  இந்தத் தலத்துக்கு இன்னொரு பெருமையும் உண்டு. சிவ-பார்வதியின் திருமணக் கோலத்தைத் தரிசிக்க வேண்டும் என அகத்தியர் விருப்பம் கொண்டு கேட்டார் அல்லவா! அப்படி திருமண தரிசனத்தைக் காண வேண்டும் என்பதற்காக, இந்த தாண்டவர்தோட்டத்துக்கு வந்து சிவலிங்கப் பிரதிஷ்டைசெய்து, பூஜித்து தவமிருந்தார். அவர் வழிபட்ட சிவலிங்கத் திருமேனி, ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறது. நடனபுரீஸ்வரர் கோயிலுக்கு அருகிலேயே ஸ்ரீஅகஸ்தீஸ்வரரின் லிங்கத் திருமேனியை இன்றைக்கும் தரிசிக்கலாம்! ஆகவே, அகத்தியர்பெருமானுக்கு சிவபார்வதியின் திருமணக் கோல தரிசனம் கிடைத்ததால், இது திருமணஞ்சேரியைப் போலவே ஸ்ரீநடனபுரீஸ்வரர் ஆலயமும் திருமணம் முதலான சகல தடைகளையும் நீக்கி அருளும் தலம் என்று போற்றுகின்றார்கள் பக்தர்கள்!

  கோயிலின் உத்ஸவர், ஸ்ரீகார்த்தியாயினி சமேத திருக்கல்யாண சுந்தரமூர்த்தியாக, மாப்பிள்ளை ஸ்வாமியாக திருமணக் கோலத்தில் இருந்தபடி வரங்கள் அனைத்தும் தந்தருள்கிறார்.

  இன்னொரு சிறப்பும் உண்டு. அகத்தியருக்கு சிவனார் காட்சி தந்த போது, ‘இந்தத் தலத்துக்கு வரும் அன்பர்களுக்கு திருமணத் தடை முதலான சகல தடைகளும் நீங்கப் பெற்று, சுபிட்சமாக வாழவேண்டும். அதேபோல், இங்கு வந்து வழிபட்டால், திருக்கயிலாயத்துக்கு வந்து தங்களைத் தரிசித்த புண்ணியம் கிடைக்க வேண்டும்’ என வரம் கேட்க... ‘அப்படியே ஆகட்டும்’ என அருளினார் சிவனார். ஆக, சிதம்பரம், திருமணஞ்சேரி மற்றும் திருக்கயிலாயத்துக்கு இணையான திருத்தலமாகத் திகழ்கிறது தண்டந்தோட்டம் ஸ்ரீநடனபுரீஸ்வரர் ஆலயம்.

  திருநடனபுரீஸ்வரர் கோயிலின் அருமை பெருமைகளை, கும்பகோணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர் மக்கள் இன்னும் சரிவர அறியவில்லை. அவ்வளவு ஏன், அந்தக் கோயில் அமைந்துள்ள தண்டந்தோட்டத்து மக்களுக்கே தெரியவில்லை. ஆனால், கேரளாவின் பாலக்காடு மற்றும் சுற்றியுள்ள ஊர்களில் இருந்து, பக்தர்கள் பலர் இங்கு வந்து திருநடனபுரீஸ்வரரையும் ஸ்ரீசிவகாமி அம்பாளையும் தரிசித்துச் செல்கின்றனர். இதற்கு ஒரு காரணமும் உண்டு.

  சோழ தேசத்தின் ஒரு பகுதியில் வாழ்ந்த அந்தணர்கள் மூவாயிரம் பேர், ஒரு காலகட்டத்தில், கேரளாவின் பாலக்காடு பகுதிக்குச் சென்று குடியேறினர். அப்போது, ஸ்வாமி மற்றும் அம்பாளை சாளக்கிராமத் திருமேனியாகச் செய்து, இந்தத் தலத்தில் இருந்து பிடிமண்ணையும் எடுத்துக்கொண்டு, பாலக்காடு அருகில் உள்ள தங்கைக்காடு  எனும் சிறிய கிராமத்தில் பிரதிஷ்டை செய்து, ஆலயம் எழுப்பினார்கள். அனுதினமும் வழிபட்டார்கள். அதையடுத்து வந்த தலைமுறையினரும் அப்படியே வழிபடத் துவங்கினார்கள்!

  ஆனால் தங்களின் குலதெய்வம் எது என்பதே தெரியாமல் போனார்கள். இதனால், அவர்கள் குடும்பங்களில் சுமங்கலிப் பெண்களுக்கு திடீர்திடீரென நோய்கள் தாக்கி அவதிப்பட்டார்கள். இன்னும் சிலருக்கு துர்மரணம் நிகழ்ந்தது.  இதையடுத்து ஒரு கூட்டம், பிரஸ்னம் பார்க்கும் தீவிரத்தில் இறங்க... இன்னொரு கூட்டம் காஞ்சிக்கு வந்தது. அங்கே மகாபெரியவாளைத் தரிசித்து, தங்களின் வேதனையைத் தெரிவித்தனர்.

  அனைத்தையும் கேட்ட மகாபெரியவா, அடையாளம் காட்டி அருளிய திருவிடம்... தண்டந்தோட்டம். ‘‘கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது. கிழக்கு, தெற்கு என இரண்டு வாசல் கொண்ட ஆலயம். அதில் தெற்குப் பார்த்த வாசலே அதிகம் புழக்கத்தில் இருக்கும். அம்பாளும் தெற்குப் பார்த்தபடியே  காட்சி தருவாள். நுழைந்ததும் வில்வமரமும் தீர்த்தக் கிணறும் இருக்கும்’’ என கோயிலை அப்படியே விவரித்து, பாலக்காடு அந்தணர்களின் குலதெய்வத்தைக் காட்டி அருளினார் காஞ்சி மகாபெரியவா.

  அதேநேரம், கேரளாவில் பிரஸ்னம் பார்த்ததில், தண்டந்தோட்டம் தலம் பற்றிய தகவல்கள் தெரியவரவே, சிலிர்த்துப் போனார்கள் அந்த மக்கள்!

  இப்படித்தான் இந்தக் கோயிலின் தொன்மையையும் பெருமையையும் தொடர்பையும் அறிந்த மக்கள், மெள்ள மெள்ள வரத்துவங்கினார்கள். வழிபட ஆரம்பித்தார்கள். உத்ஸவருக்கு திருக்கல்யாணம் செய்து வைத்தனர். வைகாசி விசாகத்தில்,  திருக்கல்யாண வைபவம் சீரும் சிறப்புமாக இன்றைக்கும் கொண்டாடப்படுகிறது. எந்தவொரு காரியத்தைத் துவக்குவதாக இருந்தாலும், தண்டந்தோட்டம் வந்து, ஸ்வாமியிடம் அனுமதி பெற்ற பிறகே, காரியத்தில் இறங்குகின்றனர்.

  மகாபெரியவா அடையாளம் காட்டிய இந்தத் தலத்துக்கு மற்றொரு பெருமையும் உண்டு. 1965-&ம் வருடத்தில், தண்டந் தோட்டத்துக்கு வந்த மகாபெரியவா, அங்கே தங்கி, சாதுர்யமாஸ்ய விரதம் மேற்கொண்டு பூஜித்ததாக ஊர்ப்பெரியவர்கள் சொல்கிறார்கள்.

அத்துடன், இங்கே பிரமாண்டமான ஸ்ரீநடராஜர் விக்கிரகம் இருந்ததாம். ஒருமுறை பத்தூர், சிவபுரம் மற்றும் தண்டந்தோட்டம் ஆகிய தலங்களில் உள்ள நடராஜ மூர்த்தங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாம்!  பிறகு, பல வருடங்கள் கழித்து, பத்தூர் மற்றும் சிவபுரத்தின் நடராஜர் விக்கிரகங்கள் மட்டுமே கிடைத்தன. இங்கே சிறிய, அழகிய நடராஜரின் விக்கிரகத் திருமேனியை, காஞ்சி மகா பெரியவாளே வழங்கி அருளினாராம்!

   சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் வழிபட்ட ஆலயம் இது. குறிப்பாக, பல்லவர் காலத்து 11 செப்பேடுகள் இங்கு கண்டெடுக்கப் பட்டுள்ளன. இந்தக் கோயிலுக்காக, 300 அந்தணர்களை இந்தக் கிராமத்துக்கு வரச் செய்து, ஆட்சி சிறக்கவும் மக்கள் செழிக்கவும் வேத கோஷங்கள் முழங்க, ஹோமம் வளர்த்து பூஜைகள் செய்வதற்காக, இன்ன பெயர் கொண்டவர்கள், இன்ன கோத்திரக்காரர்கள் எனப் பட்டியலிட்டு, சுமார் 72 வேலி நிலத்தை அவர்களுக்குத் தானமாகக் கொடுத்ததாகச் செப்பேடுகள் தெரிவிக்கின்றன.

  இங்கே ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீதுர்கை ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன. இங்கு, 12 ராசி மண்டலங்களுக்கு மேலே பீடமிட்டு அமர்ந்திருக்கிறார் ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி. எனவே, இவரை ராசி மண்டல குரு எனப் போற்றுகின்றனர் பக்தர்கள். மிகவும் சக்தியும் சாந்நித்தியமும் கொண்ட தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் சார்த்தி, கொண்டைக்கடலை மாலை அணிவித்து வணங்கினால், சகல தோஷங்களும் விலகும். குருவருள் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்!

அதேபோல், 11 வாரங்கள் இங்கு வந்து, தங்களின் வயதுக்குத் தக்கபடி (25 வயது என்றால் 25 விளக்குகள்) விளக்கேற்றி தரிசித்தால், ஸ்ரீசிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீநடனபுரீஸ்வரரும் ஸ்ரீநடராஜரும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியும் சகல ஐஸ்வரியங்களும் பெறலாம் என்பது ஐதீகம்!

  திருநாகேஸ்வரம், ஒப்பிலியப்பன் கோயில், அய்யாவாடி ஸ்ரீபிரத்தியங்கிரா கோயில், அம்மன்குடி ஸ்ரீஅஷ்டபுஜ துர்கை கோயில் ஆகிய தலங்களுக்கு அருகில் உள்ள தண்டந்தோட்டம் தலத்துக்கும் வாருங்கள். நடனபுரீஸ்வரரின் பேரருளைப் பெறுங்கள்!

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close