[X] Close

ஆடல்வல்லானுக்கு நாளை ஆருத்ரா அபிஷேகம்! சிதம்பரத்தில் மட்டும் 23ம் தேதி அபிஷேகம்


natarajar-thirvathirai

  • kamadenu
  • Posted: 21 Dec, 2018 09:46 am
  • அ+ அ-

வி.ராம்ஜி

தில்லையம்பலத்தான், தில்லை நாயகன், ஆடல்வல்லான், நடன நாயகன் என்றெல்லாம் கொண்டாடி போற்றப்படுகிற நடராஜரின் பஞ்ச சபைகளில், சிதம்பரம் க்ஷேத்திரம் கனகசபை என்று போற்றப்படுகிறது. இத்தனை பெருமைமிகு சிதம்பரத்தில், தில்லை மூவாயிரம் பேர் என்று சொல்லப்படுகிற தீட்சிதர்களைக் கொண்டு பூஜைகள் நடைபெறுவது இன்னொரு தனிச்சிறப்பு.

அதேபோல், சிதம்பரம் திருத்தலத்தில் நடராஜருக்கு வருடத்துக்கு ஆறு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.

சித்திரை மாதத்தில் திருவோண நட்சத்திரத்தில் அபிஷேகம் நடைபெறும். அடுத்து ஆனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தின் போது அபிஷேகம் நடைபெறும்.

அதன் பிறகு ஆவணி மாதத்தில் வளர்பிறை சதுர்த்தசியில் நடராஜருக்கு அபிஷேகம் நடைபெறும். புரட்டாசியிலும் வளர்பிறை சதுர்த்தசி வேளையில் அபிஷேகமும் மார்கழியில் திருவாதிரையிலும் அபிஷேகம் நடைபெறும். ஆறாவதாக, மாசி வளர்பிறை சதுர்த்தசியில் அபிஷேகம் நடைபெறும். அதாவது மாசியில் நடைபெறும் அபிஷேகம்... அந்த வருடத்தின் நிறைவு அபிஷேகம்!

அந்த வகையில், மார்கழி திருவாதிரையையொட்டி நாளை 22ம் தேதி சனிக்கிழமை அன்று ஆடல்வல்லானுக்கு தமிழகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் சிறப்பு தரிசனம், அபிஷேகம் ஆகியவை நடைபெறும். காரணம், பெளர்ணமியும் திருவாதிரையும் வருவதே கணக்கு.

ஆனால் அதேசமயம், சிதம்பரம் திருத்தலத்தில் மட்டும் திருவாதிரை நட்சத்திரத்தையே எடுத்துக் கொண்டு, அன்றைய தினம் அபிஷேகம் செய்வது வழக்கம் என்கிறார் சிதம்பரம் கோயிலின் வெங்கடேச தீட்சிதர். எனவே நாளை மறுதினம் 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணி முதல் 6 மணிக்குள் நடராஜருக்கு அபிஷேகம் நடைபெறும். அதாவது அன்றைய தினம் அதிகாலையில் ஆருத்ரா அபிஷேகம். மாலையில் ஆருத்ரா தரிசனம்.

எனவே திருவாதிரை விரதம் இருப்பவர்கள், நாளை சனிக்கிழமை விரதம் இருக்கவேண்டும். பிறகு ஞாயிற்றுக்கிழமை அபிஷேகம் முடிந்து, களியமுது படைத்து, விரதத்தைப் பூர்த்தி செய்யவேண்டும் என்கிறார் வெங்கடேச தீட்சிதர். 

இந்த அபிஷேக தரிசனத்தையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தெல்லாம் கூட சிதம்பரத்துக்கு வருவார்கள்.

பால், தயிர், தேன், பழங்கள், இளநீர், எலுமிச்சை, பன்னீர், சந்தனம் முதலான 16 வகையான பொருட்களால் பிரமாண்டமாக அபிஷேகம் நடைபெறும்.

நடராஜர் அபிஷேகத்தைக் காணுங்கள். இந்த தமிழ் வருடத்தின் ஐந்தாவது அபிஷேகம் இது. கண்ணாரத் தரிசியுங்கள். கலையிலும் ஞானத்திலும் சிறந்துவிளங்குவீர்கள். ஞானத்தையும் யோகத்தையும் தந்தருள்வார் ஆடல்வல்லான்.

சிதம்பரம் தவிர மற்ற அனைத்து சிவாலயங்களிலும் நாளை சனிக்கிழமை காலையில் இருந்து மதியத்திற்குள், நடராஜர் பெருமானுக்கு விசேஷ அபிஷேகம் நடைபெறும்.

ஆதிரை நாயகனே உன் திருவடி சரணம்!  

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close