[X] Close

பகவான் யோகி ராம்சுரத்குமார்


yogi-ramsuratkumar1

  • kamadenu
  • Posted: 27 Nov, 2018 10:03 am
  • அ+ அ-

வி.ராம்ஜி

- டிசம்பர் 1 - 100வது ஜயந்தி விழா

ர்ப்பு, எப்போதும் எதன் மீதேனும் எவர் மீதேனும் இருந்து கொண்டே இருக்கும். மனித வாழ்க்கை இப்படித்தான். பிடித்த ஊர், பிடித்த கோயில், பிடித்த நிறம் என்று பிடித்தமான, ஈர்ப்பான விஷயங்கள் நிறையவே உண்டு.

‘இந்த ஊருக்குப் போனா மனசு நிம்மதியாயிருதுப்பா’ என்பார்கள் சிலர். ‘அந்தக் கோயிலுக்கு ஒருதடவையாவது போய்ப் பாருங்க. என்னவோ செய்யும். ஒண்ணுமே இல்ல. கலங்காதேன்னு சொல்றது மாதிரி இருக்கும்’ என்று நெகிழ்வார்கள் பலர். ‘என்னவோ தெரியல. இந்தக் கலர்ல டிரஸ் போடும்போதெல்லாம், நல்லதே நடக்குதுப்பா. பிடிச்ச டிபனை மனைவி செஞ்சு கொடுக்கறா. டிராஃபிக் பெருசா இல்ல. சிக்னல்ல சிக்கவே இல்ல. மேனேஜர் சிடுசிடுன்னு விழலை. சிஸ்டத்தை ஓபன் பண்ணினதும் தெரியலை. சாயந்திரமானதும் தெரியலை. இன்னிய பொழுது சள்ளுன்னு போயிருதுப்பா. இதே கலர்ல ரெண்டு மூணு சட்டை எடுக்கணும். முதல்ல நாலஞ்சு கர்ச்சீப்பாவது எடுத்து வைச்சுக்கணும்’ என்று பெருமிதப்பட்டுக் கொள்கிறவர்கள் நிறையவே இருக்கிறார்கள்.

இப்படி இரும்பென இருக்கும் நம்மை காந்தமென ஈர்க்கிற விஷயங்கள், ஏராளமாய் இருக்கின்றன. சினிமாக்காரர், அரசியல் தலைவர், புத்தகம், எழுத்தாளர், டிவி ஷோ, உணவு, ஹோட்டல், நண்பர்கள், உறவுக்காரர்கள் என ஈர்ப்பின் பட்டியல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதம்.

என் இளம் வயதில், திருவண்ணாமலை மீது அப்படியொரு பிடித்தம் எனக்கு. இத்தனைக்கும் திருவண்ணாமலைக்குப் போனதே இல்லை. ஆனாலும் திருவண்ணாமலை என்று சொல்லும் போதே, உற்சாகம் தொற்றிக் கொள்ளும்.

சாலையில் பயணிக்கும் போது, திருவண்ணாமலை என்று பெயர்ப்பலகை தாங்கிய பேருந்துகளைப் பார்த்தால், சட்டென்று குதூகலமாகிவிடுவேன். ஏதோ... அந்தப் பேருந்தில் நானே பயணிப்பது போல் ஓர் எண்ணம் வந்துவிடும். ‘இன்னிக்கி இல்லேன்னாலும் ஒருநாள், திருவண்ணாமலை போயிடணும் எப்படியாவது’ என்று உறுதி எடுத்துக் கொள்ளும் மனசு.

‘பார்க்காமலேயே காதல்’ என்பது போல், இது பார்க்காமலேயே வந்த ஈர்ப்பு. நண்பர்களிடம் இதுகுறித்துப் பேசும் போது, ‘ஆமாம்டா... நானும் போகணும்னுதான் நினைச்சிக்கிட்டே இருக்கேன்’ என்று சொல்லுவார்கள். ‘நான் போயிருக்கேம்பா. நாலு தடவை போயிருக்கேன்’ என்பார்கள்.

இப்படி திருவண்ணாமலையை நினைத்துக் கொண்டிருப்பதே மிகப்பெரிய சுகமாக, சுகானுபவமாக இருந்தது. ‘நினைத்தாலே முக்தி தரும் புண்ணிய ஸ்தலம்’ என திருவண்ணாமலையைப் பற்றி பின்னாளில் படிக்கும் போது, இன்னும் வியப்பும் ஈர்ப்பும் லயிப்பும் கூடியது.

இந்த அளவுக்கு திருவண்ணாமலை என்னை இழுத்ததற்கு, பகவான் யோகி ராம்சுரத்குமார் காரணம். அவரைத் தரிசிக்க வேண்டும் என்கிற ஆவலுக்கு எழுத்துச்சித்தர் பாலகுமாரன் சார் காரணம்.

பின்னாளில், திருவண்ணாமலை சென்ற போது, விசிறி சாமியார் என்று எல்லோராலும் சொல்லப்பட்ட பகவானைத் தரிசிக்கக் காத்திருக்கும் போது, பஸ் ஸ்டாண்டில் பேருந்துக்குக் காத்திருக்கும் வேளையில், டீக்கடையில், கிரிவலப் பாதையில் என திருவண்ணாமலையின் பல இடங்களில், பல முறை வந்திருந்த போதெல்லாம்... பாலகுமாரன் சாரின் எழுத்துக்களைப் படித்துவிட்டு, யோகியைப் பற்றி அவர் எழுதியதைப் படித்துவிட்டு வந்தவர்களாகவே இருந்தார்கள்.

இளமையில் அவரின் எழுத்துக்களைப் படித்ததால் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. நல்ல நல்ல குணங்கள் எவை என்று பட்டியலிடுகிறோமோ... அப்படியான நற்குணங்களுடன் இருக்க ஆசைப்பட்டேன். ‘இவரே என் குருநாதர்’ என்று நமஸ்கரித்தேன். குருவின் குரு பகவான் யோகி ராம்சுரத்குமாரையும் தரிசிக்க விரும்பினேன். தரிசித்தேன்.

ஐப்பசியை புண்ணிய மாதம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். இந்த சமயத்தில், புண்ணிய நதியான கங்கை, புண்ணிய நதியான காவிரியில் கலக்கிறது என்பதாக ஐதீகம். துலா ஸ்தானக் கட்டம் என்றே மயிலாடுதுறையில், காவிரியில் உண்டு. இந்தக் காலகட்டத்தில், துலா ஸ்தானக் கட்டத்தில் நீராடுவதற்காக, எங்கிருந்தெல்லாமோ வருவார்கள் மக்கள். வந்து நீராடிச் செல்வார்கள்.

கங்கையில் குளித்தாலே புண்ணியம். பாவமெல்லாம் போய்விடும். பொன்னி எனப்படும் காவிரியும் அப்படிப்பட்ட தங்கமனசுக்காரிதான். தாயுள்ளம் கொண்டவள்தான். அன்னைதான். காவிரியில் நீராடுவதும் நம் பாவங்களை அகற்றும் பேறு கொண்டதுதான். அப்படியிருக்க... ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல், ஐப்பசியில் காவிரியில் நீராடினால், கங்கையிலும் நீராடிய புண்ணியமும் வந்துசேரும் என்கிறது புராணம்.

நாமெல்லாம் கார்ப்பரேஷன் தண்ணீரில் குளிப்பவர்கள். ஒவ்வொரு தீபாவளிக்கும் அந்தத் தண்ணீரில் குளித்துவிட்டு, ‘கங்கா ஸ்நானம் ஆச்சா...’ என்று கேட்டு, ‘கங்கா ஸ்நானம் ஆச்சு’ என்று பெருமையுடன் சொல்லி, வாழ்த்து பரிமாறிக் கொள்கிறோம்.

எனக்குத் தெரிந்து பத்து இருபது வருடங்களுக்கு முன்பு, எல்லார் வீடுகளிலும் எல்லார் வீட்டு பூஜையறை மேடைகளிலும் சின்னதான ஒரு சொம்பு இருக்கும். அது காசிச் சொம்பு. சிறிதாக, அழகாக வடிவமைக்கப்பட்ட அந்தச் சொம்பு, முழுக்கவே மூடப்பட்டு, சீல் வைக்கப்பட்டது போல் இருக்கும். அதுதான் காசிச் சொம்பு. சொல்லப்போனால், அது கங்காச் சொம்பு.

‘யாரோ காசிக்குப் போயிருந்தாங்க. அவங்க, காசிச் சொம்பையும் கயிறையும் கொடுத்தாங்க’ என்பார்கள். கொடுத்தவர் பெயர் கூட மறந்திருக்கும். கொடுத்தவரையே மறந்திருப்போம். ஆனால், மறக்காமல், தீபாவளி நன்னாளில், கொதிக்கக் கொதிக்க சூடு பறக்க இருக்கும் வெந்நீரில், இந்த கங்கா ஜலத்தையும் துளியூண்டு சேர்த்து, குளிக்கச் சொல்வார் அப்பா. கங்கா ஜலத்தை பக்கெட் நீரில் கலப்பாள் அம்மா. ‘கங்கா ஸ்நானம் ஆச்சா...’ என்று கேட்பார்கள் வெளியே போனதும். ‘ஆச்சு’ என்று சொல்லியிருக்கிறேன் சந்தோஷத்துடன்.

கும்பகோணம் அருகே திருவிசநல்லூர் என்றொரு கிராமம். இங்கே வாழ்ந்த மகான் ஸ்ரீதர ஐயாவாள். யாரோ வேற்று ஜாதி மனிதர், பசிக்கிறது என்று ஸ்ரீதர ஐயாவாளிடம் கேட்க, அவரை வீட்டுக்கு அழைத்து வந்து, சாப்பாடு பரிமாறினார். அன்றைய தினம், ஸ்ரீதர ஐயாவாள் வீட்டில், திவசம். பித்ரு காரியம்.

விஷயம் அறிந்த அந்தணர்கள், ‘இப்படிப் பண்ணிட்டியே. நாங்க வரமாட்டோம்’னு சொல்லிவிட்டார்கள். அவரையும் கேலி செய்தார்கள். ‘நாங்கள்லாம் வரணும்னா, வந்து பித்ரு காரியத்தை பண்ணிக் கொடுக்கணும்னா, போய் கங்கைல குளிச்சிட்டு வா. அப்பதான் நீ பண்ணின பாவம் போகும். சுத்தமாவே’ என்று கைகொட்டிச் சிரிக்காத குறையாக ஏளனப்படுத்தினார்கள். அவமானப்படுத்தினார்கள்.

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு, வீட்டுக்குள் நுழைந்த ஸ்ரீதர ஐயாவாள், கடவுளை நினைத்து, கங்காதேவியை மனதில் வரித்து, கங்காஷ்டகத்தை ஜபித்தார். அவர் வீட்டின் கிணற்றுக்கே வந்தாள் கங்காதேவி. கிணற்றின் கழுத்தையும் தாண்டி வழிந்தது கங்கை. வீடு முழுக்க, தெரு முழுக்க கங்கை.

இப்படியாக, கங்கைக்கும் தென்னகத்துக்குமான தொடர்பும் பந்தமும் ஏராளம். கங்கை தெற்குப் பகுதிக்குக் காட்டுகிற கரிசனம் இது. ஒவ்வொரு முறையும் கங்கையானவள், இப்படி ஏதேனும் செய்து, தமிழகத்தை, தமிழ்நாட்டு பூமியை, தமிழகத்தை மையமாகக் கொண்டு அகிலத்தையே சுத்தப்படுத்துகிற காரியத்தைச் செய்து கொண்டுதான் இருக்கிறாள்.

அப்படியான நற்செயல்தான் பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அவதாரம். மலையே சிவமெனத் திகழும் திருவண்ணாமலைக்கு அந்த மகான் வந்ததும் வாழ்ந்ததும் வாழ வைத்ததும் இன்னும் இன்னுமாக நம்மை வாழவைத்துக் கொண்டிருப்பதும் நமக்குக் கிடைத்த மிகப்பெரிய கொடை. இறையருள். குருவின் கருணை!

நர்த்ரா எனும் சின்னஞ்சிறிய கிராமத்தில் இருந்து, கங்கைக் கரைக்கு மிக மிக அருகில் உள்ள ஊரில் இருந்து, கங்கையாகவே வந்த அற்புத மகான் யோகி ராம்சுரத்குமார்.

டிசம்பர் 1ம் தேதி பகவானின் ஜயந்தித் திருநாள். 99 வது ஜயந்தி. மறுநாளில் இருந்து தொடங்குகிறது நூற்றாண்டு. அதைக் கொண்டாடும் வகையிலும் அவரைக் கொண்டாடிப் போற்றுகிற விதத்திலும் போற்றி வணங்குகிற விதமாகவும் ‘குருவே... யோகி ராமா..!’ எனும் தினசரித் தொடரை எழுதுகிறேன்.

குரு வழிநடத்த வேண்டும் என்கிற பிரார்த்தனையுடன்... வழிநடத்துவார் எனும் நம்பிக்கையுடன்!

‘ ‘என் தகப்பன் உங்களை ஆசீர்வதிக்கிறார்’ என்பார் பகவான் யோகி ராம்சுரத்குமார். நமக்கெல்லாம் தகப்பனாக, ஞானத்தந்தையாக இருந்து அவர் ஆசீர்வதிப்பார். அந்த ஆசியுடன் தொடர்வோம்.

- ராம் ராம் ஜெய்ராம்

தொடர்புக்கு: ramji.v@thehindutamil.co.in

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close