[X] Close

இது ஆதரவற்றோர் இல்லம் அல்ல... அன்னதான ஆதீனம்!- சிலிர்க்கவைக்கும் சிவப்பிரகாசம் சுவாமிகள்!

annadhana-adheenam

  • kamadenu
  • Posted: 11 Oct, 2018 16:10 pm
  • அ+ அ-

75 வயதாகி முதுமையைத் தழுவி, இடுப்புக்குக் கீழே செயலிழந்துவிட்டபோதும்கூட  எதற்காகவும் கவலைப்படாமல் படுத்துக்கொண்டே பலரது பசிப்பிணி போக்கிக்கொண்டிருக்கிறார் கோவை சிவப்பிரகாச சுவாமிகள். 

கடலூருக்கு சுமார் ஐந்து கிலோமீட்டரில் இருக்கிறது மேட்டுக்குப்பம். இது அருட்பிரகாச வள்ளலார் சித்தியடைந்த இடம். வடலூர் வரும் வள்ளலாரின் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அவர் சித்தியடைந்த சித்திவளாகத்துக்கும் தவறாமல் செல்வார்கள். சித்தி வளாகத்தைத் தரிசித்த பின்னர் அருகிலிருக்கும் கோவை சிவப்பிரகாச சாமிகளின் அன்னதான ஆதீனத்தை அடைகிறார்கள். அங்கே அவர்களை அன்போடு வரவேற்கும் தன்னார்வலர்கள் அவர்களுக்கு வடை பாயசத்துடன் சுடச்சுட மதிய உணவு படைத்து மகிழ்வித்து மகிழ்கிறார்கள்.

சாப்பிட்டு முடித்து சிவப்பிரகாச சுவாமிகளின் அருகில் போடப்பட்டிருக்கும் நாற்காலிகளில் அமர்ந்து தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறது பக்தர்கள் கூட்டம். இத்தனைக்கும் எழுந்திருக்காமல் மெத்தையில் படுத்த நிலையிலேயே இருக்கிறார் சிவப்பிரகாசம் சுவாமிகள். அகலமான அந்த வெள்ளை நிற மெத்தையில் குப்புறப் படுத்தவாறே முழங்கைகளை முன்னால் ஊன்றி முகத்தை நிமிர்த்தி, பக்தர்களோடு பேசுகிறார். 18 வருடங்களுக்கு முன் விபத்து ஒன்றில் சிக்கினார் சிவப்பிரகாசம். அதில் கடும் பாதிப்புக்குள்ளாகி மூன்று மாதம் சிகிச்சை பெற்றார். ஆனாலும் அவரது இடுப்புக்குக் கீழே முற்றிலுமாகச் செயல் இழந்து விட்டது. தற்போது சிறுநீர்கூட தானாகக் கழிக்க முடியாத நிலையில் அவர்!

“எப்படி ஆன்மிக நாட்டமும் சேவையில் விருப்பமும் வந்தது, உங்கள் பூர்வாசிரத்தைக் கொஞ்சம் சொல்லுங்களேன்?’’ என்று சிவப்பிரகாசத்திடம் கேட்டேன். “ பல்லடம் அருகேயுள்ள போகம்பட்டியில் முருகசாமி - கண்ணம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தேன். மிகவும் ஏழ்மையான குடும்பம். எட்டாவது வரைக்கும்தான் தட்டுத்தடுமாறி படிக்க முடிந்தது. அதன்பின்னர் சின்னச்சின்ன வேலைகளைப் பார்த்தேன். பிறகு ஒருநாள் ஆன்மிக நாட்டம் ஏற்பட்டு நேராக காஞ்சிபுரத்துக்குப் போனேன். அங்குள்ள தொண்டைமண்டல ஆதீனத்தில் அடைக்கலமாகி அங்கு ஏழு ஆண்டுகள் தங்கி சைவசித்தாந்தம், வேதாந்தம், புராணங்கள் உட்பட சமயக்கல்வி, ஆன்மிகக் கல்வியைப் படித்தேன். பிறகு, காவியுடுத்தி ஊர் ஊராக அலைந்தேன். அப்போது பாழடைந்து கிடக்கும் கோயில்களை அந்தந்த ஊர்மக்களை ஒன்றுதிரட்டி கும்பாபிஷேகம் செய்விக்கும் வேலைகளைத் தொடங்கினேன். அப்படிச் சுமார் 30 கோயில்கள் என்னால் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஒருநாள் வடலூர் வந்தபோது ஒரு திருமணத்தில் பேராசிரியர் சீனி.சட்டையப்பனைச் சந்திக்க நேர்ந்தது. அவரது சந்திப்புதான் என்னை சன்மார்க்கத்துக்கு இழுத்துவந்தது. காவியுடையில் இருந்த என்னை வெள்ளாடை உடுக்கச்செய்தது. அப்போதிலிருந்து சன்மார்க்கத்தில் ஈடுபட்டு சேவையாற்றி வருகிறேன்’’ என்றார் சிவப்பிரகாசம்.

எந்த நேரத்தில் யார் வந்தாலும் இங்கு உணவு கிடைக்கும். இங்கு மட்டுமில்லாமல் தமிழகத்தின் பல கோயில் உற்சவங்களின்போதும் அன்னதானம் நடத்தி வருகிறார் சுவாமிகள். சிக்கல் சிங்காரவேலர் கோயிலில் ஐப்பசி வேல் வாங்கும் உற்சவம், திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம், சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சனம், மார்கழி திருவாதிரை, வடலூரில் தைப்பூசம், விருத்தாசலத்தில் மாசிமக தீர்த்தவாரி, கலியபெருமாள் கோயிலில் பங்குனி உற்சவம், ஆவுடையார் கோயிலில் ஐப்பசி உற்சவம் இந்தத் திருவிழாக்களில் எல்லாம் 10 நாட்கள் அன்னதானம் செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் சிவப்பிரகாசம்.

“இதெல்லாம் எப்படிச் சாத்தியம்?’’ என்று ஆச்சரியத்துடன் கேட்டால், “நாங்க பாத்திரங்கள மட்டும்தான் இங்கிருந்து எடுத்துட்டுப் போவோம். எங்களது பக்தர்கள் அவங்கவங்களால என்ன முடியுமோ அதை எடுத்துட்டு வந்துடுவாங்க. 10 நாளும் கொஞ்சமும் குறையில்லாமல் அன்னதானம் ஜாம் ஜாம்னு நடக்கும். அதே போலத்தான் இங்கேயும் ஒரு நாள், ஒரு வேளைகூட தடைபட்டதே கிடையாது. எதுவும் இல்லாமல் இருந்ததில்லை. எப்பவுமே தேவைக்கு மேலே இருந்துகிட்டேதான் இருக்கும். தட்டுப்பாடு வரும்போல இருந்தா, வேன்ல ஏறி ஒரு சுத்து சுத்திவந்தா போதும். தேவையான பொருளைக் கொண்டாந்து மக்கள் குமிச்சுடுவாங்க. நம்மோட நோக்கம் நல்லதா இருந்தா மட்டும் போதும். அதுக்கு எல்லா பக்கமிருந்தும் ஆதரவு தானா கிடைக்கும்’’ என்கிறார் சிவப்பிரகாசம்.

மேட்டுக்குப்பத்தில் தன்னால் நடத்தப்பட்டு வரும் வள்ளலார் ஆதரவற்றோர் இல்லத்தை அன்னதான ஆதீனம் என்றே அழைக்கிறார் சிவப்பிரகாசம். சைவத்தை வளர்க்க ஆதீனங்கள் உருவானதைப் போல பசிப்பிணி போக்க தானும் இந்த அன்னதான ஆதீனத்தை உருவாக்கி இருப்பதாகச் சொல்கிறார் இவர். இந்த இல்லத்தில் தற்போது 45 ஆதரவற்ற முதியவர்களும், 41 சிறுவர்களும் இருக்கிறார்கள். சிறுவர்கள் அனைவரும் அருகிலுள்ள பள்ளிகளில் கல்வி பயில்கிறார்கள். அன்னதானம், ஆதரவற்றோர் இல்லம் என்பதோடு மட்டும் இவரது பணி முடிந்துவிடவில்லை. பக்தி மார்க்கத்திலும் மக்களை நெறிப்படுத்த ஆன்மிகச் சொற்பொழிவாற்றி வருகிறார். படுத்த படுக்கையாக இருக்கும் இந்த நிலையிலும் இவரது ஆன்மிகச் சொற்பொழிவுகள் பல ஊர்களிலும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. சிறிய இரும்புக்கட்டிலில் சக்கரம் பொருத்தி அதில் படுத்துக்கொண்டே வேனில் பயணித்து பல ஊர்களுக்கும் சென்று மேடையேறி படுத்த நிலையிலேயே பிரசங்கம் செய்கிறார் சிவப்பிரகாசம். 

பசிப்பிணி போக்க வடலூரில் தருமச்சாலை துவக்கிய வள்ளலார் அங்கு வரும் அனைவருக்கும் பசி போக்க அடுப்பை பற்றவைத்தார். அவர் பற்ற வைத்த அடுப்பு அணையாமல் இன்னும் தொடர்ந்து எரிந்து வறியவர்களின் பசிப்பிணி போக்கி வருகிறது. அப்படித்தான் கோவை சிவப்பிரகாச சுவாமிகளும் பசிப்பிணி போக்கும் பணியைக் கடந்த 29 ஆண்டுகளாகத் தொடர்ந்து செய்துவருகிறார். நான் அங்கிருந்து புறப்படுகையில், “சாமி பரீட்சை எழுதப்போறேன், துன்னூறு பூசிவிடுங்க’’ என்று கேட்டு அவருக்கு முன்னால் தலை குனிந்தான் இல்லத்துச் சிறுவன் ஒருவன். அருகிலிருந்த விபூதிப்பையில் இருந்து விபூதி எடுத்து பூசிவிட்டார். சிறுவன் ஆசிர்வதிக்கப்பட்டான். அவன்மட்டுமல்ல... சிவப்பிரகாசத்தால் பசித்த பல நூறு நல்வயிறுகளும் தொடர்ந்து ஆசிர்வதிக்கப்படட்டும்!

-கரு.முத்து

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition

[X] Close