[X] Close

வடிவேலுண்ணே... நீ நல்லா இருக்கணும்ணே! - வைகைப்புயலுக்கு பிறந்தநாள்


vadivelu-birthday

வைகைப்புயல் வடிவேலு

  • வி.ராம்ஜி
  • Posted: 10 Oct, 2018 10:06 am
  • அ+ அ-

வி.ராம்ஜி

வாய்விட்டுச் சிரிக்க வைக்கறது ரொம்பக் கஷ்டம்ணே. ஆனா பொசுக்குன்னு அழவைச்சிடமுடியும். நம்ம பயபுள்ளைகளைக்கு அம்புட்டு டென்ஷனு. ஏகத்துக்கும் ரோதனை. எப்பப்பாரு அங்கிட்டும் இங்கிட்டுமா ஓடிக்கிட்டே இருக்கானுவ. ஆனா அத்தனை பேரையும், ஆம்பளபொம்பள பாகுபாடு இல்லாம, இப்பிடிச் சிரிக்கவைச்ச ஆளு, நீதாண்ணே!

அண்ணே... உங்கிட்ட எல்லாரும் சொக்கிப் போனதே உடம்புல இருக்கிற நாடிநரம்பு கூட நடிக்கறதுதாண்ணே. நம்ம ஊரு பாஷை, அதான் ஸ்லாங் உனக்கு ப்ளஸ் பாயிண்ட்டுன்னா, அடுத்தாப்ல உன் உடம்பு நடிக்கும் பாரு... அய்ய்ய்ய்ய்ய்ய்ய்யய்ய்யோ... அதாண்ணே, பாடிலாங்வேஜ். நாகேஷ் ஐயாவுக்கு அப்புறம் இம்புட்டு சூப்பரா, பாடில லாங்வேஜ் காட்டி, பிரிச்சு மேஞ்ச ஒரே ஆளு நீதான்.

இங்கிட்டு நாகேஷைச் சொல்றோமா. அங்கிட்டுப் பாத்தா, சந்திரபாபு ஐயாவையும் உன்னையும் சொல்லணும்னே.  காமெடில பின்ற சந்திரபாபு, பாட்டும் செமயாப் பாடுவாரு. நீயும் அப்படித்தாம்ணே. நீ படிக்கல. ஸ்கூலுக்குக் கூட சரியாப் போகல. பாடமும் படிக்கல. பாட்டும் கத்துக்கல. ஆனால், எம்புட்டு நல்லா பாடுற ராசா.

என் ராசாவின் மனசிலேன்னு ராஜ்கிரண் படமெடுத்தாரு. உன்னையும் அதுல சேத்துக்கிட்டு எங்களுக்குக் குடுத்தாரு. அப்புறம் பாத்தா, எங்க மனசுல வந்து உக்கார்ந்துக்கிட்டியே ராசா.

‘எட்டணா இருந்தா எட்டூருக்கெம்பாட்டு கேக்கும்’னு பாடி, பட்டையக் கிளப்பிட்டியேப்பு. இன்னிக்கும், உம்புட்டு காமெடியத்தானேப்பு கேட்டு, மனசாரச் சிரிச்சிக்கிட்டிருக்கோம். நடிச்சு சிரிக்கவைக்கிறே. பாடி சிரிக்கவைக்கிறே. நீ பெரியாளுண்ணே. 

அங்கே ஆரம்பிச்சு, மொள்ளமொள்ள, படிப்படியா, வளர்ந்தே. அதுலயும் உன்னையும் உங்கிட்ட இருக்கிற தெறமையையும் கரீக்ட்டா புரிஞ்சுக்கிட்டு, ஒவ்வொரு டைரக்டரா, ஒவ்வொரு நடிகரா உன்னைக் கூப்பிட்டுக் கூப்பிட்டு சான்ஸ் கொடுத்தாய்ங்களேண்ணே. அப்பதான் ஒலகநாயகனோடயும் நம்ம நடிகர்திலகத்தோடயும் உனக்கு ஆக்ட் கொடுக்க தேவர்மகன் வந்துச்சு. அடேங்கப்பா... இசக்கிங்கற படத்துப் பேரு எங்களுக்கெல்லாம் மனசுலை பச்சை குத்திவுட்டுட்டியேண்ணே.

அதுக்கப்புறம்தாண்ணே... உன் வண்டி டாப்கியர்ல போக ஆரம்பிச்சுச்சு. ஆனா, நின்னு நிதானமாத்தான் வெளையாண்டே. ஒவ்வொரு படத்துலயும் எம்புட்டு எம்புட்டு நடிப்பைக் கொடுத்தே. சிரிக்கவும் வைச்சே. அட... அழக்கூட வைச்சிருக்கியேண்ணே. 

நமக்கு அம்புட்டு சினிமா அறிவோ ஒலக அறிவோ கிடையாதுண்ணே. ஆனா, எனக்குத் தெரிஞ்சு, ஒரு சிரிப்பு நடிகரு, பஞ்ச் டயலாக் பேசி, அது ஊரும் ஒலகமும் பேசுச்சுன்னா, அது உன்னோட பஞ்ச் வசனம்தாண்ணே. அடி ஆத்தீ... இன்னொன்னும் சொல்லிக்கிடுறேண்ணே. இப்படி, படத்துல பஞ்ச் வசனம் பேசுனதெல்லாம் போய், நீ பேசினாலே பஞ்ச் டயலாக்தான்னு எங்களை உசுப்பேத்தி விட்ட ஒரே ஆள்ணே நீ.

இன்னொன்னு தெரியுமாண்ணே உனக்கு. உனக்கு எங்கே தெரியப்போவுது? அத்தயும் சொல்லிப்புடுறேன், கேட்டுக்க.

இது ஒரு சவால்ணா சவால்ணே. போட்டின்னா போட்டிண்ணே. ஆமா, சொல்லிப்புட்டேன். ஆம்பள, பொம்பள, பெருசு, இளவட்டம், நண்டுசிண்டு நார்த்தங்கானு தமிழ்நாட்ல இருக்கற அத்தினிபேர்ல நூத்துக்கு தொந்நூறு பேராவது, உன் ஏதோவொரு வசனத்தை, ஏதாவொரு டயத்துல பேசிருப்பாய்ங்கண்ணே. அது, ‘இப்பவே கண்ணக் கட்டுதே’வா இருந்தாலும் சரி, ‘சொல்லவே இல்ல’யா இருந்தாலும் சரி, யாராவது, எங்கியாவது உம்புட்டு வசனத்தை சொல்லிட்டே இருக்காய்ங்கண்ணே இன்னமும்!

ஆனானப்பட்ட ஹீரோக்களே, படத்துல ஒண்ணு ரெண்டு இடத்துலதான் கைத்தட்டல் வாங்குவாய்ங்க. ஆனா, நீ வந்த இடத்துலயெல்லாம் அப்படிச் சிரிப்போம்ணே. சிரிச்சுச் சிரிச்சு கைத்தட்டுவோம்ணே.

இன்னொன்னும் சொல்லிடுறேன். தமிழ் சினிமா ஒலகத்துலயே, ஒரு நடிகரு, அதுவும் சிரிப்பு நடிகரு, வார்த்தைக்கு வார்த்தை பஞ்ச் வசனம் பேசுனாருன்னா, அது நீ ஒருத்தன்தாண்ணே. நீ பேசுனதுதாண்ணே, இன்னமும் பேசிட்டிருக்கோம்.

ராஜ்கிரண் ஒருபக்கம், ஆர்.வி.உதயகுமார் ஒருபக்கம், ஷங்கர் ஒரு சைடு, வி.சேகர் இன்னொரு சைடு, அட சீரியஸா படம் பண்ற நம்ம சேரன், பாரதிகண்ணம்மாலயும் பொற்காலத்துலயும் வெற்றிக்கொடி கட்டுலயும்னு படைப்பாளிங்க எல்லாரும் நம்ம அங்காளிபங்காளி ரேஞ்சுக்கு உன்னை ரசிச்சு ரசிச்சுக் காட்டுனாங்கண்ணே.

மலையாள சித்திக், ப்ரெண்ட்ஸ்ல உன்னை வைச்சுக்கிட்டு ரவுசு பண்ணிருப்பாரு. நம்ம சுந்தர்.சி வின்னர்லயும் தலைநகரத்துலயும் தெறிக்கவுட்டுருப்பாரு. சிராஜ்னு ஒருத்தர் நடுவால வந்து மருதமலை அந்த மலைன்னு பிரிச்சு மேஞ்சாருண்ணே.

படம் எடுக்கறதுன்னு முடிவானதுமே, முதல்ல உன்னைத்தான் புக் பண்ணுவாய்ங்களாம்ல அப்போ. நம்மூர்ல பசங்க பெருமையாப் பேசிக்கிட்டாய்ங்கப்பா. அட... எல்லாத்துக்கும் மேல இம்சை அரசன் புலிகேசி, உன்னை வைச்சே ரூம்போட்டு யோசிச்சு பண்ணினாய்ங்கப்பா.

காசு கொடுக்கற கடவுள், குழந்தை வரம் கொடுக்கற கடவுள், வீடு கொடுக்கறதுக்கு, கடனை அடைக்கறதுக்கும் கல்யாண வரம் கொடுக்கறதுக்கும்னு நெறயக் கடவுளுங்க இருக்கு. ஆனா, சிரிப்பைக் கொடுக்கறதுக்கு அப்படிக் கடவுள் இருக்குற மாதிரி தெரியலைண்ணே. ஆனா, நீதாண்ணே சிரிப்புக் கடவுளு. நீதாண்ணே சிரிப்பு வைத்தியரு. நீதாண்ணே நகைச்சுவை மருந்து.

உன்ன வச்சு படம்படமா எடுத்தாய்ங்க. உன்ன நம்பி சிரிப்புக்குன்னே சேனல் ஆரம்பிச்சாய்ங்க.

நீ சுணங்கிப் போய் கிடக்குறே இப்போ. எந்திரிச்சு வாண்ணே. அந்த ராசாவ மறந்துப்புட்டோம், பீர்பாலை நெனைச்சிக்கிட்டே இருக்கோம். இந்த ராசாவ மறந்தே போயிட்டோம். ஆனா தெனாலிராமனை மறக்கவே இல்ல. நீ ராசாவாத்தான் இருக்கணும்னு அவசியமே இல்லண்ணே. நீ திரைல வந்தாலே போதும்ணே. எங்க மனசுல இப்ப மாதிரியே, ராசாவாட்டம் எப்பவும் உசந்து நிப்பேண்ணே நீ!

அதெல்லாம் கெடக்கட்டும்.

இன்னிக்கு உம்பொறந்தாளாம்ணே. உம் பொறந்தநாள்னு யாருக்கெல்லாம் தெரிஞ்சிருக்குதோ, அந்தப் பயலுவ எல்லாரும் மனசுக்குள்ளே சட்டுன்னு, ஒத்த நொடி... ‘இந்த வடிவேலு நல்லாருக்கணும்பா’னு குலசாமிகிட்டயோ இஷ்ட சாமிக்கிட்டயோ உனக்கா வேண்டிக்குவாண்ணே. அதான் நீ சம்பாதிச்சிருக்கிற சொத்து. எப்பவுமே நீ எங்களுக்கான சொத்துண்ணே!

அண்ணே... வடிவேலுண்ணே... நல்லாருண்ணே. நீ நல்லாருக்கணும்ணே! 

(10.10.18 இன்று வைகைப்புயல் வடிவேலு பிறந்தநாள்)

  

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close