[X] Close

கோவை வனக்கோட்டத்தில் முதல் முறையாக செல்போன் செயலி மூலம் புலிகள் கணக்கெடுப்புப் பணி தொடக்கம்: வரும் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது


tiger-app-launched

மேட்டுப்பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட ஜக்கநாரி காப்புக்காடு பகுதியில் நேற்று புலிகள் கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்ட வனத்துறையினர்.

  • kamadenu
  • Posted: 10 Oct, 2018 09:15 am
  • அ+ அ-

கோவை வனக்கோட்டத்தில் முதல் முறையாக செல்போன் செயலி மூலம் புலிகள் கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது. வரும் 12-ம் தேதி வரை இந்தப் பணி நடைபெற உள்ளது.

நாடு முழுவதும் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேசிய புலிகள் கணக்கெடுப்புப் பணிகள் நடைபெறும். அதன்படி, கோவை வனக்கோட்டத்துக்கு உட்பட்ட கோவை, மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம், போளூவாம்பட்டி, காரமடை, சிறுமுகை மற்றும் மேட்டுப்பாளையம் ஆகிய 7 வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பு பணிகள் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றன.

இந்நிலையில், புலிகளின் எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிடுவதற்காக எம்-ஸ்டிரைப்ஸ் (M-STrIPES) என்ற செல்போன் செயலி மூலம் கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது. இந்த கணக்கெடுப்பில் வனப்பணியாளர்கள், தன்னார்வலர்கள் என சுமார் 150 பேர் பங்கேற்றனர். கணக்கெடுப்பில் ஈடுபடு வோருக்கு, செல்போன் செயலியை பயன்படுத்துவது குறித்து கோவை வடகோவையில் உள்ள தமிழ்நாடு வன பயிற்சி மையத்தில் நேற்றுமுன்தினம் பயிற்சி அளிக்கப்பட்டது. முதுமலை புலிகள் காப்பக மூத்த உயிரியலாளர் யோகேஷ், இளநிலை உயிரியலாளர் சந்தோஷ், தாவரவியலாளர் பழனிசாமி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

மொத்தம் 47 பீட்களில் கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கியது. ஒவ்வொரு பீட்டுக்கும் ஒரு செல்போன் வழங்கப்பட்டுள்ளது. புலிகளை நேரில் காண்பது, கண்காணிப்புக் கேமராவில் பதிவாகும் புலிகள், கால் தடம், கழிவு மற்றும் எச்சம், மரங்களில் உள்ள கீறல்கள் போன்றவற்றின் அடிப்படையில் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. மேலும், புலிகளின் வாழ்விடத்தில் உள்ள வேறு மாமிச உண்ணிகள், தாவர உண்ணிகள் நடமாட்டம் குறித்த தகவல்களும் செல்போன் செயலி மூலம் பதிவு செய்யப்பட்டன. இது குறித்து மாவட்ட வன அலுவலர் டி.வெங்கடேஷ் கூறும்போது, “கோவை வனக்கோட்டத்தில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், செந்நாய், காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. செல்போன் செயலி மூலம் புலிகளை கணக்கெடுக்கும் பணி வரும் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கணக்கெடுப்பின்போது மற்ற விலங்குகளும் கணக்கிடப்படும். பின்னர், புலிகளின் எண்ணிக்கை குறித்த அறிக்கை தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்படும்” என்றார்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close