[X] Close

அரசு சார்பு நிறுவனங்களில் பல மாதங்களாக சம்பள பாக்கி: 10 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி - புதுச்சேரி அரசு மவுனம் காப்பது ஏன்?


pudhucherry-government-in-trouble

தட்டாஞ்சாவடியில் உள்ள பாப்ஸ்கோ அடக்கவிலைக் கடை

  • kamadenu
  • Posted: 09 Oct, 2018 14:57 pm
  • அ+ அ-

புதுச்சேரியில் அரசு சார்பு நிறுவனங்களில் பல மாதங்களாக சம்பள பாக்கி உள்ளதால் பத்தாயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நிறுவனத்தில் கிடைக்கும் லாபத்தில்தான் சம்பளம் என ஆளுநர் கிரண்பேடி முடிவு எடுத்து வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்தும் அரசு தரப்பில் மவுனமே நிலவுவதால் பலரின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.

புதுச்சேரியில் அரசு சார்பு நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களில் நிரந்தர மற்றும் தற்காலிக ஊழியர்கள் என 13,500 பேர் பணியாற்றி வருகின்றனர்.

இதில் சாராய வடி ஆலை, மின் உற்பத்தி குழுமம், பிப்டிக் உள்ளிட்ட சில நிறுவனங்களை தவிர, மற்ற நிறுவனங்கள் அனைத்தும் நஷ்டத்தில் இயங்குகின்றன. இந்த நிறுவனங்கள் சேவை மற்றும் லாப நோக்கத்துடன் துவங்கப்பட்டது. சிறப்பாக செயல்பட்டு வந்த நிறுவனங்கள், ஊழல், நிர்வாக சீர்கேடு, ஆட்கள் திணிப்பு உள்ளிட்ட காரணங்களால் நஷ்டத்தை சந்தித்துள்ளன.

ஆண்டுதோறும் மானியமாக ரூ.550 கோடி வரை அரசு நிதி வழங்கியும் இந்த நிறுவனங்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர முடியவில்லை. மானியத்தின் பெரும்பகுதி ஊதியத்துக்கே செலவிடப்பட்டதால் லாபம் கிடைக்கவில்லை.

இதன் ஒரு பகுதியாக அரசு சார்பு நிறுவனங்களுக்கு மானியம் கொடுப்பது மூலதனம் மற்றும் முதலீட்டு அடிப்படை தேவைகளுக்கு மட்டுமே வழங்கப்படும். நிறுவனத்தில் கிடைக்கும் லாபத்தில் மட்டுமே சம்பளம் வழங்க முடியும் என ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துவிட்டார். ஆளுநரின் நடவடிக்கையால் அரசு சார்பு நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. இதனால் மாதந்தோறும் வழங்கப்படும் சம்பளம் கிடைக்காமல் ஊழியர்களின் குடும்பங்கள் தவிப்பில் உள்ளன.

இதுதொடர்பாக ஊழியர்கள், அமைச்சர்களை சந்தித்து மனு அளித்தும் பேச்சுவார்த்தை நடத்தியும், பலனில்லை. இதனால் ஊழியர்கள் வீதியில் இறங்கி போராடுவதால் புதுவை மாநிலம் போராட்டக்களமாகவே மாறி வருகிறது.

மாதக்கணக்கில் ஊதியம் இல்லை

ஊழியர்கள் தரப்பில் விசாரித்தபோது, “பாசிக் நிறுவன ஊழியர்களுக்கு ஊதியம் கிடைத்து 45 மாதங்களாகிவிட்டது. பாண்டெக்ஸில் 22 மாதங்களும், ஜெயபிரகாஷ் நாராயணா மில்லில் 18 மாதங்களும், பாப்ஸ்கோவில் 16 மாதங்களும், ரேஷன்கடை ஊழியர்களுக்கு 14 மாதங்களும், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 8 மாதங்களும், கதர் வாரியத்தில் 7 மாதங்களும் என பல்வேறு நிறுவன ஊழியர்களுக்கு பல மாதங்களாக ஊதியமே கிடைக்கவில்லை. இது மேலும் உயரவே வாய்ப்புள்ளது.

கல்வித்துறையின் ரொட்டிபால் ஊழியர்கள் 600 பேருக்கு 9 மாதங்களாகவும், பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்கள் 1,300 பேருக்கு ஓராண்டாகவும் சம்பளம் வழங்கப்படவில்லை. இதேபோல் பாட்கோ ஊழியர்கள், விளையாட்டு பயிற்சியாளர்கள், அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களும் சம்பளம் கிடைக்காமல் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்” என்று வேதனையுடன் குறிப்பிடுகின்றனர்.

ஆலைகள் மூடல்

இதுதொடர்பாக ஆலை ஊழியர்கள் தரப்பில் கூறுகையில், “ஏஎப்டியில் நஷ்டம் என கூறி ஆலையை மூடிவிட்டனர். தற்போது ஐயங்குட்டி பாளையத்தில் பெயரளவில் இயங்கி வரும் ஒரு யூனிட்டில் 150 பேர் வேலை செய்து வருகின்றனர். மற்ற ஊழியர்களை லே-ஆப்பில் அனுப்பிவிட்டனர். இதேபோல் சுதேசி, பாரதி மில்லும் நஷ்டத்தில் இயங்குவதாக கூறி ஊழியர்களுக்கு 4 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை.

புதுச்சேரி விவசாயிகளுக்காக துவங்கப்பட்ட லிங்காரெட்டிபாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையும் மூடப்பட்டு ஊழியர்களுக்கு லே-ஆப் கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, இந்த பட்டியலில் கூட்டுறவு நூற்பாலையை சேர்க்க உள்ளனர். பல ஊழியர்கள் வறுமை காரணமாக இறந்துள்ளனர்” என்கின்றனர்.

10 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு

தொழிற்சங்கங்கள் தரப்பில் விசாரித்த போது, “அரசு சார்பு நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பல மாதங்களாக வழங்கப்படாத சம்பளத்தொகை ரூ.500 கோடியை கடந்து விட்டது. பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததால் சுமார் 10 ஆயிரம் ஊழியர்களின் குடும்பங்கள் பாதிப்பில் உள்ளன.

அரசின் திட்டம் என்ன?

இதுபோன்ற சூழலில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவும், நஷ்டத்தில் இயங்கி வரும் நிறுவனங்களை லாபத்தில் இயக்கவும் புதுவை அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக, முன்னாள் செயலர் விஜயன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி காலத்தை கடத்தி வருகிறது.

நிறுவனத்தில் கிடைக்கும் லாபத்தில்தான் சம்பளம் என ஆளுநர் தெரிவித்தும் அரசு மவுனம் காக்கிறது. புதுவை அரசு உடனடியாக ஒரு முடிவை எடுக்க வேண்டும். அரசு சார்பு நிறுவனங்களை என்ன செய்ய திட்டமிட்டுள்ளது என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்” என்கின்றனர்.

தவறான அதிகாரிகளுக்கு ஆட்சியாளர்கள் துணை

புதுச்சேரி அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்பு பொதுச்செயலாளர் லட்சுமணசாமி கூறுகையில், “ஒவ்வொரு துறையிலும் தவறு செய்கிற அதிகாரிகளுக்கு ஆட்சியாளர்கள் சாதகமாக இருக்கின்றனர். இதனால் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு பொதுமக்களும், ஊழியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிதி நெருக்கடி என்பது செயற்கையான நிதி நெருக்கடிதான். இது உண்மையான நிதி நெருக்கடி அல்ல. ஆண்டுக்கு ரூ.500 கோடி ரூபாய் வீணாக கசிகிறது. அதனை சரி செய்யாததால் சம்பளத்திற்கு நிதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொதுப்பணித்துறையில் டெண்டர் பணிகளில் சிக்கனத்தை கடைபிடித்தால் ரூ. 150 கோடியும், மின்துறையில் 15 சதவீதம் மின் இழப்பை குறைக்கலாம். பல துறைகளில் பணம் கசிவதை தடுத்தால் ரூ. 500 கோடியை மிச்சப்படுத்த முடியும். நிதியை பெருக்க பல விஷயங்களையும் அரசுக்கு தெரிவித்துள்ளோம்” என்று குறிப்பிடுகிறார்.

பொதுமக்கள் தரப்பில் விசாரித்தபோது, “அரசியல் காரணங்களுக்காக ஒருவரை யொருவர் குற்றம் சாட்டுவதற்கு மட்டும்தான் இந்த பிரச்சினை விவாதிக்கப்பட்டு வருகிறது.

10 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதார பிரச்சினை. மீட்க முடியாத நிலைக்கு சென்றுவிட்ட நிறுவனங்களுக்கு, தற்போதைய தேவை மூலதனம் அல்ல, சீரமைப்பு மட்டுமே முதல் தேவையாக உள்ளது. நஷ்டமடைந்துள்ள அரசு சார்பு நிறுவனங்களை மீட்கவும், சீரமைக்கவும் ஒட்டுமொத்த தீர்வை ஆளுநர் கிரண்பேடி முன்வைக்க வேண்டும். அரசும் தெளிவான முடிவு எடுக்க வேண்டும்” என்கின்றனர்.

அதிகாரிகள்தான் காரணம்

முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் கூறுகையில், “சட்டப்பேரவையில், அரசு கார்ப்பரேஷன்களில் நடைபெற்ற ஊழல் குறித்து மூன்று மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சபாநாயகர் உத்தரவிட்டார். அதனடிப்படையில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை.

இதற்கான காரணத்தை அரசு வெளியிட வேண்டும். கூட்டுறவு நிறுவனங்கள் சீரழிந்ததற்கு அதிகாரிகள்தான் காரணம். ஊழல் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். பாராளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் அரசு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகிறது” என்று குறிப்பிட்டார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close