[X] Close

அழகி, ஆட்டோகிராஃப், 96; - நெஞ்சிருக்கும் வரை வெற்றி நிச்சயம்!


azhagi-autograph-96

அழகி, ஆட்டோகிராஃப், 96

  • வி.ராம்ஜி
  • Posted: 08 Oct, 2018 14:16 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

சினிமா என்பது இரண்டு மணி நேர பொழுதுபோக்கு மட்டும் அல்ல. அது சிரிக்க வைக்கும். பயமுறுத்தும். சிந்திக்கச் சொல்லும். உண்மையை உணர்த்தும். சில தருணங்களில், சில சினிமாக்கள் நம் பழைய டைரியின் புரட்டல்களாகவே மனசில் கல்லெறிந்து சலசலக்க வைக்கும்.

டீன் பருவம் என்பது வாழ்வின் மிக முக்கியத் தருணம். ஒன்றுமே தெரியாது எனும் வயதில் இருந்து ஓவ்வொன்றாகத் தெரியத் தொடங்குற, ஆனால் தெரிந்ததைச் சொல்லத் தயங்குகிற காலகட்டம் அது. யாரிடம் சொல்வேனடி தோழி எனும் பாரதியின் வரியைப் போலவே, நண்பனிடம் மட்டுமே, தோழியிடம் மட்டுமே பகிர்ந்துகொள்ளும் காலம்.

இப்படிப் பகிர்வதாலும் பெற்றோருக்குப் பிறகு நண்பனே முக்கியத்துவம் வாய்ந்தவனாகிறான். அவனுடன் உலவுகிற பள்ளிக்கூடமே சொர்க்கபூமியாகிறது.

பள்ளி... பால்யம்... நண்பன் என்கிற வரிசையில் காதலும் சேர்ந்துகொள்கிறது. பால்யத்தில், பள்ளிப்பருவத்தில் ஏற்படுகிற காதல் விசித்திரமானது. பல வருடங்கள் கழித்து, காதல் எவ்வளவு பைத்தியக்காரத்தனம் என்றும் தெரியும். அடடா... எப்பேர்ப்பட்ட காதலை எவ்வளவு ஜஸ்ட் லைக் தட்டாக கடந்திருக்கிறோம் என்பதும் புரியும்.

சொன்ன காதலைவிட, இங்கே சொல்லாத காதலின் பட்டியலே நீளமானது. ‘என்னடா எதுவா இருந்தாலும் சொல்லு’ என்று கேட்டு பயம் போக்குகிற பெண்கள் கூட உண்டு. ஆனால் அந்த வார்த்தைக்குப் பிறகுதான், இன்னும் படபடத்து, தடதடத்துப் போவான் பையன்.

சரி... இதெல்லாம் எதற்கு?

எல்லாம் 96 வந்து உசுப்பிவிட்டதன் விளைவு.

அலைகள் ஓய்வதில்லை பார்த்துக்கொண்டே, பள்ளியில் கார்த்திக்காகவும் ராதாவாகவும் மாறியவர்கள் உண்டு. பன்னீர்புஷ்பங்கள் சுரேஷும் சாந்திகிருஷ்ணாவும் மிக முக்கியமாக இளையராஜாவின் இசையுடன் கூடிய மலேசியா வாசுதேவனின் கோடை கால காற்றே குரலும் இன்னும் காதலின் பக்கம் உந்தித்தள்ளின. ஒருதலைராகமும் கிளிஞ்சல்கள் மாதிரியான படங்கள், இன்ஸ்டண்ட் சுவை. வலி. அப்போதைக்கு கிளறிவிட்டன. 

எழுபதுகளின் இறுதியில் வந்த அழியாத கோலங்கள், மனதில் பதிந்திருந்த கோலங்களை திரும்பப் பார்க்க வைத்தன. பாலுமகேந்திராவின் கேமிரா மொழியும் ஷோபாவின் இயல்பான நடிப்பும் பல பள்ளிகளையும் ஆசிரியர்களையும் நினைவுக்குள்ளிருந்து மீட்டெடுத்தன.

இப்படியான திரைவழிப்பாதையில், அழகி தந்த தாக்கம் சொல்லிமாளாது. கிராமம், தோப்பு, பள்ளிக்கூடம், கோயில், திருவிழா என அழகி கிளப்பிவிட்டதில் தகதகத்துப் பிரகாசித்தன, மன அலமாரியின் பிளாஷ்பேக் வரிசைகள். பள்ளிப்பருவத்துக் காதலும் சொல்லாமலேயே பிரிகிற வேதனையும் நிமிண்டிக்கொண்டே இருக்கிறது, அந்த நாயகன் சண்முகத்தை மட்டுமின்றி நம்மையும் கூட! சண்முகத்தையும் தனலட்சுமியையும் அந்த பண்ருட்டித் தமிழையும் தங்கர்பச்சானின் திரைவடிவத்தையும் யாரால்தான் மறக்கமுடியும். குறிப்பாக, படம் நெடுக வந்து, முக்கியமான தருணங்களிலெல்லாம் நம்மை உசுப்பிவிட்டு, மனதை கனமாக்கிக் கொண்டே இருப்பார் இளையராஜா.

பணக்கார, படித்த, தன் பள்ளிக்காதலியை ரோடு போடும் வேலையில் பார்ப்பதும் நொறுங்கிப் போகிற நாயகனுக்கான சம்பவங்கள், நம் வாழ்வில் நடந்திடாத, எல்லோருக்கும் நடந்திடாத, எவருக்கேனும் நடந்திருப்பவை மட்டுமே! ஆனால், அங்கே பார்த்திபனுக்கு பதிலாக நம்மையும் நந்திதாதாஸுக்குப் பதிலாக பள்ளிப் பருவத்துப் பெண்ணையும் பொருத்திப் பார்க்க வைத்திருப்பதுதான் தங்கரின் வெற்றி.

‘எல்லாருடைய சந்தோஷமும் பழைய காதலியைப் பாக்கற வரைக்கும்தான்’ என்று விவேக் சொல்லும் வசனம், அர்த்தம் பொதிந்த வாழ்வியல் குறியீடு.

இப்படித்தான்... ஆனால் வேறொருவிதமாக, கொஞ்சம் குதூகலமான மனநிலையுடன் அதேசமய்ம் ரத்தமும்சதையுமான உள்காய வலியுடன் வந்த ஆட்டோகிராப், செல்லுலாய்டில் சேரன் போட்ட கையெழுத்து.

சொந்த ஊரில், பள்ளிக்கூடத்தில், ஒன்றாய்ப் படித்த மல்லிகா மீதான காதல்... அங்கே உறவாடிக் களித்த நட்பு. பிறகு கேரளாவில் கல்லூரியில் கோபிகா மீதான காதலும் கல்லூரி வாழ்க்கையும் அங்கே உள்ள நண்பர்களுமான இன்னொரு எபிசோடு.

அடுத்ததாக, படிப்பு முடிந்து வேலைக்கான தருணத்தில் தோழியாக அறிமுகமாகி, அவன் வாழ்க்கையையே மடைமாற்றி, ஜாக்கி தூக்கி, நம்பிக்கை உரமிடும் சிநேகாவும் அப்போதான நண்பர்களும் என மூன்றாவது அத்தியாயம்.

ஆனால் நாயகன் சேரனுக்கு கனிகாவுடன் கல்யாணம். அதற்கான அழைப்பை, பள்ளிக் காதலி, நண்பர்கள், கல்லூரிக் காதலி, நண்பர்கள், தோழி மற்றும் நண்பர்கள் என பத்திரிகை கொடுக்கும் பயணமும் அந்த ரீவைண்ட் செய்யப்பட்ட அனுபவங்களும் ஆட்டோகிராஃபை இன்னும் நூறு ஆண்டுகள் கழித்தும் பேசவைத்துக் கொண்டிருக்கும்.

அந்தக் கிராமத்து கரட்டாம்பாதையில், சேரனின் சைக்கிளில் நாமும் தொற்றிக்கொள்வோம். கேரளாவில் அந்தப் படகில், கோபிகாவைப் பார்க்க அலையடிக்கிற மனசுடன் நாமும் பயணிப்போம். அந்தக் காதலும் இல்ல, இந்தக் காதலும் இல்ல. சாகலாம்னா அதுவும் முடியல. ச்சே... என்று மனம் வெதும்பி, வெறுத்து, நொந்து, வெந்து, புழுங்கிக் கொண்டிருக்கும் வேளையில், ‘ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறது...’ என்று சொன்ன சிநேகாவின் பாடல், நாயகன் சேரனுக்கானது மட்டும் என்று சேரன் கூட நினைக்கவில்லை. அதற்காக எடுக்கவும் இல்லை. உடைந்து கிடக்கிறவர்களுக்கான கிரியா ஊக்கிப் பாடல் அது. எல்லோருக்குமான பாடல் அது.

கணவன், குழந்தைகளுடன் வரும் மல்லிகா, விதவையாகிவிட்ட கோபிகாவின் வருகை, எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்கிற தோழி சிநேகா, அங்கே முப்பத்துமுக்கோடி தேவர்கள் வந்தால் என்ன நிறைவு இருக்குமோ... இவர்கள் வந்த நிறைவுடன் கனிகாவுக்குத் தாலி கட்டுகிறார் சேரன்.

இந்த அனுபவத்தை, ஞாபக அடுக்குகளில் இருந்து, திரும்பவும் தூசு தட்டி, நம்முடைய அனுபவங்களை நம்மைக் கவனிக்க வைத்த விதத்தில், கல்யாணச் சாப்பாடே போட்டிருப்பார் சேரன்.

இதோ... இப்போது 96.

நஞ்சை கொஞ்சும் தஞ்சை. இருபாலர் மேல்நிலைப் பள்ளி. பள்ளியில் உடன் படிக்கும் ஜானகி. ராமச்சந்திரன். இருவருக்குமேயான ஈர்ப்பு, ப்ரியமாகி, அந்தப் ப்ரியம் அன்பாக வளர்ந்து, காதலாக மலர்கிறது. ஆனால் மலர்ந்ததைச் சொல்ல அவனுக்குத் தயக்கம். ‘சரி... பின்னாடி சொல்லிக்கலாம்’ என்று நினைத்துக்கொண்டிருந்த ராமச்சந்திரன், கடன் தொல்லையால் எங்கோ செல்ல, அவன் எங்கே, எங்கே என்று ஜானகி அலைமோதுகிறாள்.

கிட்டத்தட்ட, 22 வருடங்களுக்குப் பிறகு பள்ளி நண்பர்கள், 96ம் ஆண்டு பள்ளி நண்பர்கள் ஓரிடத்தில் சந்தித்துக்கொள்ள, படம் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்களில் பெரும்பாலானோர், அவரவர் படித்த ஊர், படித்த பள்ளி, பார்த்த பெண், பழகிய நண்பர்கள்... என பெட்ரோல் போடாமல், சுங்கவரி செலுத்தும் அவசியமில்லாமல், பயணிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

அதிலும் அந்தக் காலகட்டத்தை, இளையராஜாவின் பாடல்களைக் கொண்டே நிரப்பி நிரப்பி, நமக்குப் புகட்டிய விதம்... இன்னும் மயக்கிப் போட்டது. அந்த யமுனை ஆற்றிலே ஈரக்காற்றிலே... போதுமே நம்மை சொக்கிப் போடுவதற்கு!

ராமச்சந்திரன் விஜய்சேதுபதியை தாமாக கற்பனை செய்துகொண்டார்கள் ஆண்கள். ஜானகி த்ரிஷாவுக்குள் தன்னைப் பொருத்திக்கொண்டார்கள் பெண்கள்.

பாசமலர், துலாபாரம், மகாநதி மாதிரியான படங்களுக்கு எல்லோர்க்கும் தெரிய அழுதுவிடலாம். ஆனால் அழகி, ஆட்டோகிராஃப், 96 மாதிரியான படங்களைப் பார்க்கும் போது, கணவனுக்குத் தெரியாமல் துப்பாட்டாவையோ புடவைத் தலைப்பையோ கண்களுக்குக் கொண்டுபோன பெண்களும் செல்போன் எடுப்பது போல, கர்ச்சீப் எடுத்து செல்போன் துடைப்பது போல, வழியும் கண்ணீரை கர்ச்சீப்பில் துடைத்துக்கொண்டு, மீண்டும் ஜீபூம்பா பூதத்தை மன ஜாடிக்குள் வைத்து அடைத்துக்கொண்ட ஆண்களும் கொண்டு. நிரம்பி வழிந்துகொண்டிருக்கிறது 96.

இது இயக்குநர் பிரேம்குமாரின் வெற்றி. அவரின் இயல்பு மீறாத கண்ணியத்துக்கும் காதலில் கண்ணியம் சேர்த்தமைக்குமான வெற்றி.

அழகி, ஆட்டோகிராஃப், 96... மாதிரியான படங்கள் நினைவிருக்கும் வரை ஹிட்டடித்துக்கொண்டேதான் இருக்கும். நெஞ்சிருக்கும் வரை... அந்தப் பள்ளி நினைவுகள்... பால்ய நினைவுகள்... இருந்துகொண்டேதான் இருக்கும்!

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close