சீன பட்டாசுகளால் நசுக்கப்படும் சிவகாசி பட்டாசுத் தொழில்

சட்ட விரோதமாக தயாரிக்கப்படும் வெங்காய வெடிகள் மற்றும் சீன பட்டாசுகளின் வரவால் சிவகாசி பட்டாசுத் தொழில் நசுக்கப்பட்டு வருகிறது.
சிவகாசி மற்றும் அதையொட்டிய பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், பட்டாசு உப தொழில் மூலம் 3 லட்சம் பேரும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். சுமார் 250 முதல் 300 பட்டாசு ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தமிழகத்தில் தீபாவளியைப் போல, வட மாநிலங்களில் தசரா விழாவில் பட்டாசுகளை வெடித்து கொண்டாடுவர்.
நாட்டின் ஒட்டுமொத்த பட்டாசுத் தேவையில் சுமார் 90 சதவீத உற்பத்தி சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேற்கொள்ளப்படுகிறது. ஆண்டுக்கு சுமார் ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு வர்த்தகம் நடக்கிறது.
ஆனால், சிவகாசி பட்டாசுத் தொழிலை அச்சுறுத்தும் அரக்கனாக சீன பட்டாசுகள் களமிறக்கப்பட்டுள்ளன. பட்டாசுக்கு தடை கோரி, ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. வட மாநிலங்களில் போதிய ஆர் டர்கள் இன்றி இந்த ஆண்டு சிவகாசியில் பட்டாசு உற்பத்தியும் பெருமளவில் குறைந் துள்ளது. இந்நிலையில், சட்ட விரோதமாக தயாரிக் கப்படும் வெங்காய வெடி கள், ஆன்லைனில் மட்டுமின்றி பெட் டிக் கடைகளிலும் விற்கப்படும் சீனப் பட்டாசுகள் சிவகாசி பட்டாசுத் தொழிலுக்கு மேலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள் ளன. இதுகுறித்து, தி இந்தியன் பட்டாசு உற்பத்தியாளர் சங்க முன்னாள் செயலர் வெங்கடேசன் கூறியதாவது: சீனப் பட்டாசுகள் தயாரிக்கப் பயன்படும் குளோரைடுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது எளிதில் வெடிக்கக் கூடிய வேதிப் பொருள். சீனப்பட்டாசுகள் தயாரிக்க பொட்டாஷியம், குளோரைடு, சல்பர், சிவப்பு பாஸ்பரஸ் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் அதிக சத்தத்தை எழுப்ப முடியும். இந்த ரசாயனங்கள் குறிப்பிட்ட வெப்ப நிலையில் இருக்க வேண்டும். வெப்பநிலை அதிகரித்தால் தானாக வெடிக்கும். சீனப் பட்டாசுகளால் கேப் வெடி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. விலை குறைவு என்பதற்காக ஆபத்து மிகுந்த சீனப்பட்டாசுகள் வாங்குவதை பொதுமக்களும், விற்பனை செய்வதை சில்லறை வியாபாரிகளும் தவிர்க்க வேண் டும் என்றார்.
தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர் சங்கத் தலைவர் ஆசைத் தம்பி கூறியதாவது:
ஒருபுறம் உச்ச நீதிமன்ற வழக்கு, மறுபுறம் சட்ட விரோத வெங்காய வெடிகள் மற்றும் சீனப்பட்டாசுகள். இதனால் இத்தொழிலை நம்பியுள்ள சிவகாசி மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
சீனப்பட்டாசுகளை சிறுவர்கள் விளையாட்டாக பயன் படுத்தினால் கூட பெரும் ஆபத்து ஏற்படும்.
இதுபோன்ற சீனப் பட் டாசுகளை கண்டறிந்து கைப் பற்றி அழிக்கக் கோரியும், சட்டவிரோதமாக வெங்காய வெடிகளை விற்பனை செய்வோர் மீது கடும் நட வடிக்கை எடுக்கவும் கோரி பிரதமர், முதல்வர், மத்திய தொழில் வர்த்தக அமைச்சர், சுற்றுச்சூழல் அமைச்சர், மத்திய கலால் மற்றும் சுங்க வாரியத் தலைவர், வெடிபொருள் முதன் மைக் கட்டுப்பாட்டு அதிகாரி ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். காவல் துறை மூலமும் இவற்றை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட வேண்டும் என்றார்.
இதை மிஸ் பண்ணாதீங்க...
- சாதி மாறி காதல் செய்ததால் மரத்தில் கட்டிவைக்கப்பட்ட இளம் பெண்
- பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்: டிடிவி.தினகரன் மீது அமைச்சர் ஆர்.காமராஜ் குற்றச்சாட்டு
- அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் 5-வது நாளாக மழை; விவசாயிகள் மகிழ்ச்சி: தோகைமலையில் 21 மி.மீ. மழை
- விஜய்யை ரொம்பப் பிடிக்கும்; ஆனாலும் கேப்பேன்; எவ்ளோ மிரட்டல் வந்தாலும் கேப்பேன்! - கருணாகரன் உறுதி