[X] Close

வைகை ஆற்றில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவை சாப்பிட்டு கால்நடைகள் இறக்கும் பரிதாபம்: மாநகராட்சி விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பலனில்லை


plastic-dust-in-vaigai-river

  • kamadenu
  • Posted: 07 Oct, 2018 15:38 pm
  • அ+ அ-

 

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு வரும் ஜனவரி 1-ம் தேதி முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், மதுரை மாநகராட்சி நிர்வாகம், மீனாட்சியம்மன் கோயில் சுற்றுவட்டாரப் பகுதியில் தற்போதே பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதித்துவிட்டது. இது குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும் பொருட்களை பாலிதீன் பைகளில் போட்டுத்தரும் பழக்கத்தை இப்போதுவரை தடுக்க முடியவில்லை. சாலைகளில் வீசப்படும் பாலிதீன் பைகள் சுற்றுச்சூழல் மாசுக்கு பெரிதும் காரணமாக உள்ளன. ஆற்றங்கரைகளில் கிடக்கும் பாலிதீன் பைகள் கால்நடைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளன.

முன்பெல்லாம் கால்நடைகள் மேய் ச்சலுக்கு அழைத்துச் செல்வதற்கென்றே பணியாளர்கள் இருப்பார்கள். ஆனால், தற்போது நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில ஒருசில கால்நடை வளர்ப்போர் தீவனச் செலவைக் கட்டுப்படுத்துவதற்காக ஆடு, மாடுகளை காய்கறி சந்தைகள், தெரு ஓரங்கள், ஆற்றங் கரைகளில் மேயவிடுகின்றனர். அப்போது கால்நடைகள் தீவனத்துடன் மற்ற பொருட்களையும் சாப்பிடத் தொடங்கிவிடுகின்றன. சமீப காலமாக கால்நடைகள் உணவு கிடைக்காமல் பாலிதீன் கவர்களையும் சாப்பிட்டு, அவற்றின் வயிறுகளில் இருந்து 15 கிலோ, 20 கிலோ 30 கிலோ வரை பாலிதீன், பிளாஸ்டிக் கழிவுகளை கால்நடை மருத்துவர்கள் எடுப்பது சாதாரணமாகிவிட்டது. குறிப்பாக வைகை கரைகளில் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் பிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிட்டு இறப்பது அதிகரித்துள்ளது.

இது குறித்து திருப்பரங்குன்றம் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவப் பேராசிரியர் உமா ராணி கூறியதாவது:

பாலிதீன் பைகள், குப்பைத் தொட்டிகளில் மட்டுமின்றி காற்றில் அடித்துச் செல்லப்பட்டு தெருக்கள், ஆற்றங்கரைகள், வனப்பகுதிகள், விவசாய நிலங்களிலும் சிதறிக் கிடக்கின்றன. தற்போது உற்பத்தி செய்யப்படும் பாலிதீனில் 10 சதவீதம் மட்டுமே மறுசுழற்சிக்கு பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ள 90 சதவீதம் மட்காத பொருளாக மண்ணில் தேங்கி சூழல் சீர்கேட்டை ஏற்படுத்துகின்றன.

மாடுகள், தீவனத்துடன் இதர செரிமானமாகாத அயல் பொருட்களான பாலிதீன், பிளாஸ்டிக், கயிறு, போன்றவற்றையும் கூர்மையான இரும்பு ஆணி, கட்டுக்கம்பி, ஊசி, மரக்குச்சி போன்றவற்றையும் சாப்பிட்டுவிடும். இவை வயிற்றுக்குள் சென்று சீரண உறுப்புகள், உதரவிதானம், இதயம், நுரையீரல் போன்ற உறுப்புகளை பாதிப்படைய செய்கின்றன. அதனால், மாடுகளில் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டு, பல சமயங்களில் இறப்பை உண்டாக்கி விடும். மாடுகள், தங்களின் உடலுக்கு ஒவ்வாத அயல்பொருட்களை சாப்பிடும்போது சில பொருட்கள் செரிமானமாகாமல் ஒன்றுடன் ஒன்று இணைந்து வயிற்றில் அடைப்பை ஏற்படுத்துகின்றன.

சில நேரங்களில் விழுங்கப்பட்ட கூர் மையான பொருட்கள் தொண் டையில் சென்று அடைப்பை ஏற்படுத்துவதால் மாடுகள் தீவனம் சாப்பிடாது. சினை மாடுகளின் வயிற்றில் வளரும் கன்று அடி வயிற்றை நோக்கி நகரும் பொழுதும், கன்று ஈனும் நேரத்தில் மாடுகள் அதிகமாக முக்கும்போதும், மாடுகள் ஏற்ற இறக்கத்தில் நடக்கும் போதும், வெகுதூரம் நடத்திச் செல்லப்படும் போதும் தசைகள் அசைவதால் கூர்மையான பொருட்கள் பழைய நிலையிலிருந்து இடம் மாறும்போது உடல் உள்ளுறுப்புகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close