[X] Close

தூய்மை இந்தியா திட்டத்தில் கடமைக்கு கட்டப்படும் கழிப்பறைகளால் என்ன பயன்? - நடைமுறைச் சிக்கல்களால் பயன்படுத்த முடியாத அவலம்


swachh-bharat-issue

  • kamadenu
  • Posted: 07 Oct, 2018 15:23 pm
  • அ+ அ-

 

என்.முருகவேல்

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கடமைக்கு கட்டப்படும் கழிப்பறைகளால் திட்டத்தின் நோக்கமே பாழ்பட்டு வருகிறது. பல்வேறு நடைமுறைச் சிக்கல்களால் இவைகளை பயன்படுத்த முடியாத நிலையும் உள்ளது.

முதலில் கிராமப் புற வீடுகளில் கழிப்பறைகளை கட்டுவதையும், பின்னர் திறந்தவெளி கழிப்பிடமில்லா கிராமப் புறங்களை உருவாக்குவதையும் மைய மாகக் கொண்டு கடந்த 2014 அக்டோபர் 2-ம் தேதி ஸ்வச் பாரத் இயக்கம் எனப்படும் தூய்மை இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டது. 4 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. ஆண்டுக்கு ரூ.9 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 4 ஆண்டுகளில் 8 கோடியே 65 லட்சம் குடியிருப்புகளில் கழிப்பறைகள் கட்டப் பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட 25 மாநிலங்கள் 100 சதவிகித திறந்தவெளி கழிப்பிடமற்ற மாநிலங்கள் என ஸ்வச் பாரத் இணையதளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

கிராமங்களில் துப்புரவு உள்ளடக்கம் 42 முதல் 63 சதவீதமாக அதிகரித்துள்ளது. கிராமங்களில் திறந்த வெளியில் இயற்கை உபாதையைக் கழிப்பவர்களின் எண்ணிக்கை 550 மில்லியனில் இருந்து 330 மில்லியனாக குறைந்துள்ளது. அடுத்தாண்டு அக்டோபர் 2-ம் தேதி திறந்தவெளி கழிப்பிடங்கள் அற்ற இந்தியா என்ற நிலையை அடையும் வகையில் இந்தத் திட்டம் சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருட்கள் வைப்பறை

அரசின் அறிவிப்புப்படி பெரும்பாலான பகுதிகள் கழிப்பறைக் கட்டப்பட்டி ருந்தாலும், அவை பயன்படுத்தப்படுகிறதா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. நடைமுறையில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதால், கிராமப்புற மக்கள் அவற்றை பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர். இது தொடர்பாக பண்ருட்டி வட்டாரத்தில் சில கிராமங்களுக்குச் சென்று தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கழிப்பறைகளை பார்த்தபோது, அவை பயனற்ற பொருட்களின் வைப்பறையாக பயன்படுத்துவதைக் காண முடிந்தது.ஒருசிலர் கழிப்பறைகளைக் கட்டி பயன்படுத்தினாலும், அதனை முறையாக பாதுகாத்து பராமரிக்க முடியவில்லை என்கின்றனர்.

காட்டுக் கூடலூர் ஊராட்சியைச் சேர்ந்த நிர்மலா என்பவர் கூறுகையில், "நல்ல திட்டம், பயனளிக்கும் வகையில் உள்ளது. இருப்பினும் சற்று தரமானதாக கட்டிக் கொடுத்திருக்கலாம்" என்றார்.

முத்தாண்டிக்குப்பத்தைச் சேர்ந்த அமுதாசெல்வராஜ் கூறுகையில், "உடலுழைப்புக் கொடுத்தும் இதுவரை கழிப்பறையை கட்டி முடிக்கவில்லை. கூடுதலாக பணம் கேட்கின்றனர். இதனால் கடந்த ஓராண்டாக பயன்படுத்த முடியாத நிலை உள்ளது" என்று குறிப்பிட்டார்.

விழிப்புணர்வு வேண்டும்

கீழ்காங்கேயன் குப்பத்தைச் சேர்ந்த தமிழரசி என்பவர் கூறுகையில், "கிராமங்களில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையால் கழிப்பறையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. ஊரக வளர்ச்சித் துறையினர், திட்டத் தின் நோக்கத்தை கிராமப்புற மக்களுக்கு புரிய வைப்பது கிடை யாது.

கணக்குக் காட்ட வேண்டும் என்ற அவசர கதியில் கடைமைக்கென கட்டிவிட்டுச் செல்கின்றனர். தரமற்ற உபகரணங்களை பயன்படுத்துதல், கழிவுநீர் வெளியேறும் குழி குறைந்த ஆழத்தில் அமைக்கப்படுவதால், கழிவுகள் வெளியேறுவதில் சிக்கல் நீடிக்கிறது. அரசின் மானியத் தொகையிலேயே கமிஷன் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் போன்ற காரணங்களால் இந்தத் திட்டம் தொய்வடைந்துள்ளது. நம் சுகாதாரத்திற்காகத் தான் அரசு இதுபோன்ற திட்டங்களை மேற்கொண்டுள்ளது என்பதை மக்களும் புரிந்து கொள்ளாமல், ஏதோ அரசாங்கம் செய்து கொடுக்கிறது. செய்து விட்டுப் போகட்டும் என்ற மனப்பான்மை அகலவேண்டும் என்றார்.

கீழ்காங்கேயன்குப்பத்தைச் சேர்ந்த லதா என்பவர் கூறுகையில், "எங்கள் வீட்டில் போதுமான இடவசதி இல்லாததால், கழிப்பறை அமைக்கவில்லை. எங்கள் கிராமத்தில் பெரும்பாலானோர் கழிப்பறைகளை கட்டியிருந்தாலும், திறந்தவெளி கழிப்பிடத்தைத் தான் பயன்படுத்துகின்றனர். மகளிர் சுகாதார வளாகம் அமைக்கப்பட்டிருந்தாலும், அங்கும் தண்ணீர் இல்லாத காரணத்தால் அவற்றை எவரும் பயன்படுத்துவதில்லை" என்றார்.

ஊதியம் கிடைக்குமா?

இதே போல், கிராமப் புறங்களில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளும் நோக்கில் தூய்மைக்காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் சாலையோர குப்பைகள், வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை சேகரித்து, அவற்றை திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் உரங்கள் தயாரித்து, அவற்றை பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும். வருடத்தில் 300 நாட்கள் வேலை என்று அறிவிக்கப்பட்டு பணியமர்த்தப்பட்ட இவர்களுக்கு மாதம் ரூ.3,000 ஊதியம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் கிராமப்புறங்களில் தூய்மைக் காவலர்களுக்கு கடந்த 5 மாதமாக ஊதியம் வழங்கவில்லை என்பதுடன், அரசின் மானியத் தொகையுடன் கூடிய கழிப்பறைக் கட்டிக் கொடுக்க முன்வருவதில்லை என ஆதங்கப்படுகின்றனர்.

இது தொடர்பாக கடலூர் மாவட்ட ஊராட்சிகளின் செயலர் சிவஞானபாரதியிடம் கேட்டபோது, "தூய்மைக் காவலர்களுக்கு ஊதியம் நிலுவை ஏதுமில்லை.

அவர்களது வங்கிக் கணக்கிற்கு பணம் செலுத்தப்பட்டுவிட்டது.அவர்கள் வங்கியில் கடன் பெற்றிருக்கும் பட்சத்தில் வங்கி நிர்வாகம் அந்த தொகையை பிடித்தம் செய்திருக்கலாம்.

எனவே அவர்கள் வங்கியை நாடினால் விபரம் தெரியவரும்" என்றார். தூய்மை இந்தியா திட்டத்திற்கு மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.9 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து, சில நடைமுறைச் சிக்கல்களால், திட்டத்தின் நோக்கம் தொய்வடைகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close