[X] Close

கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் காந்தி ஆசிரமம்: இங்கு தயாரிக்கும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்க கோரிக்கை


gandhi-aasiram-at-thiruchengodu

ஆசிரமத்தின் ஒரு பகுதியில் அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் ஃபைல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பெண் தொழிலாளர்கள் | படங்கள்: கி.பார்த்திபன்.

  • kamadenu
  • Posted: 07 Oct, 2018 14:28 pm
  • அ+ அ-

 

கி.பார்த்திபன்.

திருச்செங்கோடு அருகே புதுப்பாளையத்தில் கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கடந்த 1925-ம் ஆண்டு தொடங்கப்பட்ட காந்தி ஆசிரமம், இன்றளவும் கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. மகாத்மா காந்தியின் 150-ம் ஆண்டு பிறந்த நாள் கொண்டாடும் இந்த தருணத்தில், அவரது கொள்கைகளுக்கு உயிரூட்டும் வகையில் தொடங்கப்பட்ட காந்தி ஆசிரமத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு, ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தியின் 150-ம் ஆண்டு பிறந்த நாள் விழா நாடு முழுவதும் சிறப் பாக கொண்டாடப்பட்டு வருகிறது. உலகம் போற்றும் தலைவ ராக வாழ்ந்த மகாத்மா காந்தி, ‘இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் வாழ்கிறது’ என்றார். நேருவுக்கு அவர் எழுதிய கடிதம் ஒன்றில் எளிமையான கிராமிய வாழ்க்கையில் மாத்திரம்தான் சத்தியத்தையும், அகிம்சையையும் நாம் நடைமுறையில் கொண்டுவர முடியும் என, குறிப்பிட்டிருந்தார்.

மகாத்மா காந்தியின் கிராம பொருளாதாரம் குறித்த சிந்தனைக்கு உயிருட்டும் வகையில் கடந்த 1925-ம் ஆண்டு (அப்போது சேலம் மாவட்டம்) நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே புதுப்பாளையம் என்ற குக்கிராமத்தில் காந்தி ஆசிரமத்தை மூதறிஞர் ராஜாஜி தொடங்கினார்.

4 ஏக்கர் பரப்பளவில் தொடங்கப்பட்ட இந்த ஆசிரமம் தற்போது 27 ஏக்கர் பரப்பளவை உள்ளடக்கியதாக உள்ளது. இந்த ஆசிரமத்திற்கு மகாத்மா காந்தி 3 முறை வந்து சென்றுள்ளார். மகாத்மா காந்தியின் மனைவி கஸ்தூரிபாய் காந்தி ஆசிரமத்திற்கு வந்துள்ளார்.

இதுபோல், முன்னாள் பிரதமர் நேரு, கோபால கிருஷ்ண கோகலே, காமராஜர் என பல்வேறு தேசிய தலைவர்கள் ஆசிரமத்திற்கு வந்து சென்றுள்ளனர்.

ஆசிரமம் மூலம் கதர் ஆடை, பட்டுப்புடவை, மெத்தை போன்றவை உற்பத்தி செய்யப்படு கிறது. திருச்செங்கோடு சுற்றுவட் டாரத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் உற்பத்தி செய்து தரும் கதராடைகள் காந்தி ஆசிரமத்திற்கு உட்பட்ட விற்பனை நிலையங்களில், விற்பனை செய்யப் படுகிறது.

இதுபோல், குளியல் சோப்பு, ஊதிபத்தி, ஜவ்வாது போன்ற வாசனைப் பொருட்கள், வேளாண் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் வேப்பம்புண்ணாக்கு, வேப்ப எண்ணெய் உற்பத்தி மற்றும் மரச்செக்கு நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், சீயக்காய்துாள், இரும்பு பீரோ, கட்டில் உள்ளிட்டவையும் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது.

ஊதுபத்திக்கு தேவையான மூலப்பொருளை காந்தி ஆசிரமத் தில் இருந்து சுற்றவட்டாரங்களைச் சேர்ந்த கிராம மக்கள் வாங்கிச் சென்று, அவற்றை ஊதுபத்தியாக தயாரித்து ஆசிரமத்தில் வழங்கு கின்றனர். இதற்கு ஆசிரமம் மூலம் கூலித்தொகை வழங்கப்படுகிறது. இதன்மூலம் கிராமங்களைச் சேர்ந்த பலர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு மத்திய அரசு ஜிஎஸ்எடி வரி விதிப்பை அமல்படுத்தியது. இதன் காரணமாக காந்தி ஆசிரமத் தில் தயாரிக்கப்படும் பொருட் களுக்கு 5 முதல் 18 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இதனால், ஆசிரமத்திற்கு சொந்தமான 24 விற்பனை நிலையங்களில், இதன் விற்பனை பாதியாக சரிந்துள்ளது. தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்செங்கோடு காந்தி ஆசிரம செயலாளர் எம். குமார் கூறியதாவது: திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்திற்கு சொந்தமாக சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 24 விற்பனை நிலையங்கள் உள்ளன. இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.15 கோடி மதிப்பில் வரவு, செலவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆசிரமம் மூலம் கிராமப்புறங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். 150-க்கும் மேற்பட்டோர் ஆசிரமத்தில் பல்வேறு நிலைகளில் பணியில் உள்ளனர்.

ஆசிரமத்தின் பிரதான உற்பத்தி கதர் ஆடை. இதை சார்ந்து சுற்றுவட்டாரத்தில் ஏராளமான நெசவாளர்கள் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர். இதுபோல், பட்டுப்புடவை, கட்டில், மெத்தை, பீரோ, குளியல் சோப் போன்றவை உற்பத்தி செய்து, ஆசிரமத்திற்கு சொந்தமான விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படுகிறது. பொருள் உற்பத்தி மூலம் கிராமப்புற மக்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஏதாவது ஒரு வகையில் பயன்பெற்று வருகின்றனர்

நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளில் காந்தி ஆசிரமத் தில் உற்பத்தி செய்யப்படும் பொருட் களுக்கு வரி விதிக்கப்பட்டதில்லை.

எனினும், கடந்த ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்திய ஜிஎஸ்டி வரி தற்போது விதிக்கப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு 5 முதல் 18 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது. ஜிஎஸ்டியை சேர்த்து வாடிக்கையாளர்களுக்கு பொருள் விற்பனை செய்யப்படுகிறது.

இதனால், பொருட்களின் விலை அதிகமாகிறது. விலை உயர்வு காரணமாக விற்பனையும் பாதியாக குறைந்துள்ளது. இப்பிரச்சினையால் இங்குள்ள இரும்பு ஃபர்னிச்சர் தயாரிப்பு பிரிவு கடந்த ஓராண்டுக்கு முன் மூடப்பட்டது. அதில் பணிபுரிந்த தொழிலாளர்களும் வேலையிழந்துள்ளனர். இதற்கு தீர்வு காணும் வகையில் ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கும்படி மத்திய அரசிடம் முறையிட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.

மகாத்மா காந்தியின் 150-ம் ஆண்டு பிறந்த நாள் கொண் டாடும் நிலையில், அவரது சிந்தனையையொட்டி தொடங்கப் பட்ட காந்தி ஆசிரமத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

மியூசியமாக மாற்ற வேண்டும்

அதேவேளையில் மகாத்மா காந்தி, அவரது மனைவி கஸ்தூரிபாய் காந்தி, நேரு என பெருந்தலைவர்கள் ஆசிரமத்திற்கு வந்தபோது அவர்கள் எழுதிய குறிப்புகள் ஆசிரமத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதுபோல், ராஜாஜி ஆசிரமத்தில் தங்கிய சிறிய வீடு இன்றளவும் பாதுகாக்கப்படுகிறது. இங்கு காந்தி போன்றோர் ஆசிரமத்திற்கு வந்து சென்ற புகைப்படங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

காந்தி கொடியேற்றிய இடம் இன்றளவும் பராமரிக்கப்படுகிறது. எனவே, காந்தி ஆசிரமத்தை மியூசியமாக மாற்ற வேண்டும் என அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதன்மூலம் காந்தி, ராஜாஜி போன்றோரின் செயல்களை இந்த தலைமறையினர் அறிய இயலும். ஆசிரமத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் பலரும் அறியவும், இதன்மூலம் விற்பனை அதிகரிக்கவும் வாய்ப்பாக அமையும், என்றார்.

தமிழில் கையெழுத்திட்ட காந்தி

கடந்த 1934-ம் ஆண்டு மகாத்மா காந்தி, புதுப்பாளையம் ஆசிரமத்திற்கு வந்தபோது, அவர் கைப்பட எழுதிய குறிப்பின் கீழ் பாபு என தமிழில் கையெழுத்திட்டுள்ளார்.

இந்த ஆவணத்தை ஆசிரம நிர்வாகத்தினர் பாதுகாத்து வருகின்றனர். இந்திய அளவில் புதுப்பாளையத்தில் தான் முதன் முதலாக பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. இன்றளவும் புதுப்பாளையம் சுற்றுவட்டாரத்தில் மதுபானக் கடைகள் எதுவும் இல்லை, என காந்தி ஆசிரமத்தினர் தெரிவித்தனர்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close