[X] Close

வெள்ளத்தை சமாளிக்க தயாராக உள்ளதா நெல்லை? - முன்னெச்சரிக்கை பணிகளைத் தொடங்குவது எப்போது?


nellai-rain-report-article

திருநெல்வேலி பேட்டை ரகுமான்பேட்டை தெருவில் நேற்றுமுன்தினம் பெய்த மழையில் 2 அடிக்கு தேங்கியிருந்த தண்ணீர்.

  • kamadenu
  • Posted: 06 Oct, 2018 19:10 pm
  • அ+ அ-

திருநெல்வேலியில் அடுத்துவரும் சில நாட்களுக்கு பலத்த மழையை எதிர்பார்ப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கும் நிலையில், பெருவெள்ளம் வந்தால் மாநகரம் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறதா? என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் எழுந்திருக்கிறது.

திருநெல்வேலி, பாளையங்கோட்டை பகுதிகளில் நேற்று முன்தினம் ஒன்றரை மணிநேரம் பெய்த மழைக்கே மாநகர வீதிகளும், சாலைகளும் அல்லோகலப்பட்டன. தண்ணீர் வழிந்தோட வழியில்லாமல், தாழ்வான இடங்களில் குளம்போல் தேங்கியது. வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

தண்ணீர் வழிந்தோடும் கால்வாய்களைத் தூர்வாரி செப்பனிடாததாலும், ஆக்கிரமிப்புகளாலும் வெள்ளம் வழிந்தோட வழியில்லை. அரசு அலுவலகங்கள், பள்ளி வளாகங்கள், பேருந்து நிலையங்கள், குடியிருப்பு பகுதிகள் என்று பல இடங்களிலும் தண்ணீர் பெருமளவுக்கு தேங்கியுள்ளது. மாநகராட்சி அலுவலக வளாகமே குளமாகியுள்ளது.

பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் மழை நீர் தேங்குவது வாடிக்கை. கழிவுநீர் வழிந்தோட வழியின்றி, மைதானத்தின் சிறுவர் விளையாட்டு பூங்காவுக்குள் நுழைய முடியாத நிலை.

பேட்டையில் பல்வேறு தெருக்களில் 2 அடிக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. ரகுமான்பேட்டை தெருவில் ஓடை அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக அவசர கதியில் நடைபெற்று வருகிறது. நேற்றுமுன்தினம் பெய்த மழையில் ஓடைக்கு செல்லவேண்டிய தண்ணீர் தெருவில் தேங்கியது. இப்பகுதி மக்கள் கடும் அவதியுற்றனர்.

ஒரு மணி நேரம் பெய்த மழைக்கே மாநகரம் அல்லோகலப்பட்ட நிலையில், பல மணி நேரத்துக்கு மழை கொட்டினால் என்னவாகும் என்ற கேள்வி மாநகர மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. பருவமழைக்கு முன்னரே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமல் மாவட்ட, மாநகர நிர்வாகங்கள் இருப்பதாக தன்னார்வ அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன.

கால்வாய்கள் தூர்ந்தன

திருநெல்வேலியில் கோடகன்கால்வாய்,திருநெல்வேலி கால்வாய், பாளையங்கால்வாய் ஆகிய முக்கிய கால்வாய்கள், வடிகால் ஓடைகளில் குப்பைகள், கழிவுநீர் தேங்கியிருக்கிறது. கட்டுமான கழிவுகள், அமலை செடிகள், காட்டாமணக்கு செடிகள், முட்செடிகள், சீமைக்கருவேல மரங்கள் நிறைந்துள்ளன. இந்த கால்வாய்கள் மூலம் வெள்ளநீர் சரிவர வழிந்தோடுமா என்பது கேள்விக்குறி.

மாநகரில் நீர்நிலைகள் பலவும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன. ஓடைகள் பெரும்பாலும் தூர்ந்து கிடக்கின்றன. திருநெல்வேலி மாநகர தாமிரபரணி கரை முழுக்க ஆக்கிரமிப்பு கட்டுமானங்கள் இருக்கின்றன. இவற்றை வெள்ளம் சூழ வாய்ப்பு அதிகம்.

ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் நீர்நிலைகள், கால்வாய்கள், ஓடைகளை தூர்வாரி ஆழப்படுத்தும் பணி, 25 ஆண்டுகளுக்கு முன் வரை அந்தந்த பகுதி மக்களின் ஒத்துழைப்புடன் நடைபெற்றது. நாளடைவில் கோடை மராமத்து மறக்கப்பட்டுவிட்டது. அவ்வப்போது பெயரளவுக்கு தூர்வாரும் பணி நடைபெறுகிறது.

இதனால் பெருவெள்ள பாதிப்புகளை தவிர்க்க முடியாது என்பது விவசாய பிரதிநிதிகள் கருத்து.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close