[X] Close

இணையவழி தாக்குதல்களை தடுக்க தீவிர முயற்சி: தேசிய சைபர் பாதுகாப்பு அமைப்பு ஏடிஜி தகவல்


cyber-crime

  • kamadenu
  • Posted: 06 Oct, 2018 12:00 pm
  • அ+ அ-

உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் இணையவழி தாக்குதல்களைத் தடுக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேசிய சைபர் பாதுகாப்பு அமைப்பின் கூடுதல் டைரக்டர் ஜெனரல் (ஏடிஜி) இ.காளிராஜ் கூறினார்.

தேசிய சைபர் பாதுகாப்பு அமைப்பு சார்பில், கோவை அவிநாசிலிங்கம் மகளிர் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் தேசிய சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா, பல்கலை. துணைவேந்தர் பி.ஆர்.கிருஷ்ணகுமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. தேசிய சைபர் பாதுகாப்பு அமைப்பின் கூடுதல் டைரக்டர் ஜெனரல் இ.காளிராஜ், இந்த மையத்தைத் தொடங்கிவைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இணையவழி அச்சுறுத்தல்களில் இருந்து நாட்டைப் பாதுகாக்கும் நோக்குடன் தொடங்கப்பட்டது தேசிய சைபர் பாதுகாப்பு அமைப்பு. கல்லூரி, பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் இணையவழிக் குற்றங்கள் பெருமளவில் நிகழ்வதாக எழுந்த புகாரையடுத்து, முக்கியமான கல்வி நிறுவனங்களில் தேசிய சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தை அமைத்து வருகிறோம். நாடு முழுவதும் இதுபோல 60 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 10 மையங்கள் உள்ளன. மகளிர் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் தற்போது முதல்முறையாக இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், மாணவ, மாணவி கள் இணையவழி பிரச்சினைகளில் சிக்காமல் இருப்பதற்கான பயிற்சி, விழிப்புணர்வை மாணவ, மாணவிகளுக்கு அளிப்பதுடன், இணையவழி குற்றங்களைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.

நவீன தொழில்நுட்பங்கள், சமூகவலைதளங்கள் உள்ளிட்ட வற்றால், இணையவழிக் குற்றங் களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகின்றன. சமூகவலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல்கள் மட்டுமே உண்மையானவை என்று கருதும் மனநிலைக்கு பொதுமக்கள் தள்ளப்படுகின்றனர். இதனால் பல்வேறு வதந்திகள் பரவி, பல தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். தவறான தகவலை அல்லது கருத்தை மக்களிடம் பரப்பும் முயற்சியில் இணையவழி குற்றவாளிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதைத் தடுக்கும் வகையில், சமூகவலைதள கண்காணிப்புக் குழுவை (சோஷியல் மீடியா மானிட்டரிங் கமிட்டி) அமைப்பது அவசியமாகும்.

மத்திய, மாநில அரசுகள், பெரு நிறுவனங்கள், வங்கிகளின் இணையதளங்கள், ஏடிஎம் இயந்திரங்களை ஊடுருவி, தகவல்களைத் திருடுவது, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு இணையவழி மூலம் பாலியல் தொந்தரவு கொடுப்பது உள்ளிட்டவை பெருகி வருகின்றன. சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள ஹேக்கர்கள் இந்திய இணையதளங்களை ஊடுருவ தொடர்ந்து முயற்சிக்கின்றனர். எனினும், இவற்றைத் தடுக்க முழு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். உலகிலேயே இணையவழியில் பாதுகாப்பாக இருக்கும் நாடுகளில் இஸ்ரேல் முதலாவதாக திகழ்கிறது. இதில், இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது கவலைக்குரியது.

பாலியல் வீடியோக்களுக்கான சர்வர்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருப்பதால், அவற்றைத் தடுப்பதில் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களின் அலுவலகங்கள் வெளிநாடுகளில் இருப்பதால், அவற்றைக் கட்டுப் படுத்துவதில் சிரமங்கள் உள்ளன. எனினும், இவற்றைத் தடுப்பதிலும், கட்டுப்படுத்துவதிலும் மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

தகவல்கள் முற்றிலுமாக டிஜிட்டல் மயமாகிவரும் சூழலில், தகவல் திருட்டைத் தடுப்பதும் சிரமமானது என்றாலும், தகவல்களைப் பாதுகாப்பதில் முழுக் கவனம் செலுத்தி வருகிறோம். எனினும், சைபர் பாதுகாப்புக்கு ஒதுக்கப்படும் நிதி குறைவாக உள்ளது.

அதேபோல, சைபர் குற்றங்கள் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்படுவதும் குறைவாகவே உள்ளது. நிறைய காவல் நிலையங்களில் சைபர் க்ரைம் புகார்களை ஏற்காமல், அதற்கான தனிப்பிரிவில் புகார் அளிக்குமாறுகூறி அலைக்கழிப்பதாகவும் புகார்கள் எழுகின்றன. இந்த நிலை மாற வேண்டும். சைபர் க்ரைம் குற்றங்களால் பாதிக்கப்படுவோர், நிச்சயம் காவல் துறையில் புகார் செய்து, அதற்கான எஃப்.ஐ.ஆர். அல்லது சிஎஸ்ஆர்-ஐப் பெற வேண்டும். மேலும், சைபர் க்ரைம்கள் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுவதும் அவசியமாகும். சமூகவலைதளங்களையும், இணையதளத்தையும் தேவையின்றியும், தவறான விஷயங் களுக்காகவும் பயன்படுத்துவதை தவிர்த்தாலே, பெரும்பாலான குற்றங்களைக் குறைக்கலாம். இவ்வாறு காளிராஜ் கூறினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close